Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொன்னம்மாளை மறந்ததா காங்கிரஸ் கட்சி?

திண்டுக்கல் : காங்கிரஸ் கட்சி நீண்ட கால உறுப்பினராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த பொன்னம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த ஆண்டு உடல்நிலைக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அப்போது ராகுல்காந்தி, போன் மூலமாக பொன்னம்மாளை தொடர்புக்கொண்டு உடல்நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சியினர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி உடல்நலம் குன்றி பொன்னம்மாள் இய்ற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து அவரது பேத்தி ஜான்சிராணிக்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பதவியைக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி.  இந்நிலையில், நேற்று அவரது முதலாம் ஆண்டு நினைவுநாள் அவரது சொந்த கிராமமான அழகம்பட்டியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. 35 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பொன்னம்மாள். இளம் வயதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். தமிழகத்தில் அரசியல் கட்சித்தலைவர்களே பொன்னம்மாள் அக்கா என்றே இவரை அழைப்பார்கள்.

இவர் மருத்துவமனையில் இருந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். ராகுல் காந்தி போனில் நலம் விசாரித்தார். இவர் மறைந்த ஓராண்டில் காங்கிரஸ் கட்சியினர் மறந்து விட்டார்கள். முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் திலகபாமா மற்றும் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பா.ம.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் தலைவியும், பொன்னம்மாளின் பேத்தியுமான ஜான்சிராணியிடம் கேட்டபோது, ‘‘நாங்க எல்லோரும் சென்னையில இருக்கோம். சத்தியமூர்த்திபவன்ல பாட்டி போட்டோ வெச்சு, தலைவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துக்கிட்டாங்க.’’ என்றார்.

- ஆர்.குமரேசன்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ