Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இதுவா தரமான தார் சாலைகள்?!'  -ஓ.பி.எஸ்ஸை அதிர வைத்த எம்.எல்.ஏக்கள் 

 

 

மிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள். ' ஒரு மழைக்குக்கூட இங்குள்ள தார் சாலைகள் தாக்குப் பிடிப்பதில்லை. கேரளாவில் இதுபோன்ற நிலைமை இல்லை' என ஓ.பி.எஸ்ஸை அதிர வைத்துள்ளனர். 

அ.தி.மு.க மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி நிதிகள் ஒதுக்கப்படவில்லை. வழக்கமாக, பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற பிறகு, நிதி ஒதுக்கீட்டுப் பணிகள் நடக்கும். மூன்று தொகுதி தேர்தல்களில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுவந்ததால், தொகுதி நிதி ஒன்று இருப்பதையே மறந்துவிட்டார்கள். இதுகுறித்து நினைவுபடுத்துவதற்காக, நேற்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கொறடா விஜயதரணி உள்பட ஆறு எம்.எல்.ஏக்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் அபுபக்கர் எம்.எல்.ஏவும் தலைமைச் செயலகம் சென்றனர். சபாநாயகர் தனபால் நேற்று வராததால், சட்டசபைச் செயலர் ஜமாலுதீனிடம் மனு கொடுத்தனர். அங்கிருந்து 12 மணியளவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறைக்குச் சென்றனர். சோகம் ததும்பிய முகத்தோடு அவர்களை வரவேற்றார் ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வரிகளில் மட்டுமே விடையளித்தார். பெரிதாக எந்த விவாதத்திற்கும் பதில் அளிக்கவில்லை. ' இவ்வளவு சோகம் ஏன்?' என எம்.எல்.ஏக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 

 

"அரசு விழாக்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் என்ற முறையில் எங்களையும் அழைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அதை நிதியமைச்சர் ஏற்றுக் கொண்டார். எம்.எல்.ஏக்கள் நிதியை ஒதுக்கீடு செய்யாததால், தொகுதிப் பிரச்னைகள் முடங்கியுள்ளன. அவற்றை வலியுறுத்துவதற்காகவே, ஓ.பி.எஸ்ஸை சந்தித்தோம்" என நம்மிடம் விவரித்தார் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி. தொடர்ந்து நம்மிடம்,

 

" கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 100 சதவீதம் என்னுடைய தொகுதி நிதியைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதனால் ஓரளவுக்குத் தொகுதிப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நேற்று எங்களுடன் வந்த எம்.எல்.ஏக்களும், ' தொகுதிகளில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சாலைகளுக்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அதற்கேற்ற நிதி இன்னமும் வந்து சேரவில்லை. பல தொகுதிகளில் சாலைப் பணிகள் முடங்கியுள்ளன. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். ' படிப்படியாக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் உங்கள் பிரச்னை தீரும்' என்றார் நிதியமைச்சர். என்னுடைய தரப்பில் இருந்து அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைத்தேன். 

' கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒரு வருடம்கூட, சாலைகள் தாங்குவதில்லை. ஒரு மழை பெய்தால்கூட, சாலைகள் மிகவும் பழுதடைந்துவிடுகின்றன. குறிப்பாக, விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் பகுதி மக்கள் தரமான தார் சாலைகள் இல்லாததால், துன்பத்துக்கு ஆளாகின்றனர். ஒரு சாலை சீரமைக்கப்பட்டால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தாக்குப் பிடிக்க வேண்டும். அதிகாரிகளும், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிறகே, சாலை மறு சீரமைப்பு செய்வதற்காக வருகின்றனர். தொகுதி மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களும், சாலை சீரமைப்பு குறித்தே வருகின்றன. இந்த விவகாரத்தில் நீங்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். கேரளாவில் இருப்பதுபோல, ரப்பர் கலந்த அடர்த்தி அதிகமான தார் சாலைகள் அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

இதற்கான செலவுகள் சற்று அதிகமாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் இந்த சாலைகள் தாக்குப் பிடிக்கும். கேரளாவில் இந்த சாலைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டிலும் இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என விவரித்தேன். அவரும், ' மழை அதிகமாக பெய்வதால், சாலைகள் தாக்குப் பிடிப்பதில்லை என்பதற்காக இப்படிச் சொல்கிறீர்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசுகிறேன்' என உறுதி அளித்தார். தொகுதி நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் வெளியில் வந்தோம். தமிழ்நாடு முழுக்கவே ரப்பர் கலந்த சாலைகள் அமைக்கப்பட்டால், மக்கள் மத்தியில் மிகுந்த நிம்மதி ஏற்படும். விபத்துகளும் பெருமளவு தடுக்கப்படும்" என்றார் நம்பிக்கையோடு. 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ