Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'துணைவேந்தர்களைக் காப்பாரா ஆளுநர்?'  -அதிர வைத்த அமைச்சர்கள்  

பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்கள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ' பல்கலைக்கழகத்தின் பெருமையைக் குலைக்கும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன" எனக் கொந்தளிக்கிறார் துணைவேந்தர் கணபதி. 

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இவற்றில் 64 பணியிடங்கள் பல்கலைக்கழகத்திலும் 12 இடங்கள் உறுப்புக் கல்லூரிகளிலும் நிரப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நேர்காணல் கடந்த மாதம் 26-ம் தேதி நடந்தது. இதில், பேராசிரியர் பணிக்கு 45 லட்ச ரூபாய் விலை போனதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் நேரடி விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. " பேராசிரியர், இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கோரிக்கை. இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக் கமிட்டியில், ஆளுநர் பிரதிநிதியாக கோவை, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நியமிக்கப்பட்டார். சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு துணைவேந்தர் மணிமேகலை தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் மீதும் சில புகார்கள் உள்ளன. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து இரண்டு அமைச்சர்கள் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களை மட்டுமே நியமனம் செய்துள்ளனர். இதுகுறித்தெல்லாம் பல்கலைக்கழக நிர்வாகம் கவலைப்படவில்லை" என்கிறார் பேராசிரியர் ஒருவர். 

" தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் அரசியல் அழுத்தத்தின்படியே செயல்படுகின்றனர். ஆளுநர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளும் உயர் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளும் துணைவேந்தர்களை தங்கள் விருப்பப்படி ஆட்டுவிக்கின்றனர்" என வருத்தத்தோடு நம்மிடம் பேசிய முன்னாள் துணைவேந்தர் ஒருவர், "பல்கலைக்கழக நிதிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வைப்பது, சம்பந்தமில்லாத திட்டங்களைக் கொண்டு வரச் சொல்வது, பராமரிப்பு என்ற பேரில் பல்கலைக்கழக நிதியைத் தவறாகப் பயன்படுத்தச் சொல்வது என பல வகைகளில் மாணவர்களின் பணம் கொள்ளை போகிறது. அண்மையில் கைது செய்யப்பட்ட கோவை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், பகிரங்கமாக ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்.

கடந்த தி.மு.க ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியோடு மோதல் போக்கில் ஈடுபட்டார். இதனால், பணியிடை நீக்கம் உள்பட பல தண்டனைகளுக்கு ஆளானார். ' பணம் கொடுத்துவிட்டுத்தான் துணைவேந்தர் ஆனேன்' என அவர் பகிரங்கமாகவே பேட்டி அளித்தார். அவரைக் கைது செய்ததன் மூலம் உயர் கல்வித்துறையில் ஊழல் குறைந்துவிட்டதா எனவும் கேள்வி எழுகிறது. ஆட்சி மாறும்போதெல்லாம் பணியிடங்களுக்கான ஊழலின் அளவும் அதிகரிக்கிறது. பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் நேர்காணல் உள்பட அனைத்தும் வெளிப்படையாகவே நடந்தது. ஆனால், யார் தேர்வு செய்யப்பட்டார்களோ அவர்களிடம் இருந்து பணத்தைக் கறந்துவிட்டார்கள். துணைவேந்தர் கணபதி மீது, இதுவரையில் எந்தப் புகார்களும் இல்லை. அவரை சிலர் ஆட்டுவிக்கிறார்கள். வேறுவழியில்லாமல் அவரும் துணை போகிறார். ஆளுநர் தலையிட்டால் மட்டுமே, பல்கலைக்கழக நிர்வாகம் சீர்படும்" என ஆதங்கப்பட்டார். 

'அமைச்சர் அழைத்து கடுமையாக விசாரித்தார் என்பது உண்மையா' என்ற கேள்வியை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியிடம் கேட்டோம். " இப்படியொரு தகவல் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை, சிண்டிகேட்டில் வைத்து ஒப்புதல் பெற்றுவிட்டோம். பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில், சிண்டிகேட் என்பதுதான் மிக உயர்ந்தது. பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆணையும் வழங்கிவிட்டோம். இந்தநேரத்தில், அமைச்சர் நேரடியாக விசாரித்தார் என்று வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. இதுதொடர்பாக, அமைச்சரை நான் சந்தித்துப் பேசவில்லை" என்றார். 

- ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ