Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க. வில் இருந்தாலும்... 'மு.க.ஸ்டாலினிடம் கதறிய விவசாயி!"

மண்ணுலகில் அனைவருக்கும் உணவு படைக்கும் கடவுள் என்று போற்றப்படும் விவசாயிகள் வறட்சி மற்றும் கடன் பிரச்னைகளால் தொடர்ந்து தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள், நம் பண்பாட்டு பாரம்பரிய விவசாய தொழிலாளர்கள்.

வறட்சி மற்றும் கடன் சுமை காரணமாக, மீளா துயரத்திற்கு ஆளாகும் விவசாயிகள் செய்வதரியாது வாழ்வின் விளிம்பிற்குச் சென்று தன் துயரம் தன்னுடனே போகட்டும் என்று, தன் உயிரை பலிகொடுத்து, இவ்வுலகிற்கு விடை கொடுப்பதாக நினைத்து, வினாக்களை எழுப்பிவிட்டுச் செல்கிறார்கள்.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட, வானம் பார்த்த பூமியாக நதியற்று இருக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களே, எப்போதும் போல, இந்த ஆண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்கள் முதல் தற்போது வரை இதே நிலை நீடித்து நிலைப்பதால், ஒரு கட்டத்தில் சகிப்புத்தன்மையின் உச்சத்துக்கே சென்ற விவசாயிகள் தன்னை தானே தண்டிப்பதாய் நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்படி இந்த ஆண்டும் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 14 விவசாயிகள், விவசாயத் தொழிலை காப்பாற்றத் தவறிய அரசாங்கத்தைத் தண்டிக்க முடியாமல், தன்னைத் தானே தண்டித்து உயிரை மாயத்துக்கெண்ட அவலம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.

வாழ்வின் விழும்பு நிலையில் வசிக்கும் விவசாயிகளுக்குக் கடந்த காலங்களில் ஒன்றுமே செய்யாத மத்திய மாநில அரசுகள், தற்கொலை செய்துகொண்ட விவசாய குடும்பத்திற்குக்கூட இதுவரை எந்த விதமான உதவியோ, நிவாரணமோ வழங்கவில்லை என்று விவசாயிகள் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்..

போதாக்குறைக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு பல சாக்குப்போக்கு சொல்லி உச்ச நீதிமன்ற உத்தரவை முடக்கி வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சித்த அவலமும் அரங்கேறியது. மேலும், காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, தமிழகத்திற்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், காவிரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறப்புக்கு எதிராகத் திருத்த மனு தாக்கல் செய்யக் கர்நாடக அரசு இன்று முடிவு செய்து, தமிழக விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் மேலும் நொந்துபோயி உள்ளார்கள்.

காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து வருவதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் குழுவை மாநில அரசு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்திய வருகின்றனர். ஆனால், இதுவரை தமிழகத்தில் 14 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அரசு சார்பில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ இதுவரை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்தவிதமான ஆறுதலோ உதவித்தொகையோ வழங்க முன்வரவில்லை.

இந்நிலையில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று ஒரே நாளில் 11 விவசாயிகளின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், திமுக சார்பாக ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கினார். மேலும் உள்ள 3 குடும்பத்தினரை நாளை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மு.க.ஸ்டாலினின் இந்த திடீர் பயணம் அந்தந்த திமுக மாவட்ட பொருப்பாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

வேதாரணியம் அடுத்த பிரிஞ்சிமூலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தை சந்தித்து, மு.க.ஸ்டாலின் நிதி வழங்கும்போது, தற்கொலை செய்துகொண்ட முருகையனின் தம்பி ரவி, மு.க.ஸ்டாலின் கையைப் பற்றிக்கொண்டு, "நான் அதிமுகவில் காலம் காலமாக இருந்து வருகிறேன். பாதிக்கப்பட்ட என் குடும்பத்திற்கே என் கட்சியினர் எதுவும் செய்யாத நிலையில், எதிர் கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு ஆறுதலும், நிதி உதவியும் செய்வது வருத்தத்திலும், மகிழ்ச்சி அளிக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அதிமுக விஐபிக்கள் பலரும் ஓட்டு கேட்டு வந்தார்களே தவிர, இறந்த விவசாயிகளின் குடும்பங்களை இங்கு வந்து என்னாச்சுனுகூட பார்க்கவில்லை" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

விவசாயிகளின் தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகள் இதுவரை எதுவும் செய்யாதது சர்ச்சையாக இருந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்தப் பயணம் விவசாயிகளுக்கு ஒரு விதத்தில் ஆறுதல் அளித்துள்ளதாக விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.

- ரா.அருள் வளன் அரசு 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ