Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இலாகா இல்லாத முதல்வரா ஜெயலலிதா?!' -ஸ்டாலின் கருத்தால் கொந்தளிக்கும் அ.தி.மு.க.

மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி என கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்துகள் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ' அரசியல் சட்டப்படி அங்கீகாரம் இல்லாத நிர்வாகம் திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது' எனக் கொந்தளித்தார் மு.க.ஸ்டாலின். 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் விவசாயப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாக கடந்த 22-ம் தேதி முன்னோடித் திட்டம் ஒன்றை முதலமைச்சர் அறிவித்தார். மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை, உழவு இயந்திரங்கள் வாடகை, பயிர்க் காப்பீட்டுத் தொகை ஆகியவை பயிர்க்கடன் தொகையில் வரவு வைக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார். இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக, ஜெயலலிதா உத்தரவிட்டார் என்று சொல்வது சரிதானா என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பைக் காட்டியிருந்தனர்.

அதிலும், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ' இன்று வரை மருத்துவமனையில் இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிர்வாக ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவோ இதுவரை எந்த மறு உத்தரவும் ஆளுநர் பிறப்பிக்கவில்லை. இப்படியிருக்க விவசாயிகள் தொடர்பான அரசின் முன்னோடி திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி அறிவித்தார்? அப்படி அறிவிக்கும் கோப்பு எந்த விதியின் கீழ் அவருக்கு அனுப்பப்பட்டது? சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர் அல்லது துறை அமைச்சர் எந்த அடிப்படையில் அப்படியொரு கோப்பை இலாகா இல்லாத முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தார்கள் என்ற நியாயமான அரசியல் சட்ட கேள்விகள் எழுகின்றன' எனக் கொந்தளிப்பைக் காட்டியிருந்தார். 

' எதிர்க்கட்சித் தலைவரின் கேள்வி நியாயமானதுதானே?' என அ.தி.மு.கவின் தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம். "அறியாமை, தெரியாமை, புரியாமையின் வெளிப்பாடாகத்தான் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையைப் பார்க்கிறோம். ' நிர்வாக நடைமுறைகளும் அரசியல் சட்டவிதிகளும் மீறப்பட்டுள்ளன' என்றெல்லாம் அவர் கூறுவது, அவருடைய மனக்குழப்பத்தையே காட்டுகிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டின் முதல்வராக, அரசியல் சட்டப்படியும் மக்களின் தீர்ப்புப் படியும் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும்தான் இருக்கிறார். அவருடைய பணிகளை அவருடைய விருப்பத்தின் பேரில் நிதியமைச்சர் கவனித்து வருகிறார். அந்தப் பணிகளை கவனிக்குமாறு கூறியதே முதல்வர்தான். அதேநேரம், தன்னுடைய பணிகளை எப்போது செய்ய வேண்டும்; எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கின்ற உரிமை, இன்றைக்கும் முதல்வரிடம் இருக்கிறது. அந்த உரிமையை அவர் யாருக்கும் பகிர்ந்தளிக்கவில்லை.

இலாகா இல்லாத முதல்வர் என்று அவரைச் சொல்வதே அபத்தம். அவடைய பணிகள் வேறு ஒருவருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இலாக்காக்கள் இன்னும் முதல்வரிடம்தான் இருக்கிறது. நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கூட்டிய ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில், எந்தவித சட்ட சிக்கலோ உண்மைக்கு மாறான தகவலோ இல்லை. தன் கடமையைத்தான் அமைச்சர் செய்திருக்கிறார். இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத விவசாயிகளுக்கான முன்னோடித் திட்டத்தை, முதலமைச்சர் அம்மா சட்டமன்றத்திலேயே அறிவித்திருந்தார். அதையொட்டி, அமைச்சருக்கு முதல்வர் கட்டளையிட்டிருக்கிறார். அதை அமைச்சர் நிறைவேற்றியிருக்கிறார். இதில் விதிமீறல் எங்கே வந்தது? இன்றைக்கும் தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணைப்படிதான் இயங்குகிறது. அவருடைய அறிவுரையைப் பெற்றுத்தான் அமைச்சர்கள் இயங்குகின்றனர். காழ்ப்பு உணர்ச்சி கண்ணாடியை மாட்டிக் கொண்டு அரசு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு நிர்வாகத் தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்" என்றார் நிதானமாக. 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ