Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என்னைப் பாராட்டிய கலைஞருக்கு நன்றி!'  -கனிமொழியிடம் நெகிழ்ந்த மோடி

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உரை ஒருபக்கம் அனல் கொட்டினாலும், மறுபுறம் மாநிலக் கட்சித் தலைவர்கள் குறித்து நலம் விசாரித்திருக்கிறார் பிரதமர் மோடி. ' உங்கள் தந்தையின் ஒவ்வொரு அறிக்கைகளையும் நான் பார்த்து வருகிறேன்' என தி.மு.க எம்.பி கனிமொழியிடம் பேசியிருக்கிறார் பிரதமர். 

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவணிகர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக, மாநிலக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று தி.மு.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையிலும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையாக சீறினார். ' அரசின் அறிவிப்பு சட்டரீதியான கொள்ளை' எனவும் அதிர வைத்தார். இப்படி நடக்கலாம் என்பதை அறிந்தே, அவைக்கு வந்திருந்தார் பிரதமர். முன்னதாக, அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணனிடம் பேசிய மோடி, ' ஜெயலலிதா போர்க்குணம் மிக்க தலைவர்' எனக் குறிப்பிட்டார்.

அதேபோல், நாடாளுமன்றத்தில் கனிமொழியிடம் பேசிய பிரதமர் மோடி, ' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டபோது, உங்கள் தந்தை என்னைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். தினமும் அவர் வெளியிடும் அறிக்கைகளை கவனித்துக் கொண்டு வருகிறேன். இப்போது எப்படி இருக்கிறார்? உடல்நிலை தேறிவிட்டாரா?' என ஆர்வத்துடன் விசாரித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத கனிமொழி, ' மிக்க நன்றி. முன்பைவிட இப்போது உடல்நிலை தேறிவிட்டார். இன்னும் ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு வந்துவிடுவார்' எனக் குறிப்பிட்டார். மாநிலக் கட்சித் தலைவர்களின் மீதான மோடியின் அணுகுமுறையை வித்தியாசமாக கவனிக்கிறார்கள் பா.ஜ.கவினர். 

" ஒவ்வொரு மாநிலத்திலும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டு வருகிறார் பிரதமர். அதற்கேற்ப, பா.ஜ.க மேலிடம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அடுத்துவரக் கூடிய தேர்தலுக்கு அனைத்துக் கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறார். ஆட்சியில் இருந்தபோதே தி.மு.க மீது சி.பி.ஐ நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டது. இதனாலேயே அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கதவை மூடியது தி.மு.க. ஆனால், பா.ஜ.க மேலிடமோ மாநிலக் கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மத்திய அரசின் திட்டங்களில் விருப்பத்தோடு இணையும் மாநிலக் கட்சிகளை அரவணைக்கிறார்.

திட்டத்தினால் ஏற்படும் சிரமங்களை எடுத்துச் சொன்னால், அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து வருகிறார். பிரதமரைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் மட்டுமே பிரதான எதிரி என எண்ணுகிறார். முதல்வர் ஜெயலலிதாவோடு நட்பில் இருந்தாலும், தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வருவதற்கு பிரதமர் தயாராக இல்லை. அதனால்தான் இன்றளவும் அப்போலோவுக்கு வந்து முதல்வரை சந்திக்கவில்லை. மாநிலக் கட்சிகளின் செல்வாக்கை உணர்ந்து, ஆதரவான தோற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என மோடி நினைக்கிறார். அதன் எதிரொலியாகத்தான் மாற்றுக் கட்சித் தலைவர்களைத் தேடிப் போய் பேசுகிறார்" என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ