Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசின் அலட்சியத்தால் கட்டிடங்களாகும் சதுப்புநிலங்கள்...எச்சரித்த உயர்நீதிமன்றம்!

சதுப்புநிலங்கள்

நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள்... போன்றவற்றில் கட்டடங்கள் கட்டுவது மற்றும் ஆக்கிரமிப்பு செய்தல் போன்றவற்றை கடுமையாகக் கண்டித்து வருகிறது, உயர்நீதி மன்றம். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில்... "சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களில் கட்டுமானம் கட்டுவதோ அல்லது பத்திரப்பதிவு செய்வதோ கூடாது" என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது. தவிர," சதுப்புநிலங்கள் தொடர்பான எந்த ஆவணத்தையும் தனியாகவோ அல்லது வேறு சொத்துக்களுடன் சேர்த்தோ பதிவு செய்ய கூடாது. தமிழ்நாட்டில் 1990-ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சதுப்புநிலங்கள் குறித்த ஆவணங்களை 12 வாரங்களுக்குள் பத்திரப்பதிவுதுறை தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு 'சதுப்புநிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது' என அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று சென்னை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி-க்கு  உத்தரவிட்டுள்ளது, நீதிமன்றம்.



சென்னை, பள்ளிக்கரணையில் 66 ஏக்கர் பரப்பு சதுப்பு நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் 66 கோடி ரூபாய்க்கு  விற்பனை செய்ய சமீபத்தில் முயற்சி நடந்தது. இச்சம்பவம் வெளி வந்ததும் இது தொடர்பாக, காவல்துறை மூலம் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த லட்சுமணன் மற்றும் அழகிரி ஆகியோர், முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில்தான், இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, மேற்கண்ட உத்தரவினை வழங்கியுள்ளது, உயர்நீதி மன்றம்.

இது குறித்துப் பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், "சதுப்பு நிலங்கள் பொதுவாக அதிக ஆழம் இல்லாமல் ஒரே சீராக பரந்து விரிந்து காணப்படும். இயற்கையாகவே நீர் வளத்தைப் பெருக்கி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். சதுப்பு நிலங்கள் பெரும்பாலும் கடலோரத்தில்தான் இருக்கும். மழைக்காலங்களில் வெள்ளச்சேதத்தை தடுப்பதிலும், கடல்நீர் உள்ளே புகுவதை தடுப்பதிலும் சதுப்பு நிலத்துக்கு முக்கியப்பங்கு உண்டு. சென்னையை பொறுத்தமட்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் மிக முக்கியமானவை. இந்த பள்ளிக்கரணை சதுப்புநிலங்களில் பொதுவாக வெளிநாட்டு பறவைகள், நீர்வாழ்த்தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் என பல்லுயிர்ச்சூழல் இங்கு அதிகமாக இருக்கும். தற்போது அந்த பல்லுயிர்ச்சூழல் மறைந்து விட்டது. அடுக்கு மாடி குடியிருப்புக்களுக்காக சதுப்புநிலங்களில் சாலை அமைக்கும் பணிகளும் இங்குதான் நடைபெறுகிறது. இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமும் சதுப்புநிலங்களைப் பற்றிய தகவல்களை கணக்கெடுப்பதும் இல்லை. இந்த சதுப்புநிலக்காடுகள்தான் தற்போது கட்டிடங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறி வருகின்றன. இப்போது வழங்கப்படுள்ள உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். இதுவரை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்களை எப்படி வெளியேற்றப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. அந்த நிலங்களை ஆக்கிரமிக்க உதவிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றவர் நிறைவாக,
"இனிமேலாவது, அரசாங்கம் சதுப்பு நிலங்களை பற்றிய தகவல்களை ஒழுங்காகக் கணக்கில் கொண்டு வர வேண்டும். சதுப்பு நிலங்களில் உள்ள குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றிப் பாதுகாக்க முன் வர வேண்டும்" என்றார்.

ஆட்சிகள் பல மாறினாலும் காட்சி மாறாமல் பரிதாபமாக காட்சியளிக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள். உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகாவது இயல்பு நிலைக்கு திரும்புமா...


-துரை.நாகராஜன்.

படங்கள்: அ.அருணசுபா (மாணவப் பத்திரிக்கையாளர்).

எடிட்டர் சாய்ஸ்

MUST READ