Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கலைஞர் ஐயா நல்லா இருக்காங்களா..?’ - மும்பையில் நெகிழ்ந்த ரஜினி

'கபாலி' படத்துக்கு முன்பிருந்தே ரஜினி நடித்துக் கொண்டு இருக்கும திரைப்படம் '2.0' . இந்திய சினிமா உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்த '2.0' ஃபர்ஸ்ட் லுக் கடந்த 20-ம் தேதி வெளியானது . மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.

லைக்கா நிறுவனத்தில் நடித்துவரும் விஜய் ஆண்டனி, ஆர்யா, போன்ற தமிழ் பிரபலங்கள்  விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.  இயக்குனர் கவுரவ் டைரக்‌ஷனில் ஸ்டாலின் மகன் உதயநிதி நடிக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது அதனால் உதயநிதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. உதயநிதி '2.0' நிகழ்ச்சிக்கு சென்றால் அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் தனது  நண்பர் மகேஷ் பொய்யாமொழியையும் தங்கை கணவர் சபரீசனையும்  மும்பைக்கு அனுப்பி வைத்தார் உதயநிதி.

மு.க.ஸ்டாலினும், அன்பில் பொய்யாமொழியும் நெருங்கிய நண்பர்கள்.  உதயநிதியும், மகேஷ் பொய்யாமொழியும் கால்சட்டை பிராயத்தில் இருந்தே நெருக்கமான நண்பர்கள். திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வான மகேஷ் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது உதயநிதி வருகை புரிந்து மகேஷ் பேச்சை கேட்டு ரசித்தார். இப்போது மும்பையில் நடந்த '2.0' விழாவுக்கு மகேஷையும், சபரீசனையும் உதயநிதியே வழியனுப்பி வைத்தார்.

மும்பையின் பரபரப்பான ஷா பகுதியில்தான்  '2.0' ஃபர்ஸ்ட் லுக் விழா நடந்த யாஷ்ராஜ் ஸ்டுடியோ இருக்கிறது. அதற்கு அருகாமையில் இருக்கும் நவ் நட்சத்திர ஹோட்டலில்தான் ரஜினி, லதா, ஷங்கர். '2.0' படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜு மகாலிங்கம் ஆகியோர் தங்கினார்கள். அதே ஹோட்டலின் இன்னொரு பகுதியில் இருந்த அறையில் சபரீசனும், மகேஷும் தங்கினார்கள். '2.0' ஃபர்ஸ்ட்லுக் முடிந்ததும் நவ் ஹோட்டலில் பிரம்மாண்டமான பார்ட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார், சுபாஷ்கரன். அந்த ஃ பங்ஷனில் '2.0'பட யூனிட்தவிர சபரீசனையும், மகேஷையும் அழைத்து இருந்தனர்.

'2.0' பார்ட்டிக்கு முன்னதாக  சபரீசனை கண்டுகொண்ட ரஜினி  ஸ்டாலின் குறித்து விசாரித்து இருக்கிறார். அடுத்துமகேஷை பார்த்த ரஜினி ' ஹாய் ஹவ் ஆர் யூ இப்போ இருக்குற சிட்டிங் எம்.எல்.ஏ-விலேயே நீங்கதானே யங் எம்.எல்.ஏ?' என்று ரஜினி கேள்விகேட்க நெகிழ்ந்துபோன மகேஷ் 'எனைவிட சின்னவயசுள்ள எம்.எல்.ஏ-க்கல் எல்லாம் தி.மு.க-வுல இருக்காங்க சார்' என்று பதில் சொல்லி இருக்கிறார்.

'கலைஞர் அய்யாவுக்கு இடையில் உடம்பு சரியில்லாம போனதே இப்போ எப்படி இருக்கு?'  என்று ரஜினிகுசலம் விசாரிக்க ' தலைவர்  இப்போ நல்லா இருக்கார் சார்' என்று மகேஷ் சொல்லி இருக்கிறார். எல்லோரும் ரஜினியோடு போட்டோ எடுத்துக்கொள்ள முனைந்தனர். அப்போது 'கமான் வாங்க மகேஷ் போட்டோ எடுத்துக்கலாம்' என்று ரஜினி அழைக்க மகேஷ் திக்குமுக்காடி போய்விட்டார். அதன்பின் 'நான் சின்னவயசுல இருந்தே உங்களோட வெறிபிடித்த ரசிகன்சார்' என்று கண்கலங்கி ரஜினியிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டே இருந்தார், மகேஷ்.

- சத்யாபதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ