Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மதன் நல்லவன்' சொல்கிறார் அவரது அம்மா

 மருத்துவ மாணவர் சேர்க்கை பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள மதன், எந்தவித குற்றமும் செய்யவில்லை என்று அவரது அம்மா தங்கம் தெரிவித்தார். 


 வேந்தர் மூவிஸ் மதன், கடந்த 21ம் தேதி திருப்பூரில் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு மதன், தொடர்பாக பல்வேறு செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்கள் குறித்த செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மதனின் தாயார் தங்கம், அவரது மனைவி சுமலதா, வழக்கறிஞ்ர் இன்பெஃன்ட் தினேஷ் ஆகியோர் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர். 


 "மதன், மாயமானவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினேன். பத்திரிகைகள் அளித்த ஆதரவு, நீதிமன்றத்தின் உத்தரவுகளால் மட்டுமே இன்று என்னுடைய மகன் மதன், உயிரோடு இருக்கிறார். மதன், கைதான பிறகு அவரை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இதற்கும், மதனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 


 எனவே உண்மையை எழுதுங்கள். பத்திரிகையால் மட்டுமே எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவை போலீஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் சார்பில் நீதிமன்றத்தில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. மதன், வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுதொடர்பாக எந்த தகவலும் சொல்ல முடியாது. இருப்பினும், மதனின் மனைவிகள் சண்டை, வர்ஷாவை திருமணம் செய்து விட்டார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு போன்ற தகவல்கள் எங்களுக்கு கடும் மனவேதனை அளிக்கிறது. எனவே, உங்களையும், நீதிமன்றத்தையும்தான் நம்பி இருக்கிறோம். மேலும் மதன் மீது எந்த குற்றமும் இல்லை" என்றார் தங்கம். 

 


 அடுத்து பேசிய மதனின் மனைவி சுமலதா, "திருப்பூரை சேர்ந்த வர்ஷா, என்னுடைய உறவினர். அவரை திருமணம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உண்மை இல்லை. நீதிமன்றத்தில் சரண் அடையவே மதன், வர்ஷாவின் உதவி கேட்டு திருப்பூர் வந்தார். அங்கிருந்து வழக்கறிஞர் இன்பெஃன்ட் தினேஷை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் மூலம் மதனை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர். எல்லோருக்கும் குடும்பம் உள்ளது. கீதாஞ்சலி யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார். 


 தொடர்ந்து வழக்கறிஞர் இன்பென்ஃட் தினேஷ் கூறுகையில், "சிறையில் மதனை சந்தித்து 2 மணி நேரம் பேசினேன். அப்போது மதன், முழு விவரத்தை என்னிடம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்திடம் கொடுத்த பண விவரத்தையும் தெரிவித்தார். திருச்சியில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் மருத்துவ கல்லூரி தொடங்க மதன், எடுத்த முயற்சிகள், அதற்கு அவர் செய்த பண விவரங்கள், அடுத்து தேர்தல் சமயத்தில் மதன் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார். பணம் கொடுத்ததற்கு வீடியோ ஆதாரமும் உள்ளது" என்றார். 

மதன், எந்த குற்றமும் செய்யவில்லை என்று தங்கம் தெரிவித்த போது, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு உள்ளதே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தங்கம், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் கொடுத்த வேலையை மதன் செய்தார் என்று கூறினார். 

எஸ்.மகேஷ் 

படம். ப.சரவணக்குமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ