Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடுதலை 32... கைது 53...   தமிழர்களைப் பந்தாடும் ஆந்திரா!

 

ஆந்திர மாநில சிறையிலிருந்து 32 அப்பாவித் தமிழர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். அடுத்தடுத்து 53 பேரை உடனடியாக கைது செய்துள்ளது ஆந்திர போலீஸ்.


 ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்த தனிநெட்வோர்க் செயல்படுகிறது. செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திராவில் சிறப்பு அதிரடி படை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆந்திராவில் செம்மரங்களை வெட்ட வந்ததாகக்கூறி 20 தமிழர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றது ஆந்திர தனிப்படை போலீஸ். இதற்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பின. 


 இந்நிலையில் ஆந்திராவில் செம்மரங்களை வெட்ட வந்ததாக அம்மாநில போலீஸரால் அப்பாவித் தமிழர்கள் கைது செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாக உள்ளது.தமிழர்களின் சட்ட உதவிகளுக்காக தமிழக அரசு, அருள், ரியாஸ் என்ற இரண்டு அரசு வழக்கறிஞர்களை நியமித்தது. இவர்கள் மூலம் அப்பாவித் தமிழர்கள் ஆந்திர மாநில சிறைகளிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றனர். என்றாலும் வெளியில் வரும் தமிழர்களுக்கு இரண்டு மடங்கு தமிழர்களை மீண்டும் கைது செய்து சிறைசாலையை நிரப்பி வருவதாக குற்றச்சாட்டப்படுகிறது. 

 இதுகுறித்து அரசு வழக்கறிஞர் பி.அருள் கூறுகையில், "ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் உள்பட 32 பேரை ரேணிகுண்டா போலீஸார் செம்மரம் கடத்தியதாக கைது செய்தனர். கைதான தமிழர்கள் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கைதானவர்களின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தனர். அதன்பேரில் இந்த வழக்கை கையில் எடுத்த தமிழக அரசு, 110 நாட்களுக்குள் 32 தமிழர்களையும் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது. 


 இதற்கு முன்பு, 2 ஆந்திர வன அலுவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 288 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அடுத்து செம்மர வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் அம்பலசேரி பகுதியை சேர்ந்த 10 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸரால் கைது செய்யப்பட்டனர். அவர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இந்த ஆண்டு மட்டும் 330 அப்பாவித் தமிழர்கள் ஆந்திர சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளனர்"என்றார். 

32 தமிழர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 18 தமிழர்களை ஆந்திர மாநில போலீஸார் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளது. சமீபத்தில் 35 தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் உள்ளனர். 32 தமிழர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்தால் 53 பேரை கைது செய்து சிறையில் அடைக்கிறது ஆந்திர போலீஸ். 


 செம்மர கடத்தலில் ஆந்திராவில் கொடிகட்டி பறக்கும் கும்பல்கள் மீது ஆந்திர போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்கள் தப்பிக்க அப்பாவித் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதிய பிறகும் இந்த கைது படலம் தொடர்கிறது. இதில் திருப்பதிக்கு சாமி கும்பிடச் செல்லும் அப்பாவித் தமிழர்கள் கூட செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவது வேதனைக்குரியது. 

எஸ்.மகேஷ் 



 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ