Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் பார்வை மாற வேண்டும்!” - கார்த்திக் சிதம்பரம்

இலங்கை

காங்கிரஸ் கட்சி பழமையை இனியும் பேசிக்கொண்டு இருக்காமல் எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்தால் மட்டுமே கட்சியைப் பலப்படுத்த முடியும். இலங்கை விவகாரத்தை ராஜீவ் கொலையை வைத்தே நாம் அணுகி வருகிறோம். ஆனால், இப்போதைய இளைஞர் சமூகம் இலங்கைப் பிரச்சனையை 2009-ல் நடைபெற்ற சம்பவத்தை வைத்தே பார்க்கிறது. எனவே இலங்கைப் பிரச்னையிலும் விடுதலைப் புலிகள் பிரச்னையிலும்  காங்கிரஸ் கட்சியின் பார்வை மாறவேண்டும்” என அதிரடியாகப் பேசிப் புயலைக் கிளப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான கார்த்திக் சிதம்பரம். 

காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் துணிச்சலாக இப்படிப் பேசியுள்ளார் கார்த்திக் சிதம்பரம்.

ராஜீவ் படுகொலை நடைபெற்று 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்தத் துயரச் சம்பவத்தை காங்கிரஸ் கட்சியினர் இன்றுவரை மறக்காமல், தங்களுடைய எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார்கள். 2009 -ம் ஆண்டு இலங்கையில், நடைபெற்ற போரினை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஆனால், அப்போதும் காங்கி்ரஸ் கட்சி அமைதி காத்துதான் வந்தது. ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  வேண்டும் என்பதில் இன்று வரை விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரே இவ்வாறு பேசி இருப்பது சர்ச்சையாக எழுந்துள்ளது. இது குறித்து கார்த்திக் சிதம்பரத்திடம் கேட்டபோது, “ஜனநாயக ரீதியில் எனது கருத்தை தெளிவாகப் பதிவு செய்தேன். இன்றைய உலகம் குறைவான விஷயங்களை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் சமூகமாக ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இலங்கைத் தமிழர் பார்வை என்பது ராஜீவ் காந்தி கொலையை மையமாக வைத்து மட்டுமே இன்று வரை உள்ளது. அந்த கொலை மிகக்கொடூரமானது. என்னால் இன்று வரை அதை மறக்க முடியாது, அந்த கொலையாளிகளையும் மன்னிக்க முடியாது. அதை காங்கிரஸ்காரர்களும் மறக்க முடியாது. ஆனால், இன்று உள்ள இளைஞர் சமுதாயம் இலங்கைப் பிரச்னையை ராஜீவ் காந்தி கொலையை மையமாக வைத்துப் பார்ப்பது கிடையாது. இப்போது உள்ள தலைமுறை 2009-ல் நடைபெற்ற போரில், விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது சாதாரணப் பொதுமக்களும் கொல்லப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக எளிதாக அறிந்துள்ளார்கள். எனவே அவர்கள் அதை வைத்துத்தான் இலங்கைப் பிரச்னையைப் பார்க்கிறார்கள். நம்முடைய பார்வையிலேயே சமூகத்தைப் பார்க்கக் கூடாது. சமூகம் எப்படி ஒரு பிரச்னையைப் பார்க்கிறதோ அதைஒட்டித்தான் நாமும் பார்க்கவேண்டும். 

 

 

ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் என்பதற்காக அவர்களோடு இப்போது உறவு வைத்துக்கொள்ளாமல், உள்ளோமா? எனவே காலம் மாற மாற நமது பார்வையும் மாறவேண்டும். போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்குள்ள மக்களுக்கான முழு சுதந்திரம், முழு வளர்ச்சி மற்றும் அந்த மக்களின் பழைய காயங்களை ஆற்றுவதற்கான நடைமுறைகளைக் கையாளுவதைப் பற்றித்தான் இனி பேசவேண்டும்'' என்கிறார்.

-அ.சையது அபுதாஹிர்
படம்: பா.காளிமுத்து

எடிட்டர் சாய்ஸ்

MUST READ