Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காசு கொடுத்து, போஸ் கொடுப்பது மலிவான அரசியல்... ஸ்டாலின் உதவியை புறக்கணித்த விவசாயி குடும்பம் !

கரூர் : "விவசாயிகள் மீது யாருக்கும் அக்கறை இல்லை. விவசாயிக்கு வாழ்வாதாரத்தை செஞ்சு தராம, கஷ்டத்துல துடிச்சு இறந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து காசு கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கிறது மலிவான அரசியல். இது விவசாயிகளை இன்னும் காயப்படுத்தும். அதனால தான் வேண்டாம்னு சொல்லிட்டோம்," எனச்சொல்லி ஸ்டாலின் கொடுக்க இருந்த நிதியுதவியை பெறாமல் கரூர் விவசாயி குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர்.

ரசு எதையெல்லாம் செய்ய தவறியதோ, அதை அறிந்து, அதை செய்து, கவனத்தை தன்னை திருப்பி வருகிறார் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின். இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'கருகும் பயிர்களால் இறந்த விவசாயிகளின் குடும்பத்தை அரசு துளியும் கண்டுகொள்ளவில்லை. இழப்பீடு கூட வழங்கவில்லை' என்பதை பிரச்சாரமாக வைத்தவர், தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட, இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து, நிதியுதவியும் செய்து வருகிறார்.

இறந்த 14 விவசாய குடும்பங்களுக்கு குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை தருவதாக அறிவித்தவர், ஒவ்வொரு விவசாயி வீட்டுக்கும் நேரில் சென்று உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேற்று விசிட் அடித்த ஸ்டாலின் 11 விவசாயிகளின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்தார்.

அதன்படி இன்று காலை கரூர் மாவட்டம்,குளித்தலை ஒன்றியத்தில் உள்ள மேலவதியம் கிராமத்தில் நட்ட பயிர்களை காப்பாற்ற முடியாததால் அதிர்ச்சியில் இறந்து போன விவசாயி சங்கப்பிள்ளை வீட்டுக்கு போக திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் ஈரோடு சென்று விவசாயிகளை சந்திப்பது திட்டம். ஆனால் விவசாயி சங்கப்பிள்ளை வீட்டுக்கு செல்லாமல் நேராக ஈரோடு சென்றார் ஸ்டாலின்.

ஏன் சங்கப்பிள்ளை வீட்டுக்கு செல்லவில்லை என விசாரித்தோம். ஸ்டாலின் தங்கள் வீட்டுக்கு வந்து நிதியுதவி கொடுப்பதை சங்கப்பிள்ளை குடும்பத்தினர் விரும்பவில்லை என்பதால் ஸ்டாலின் செல்லவில்லை என்றார்கள். இதில் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட... சங்கப்பிள்ளை வீட்டுக்கே சென்று விசாரித்தோம். சங்கப்பிள்ளையின் இளைய மகன் கண்ணனிடம் பேசினோம்.

 "இந்த வருஷம் காவிரியில் சரியா தண்ணீர் வராததால், ஊர்ல பாதி பேர் விவசாயம் பண்ணலை. அதனால்,நானும் அப்படி வயலை சும்மா போட்டுறலாம்னு சொன்னேன். அதக் கேட்காம, எங்கப்பா கடனை வாங்கி மூன்றரை ஏக்கர் நிலத்துல நெல்லும், மூன்றரை ஏக்கர் நிலத்துல வாழையும் போட்டார். எங்கூருக்கு காவிரியில் இருந்து பிரிஞ்சு வரும் லாலாபேட்டை பிரிவு வாய்க்காலில் பத்து நாள் மட்டுமே தண்ணீர் வந்துச்சு. அப்புறம் வறண்டு போச்சு.

இதனால்,வாழையும்,நெல்லும் கருக ஆரம்பிச்சது. ஏற்கனவே கடன் வாங்கிதான் போர்வெல் போட்டார் அப்பா. அதுலயும்,தண்ணி வரலை. மொத்தமா 12 லட்ச ரூபா கடன் இருந்துச்சு. 'குடும்ப பேச்சை கேட்காம இப்படி கடனை வாங்கி வீணாக்கிட்டோமே'ன்னு கடந்த இருபது நாளா அவர் மனசுக்குள்ள மருகிகிட்டே இருந்திருக்கார். வீட்டுக்கும் சரியா வர்றதில்லை. சரியா சாப்பிடாம, தூங்காம அல்லாடிகிட்டு இருந்தார். அன்னைக்கும் வயலுக்கு போய் சோகமா திரும்பியவர். 'எல்லாம் நாசமா போச்சு. எப்படி 12 லட்ச ரூபா கடனை அடைப்பேன்'ன்னு நெஞ்சை புடிச்சுகிட்டு கீழ சரிஞ்சுட்டார்," என்றார்.

உங்களுக்கு நிதியுதவி கொடுக்க வந்த தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினை வர வேண்டாம்னு சொல்லீட்டங்களாமே? என கேட்டோம். இறந்த விவசாயி சங்கப்பிள்ளையின் மனைவியான சத்தியபாமா நம்மிடம் பேசினார்.  "எங்க வீட்டு ஆலமரம் மாதிரி இருந்த என் கணவரே போயிட்டார். ஸ்டாலின் கொடுக்கும் காசு எதுக்குன்னுதான் அவரை வர வேண்டாம்னு சொல்லிட்டோம். என் கணவர் சாவை ஸ்டாலினை வரவச்சு அரசியலாக்க விரும்பலை.

உண்மையில் விவசாயிகள் மீது யாருக்கும் அக்கறை இல்லை. விவசாயிக்கு வாழ்வாதாரத்தை செஞ்சு தராம, கஷ்டத்துல துடிச்சு இறந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து காசு கொடுத்து, பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கிறது மலிவான அரசியல். இது விவசாயிகளை இன்னும் காயப்படுத்தும். அதனால தான் வேண்டாம்னு சொல்லிட்டோம். வேற எந்த காரணமும் இல்லை" என்றார்.

கரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தரப்பில் பேசினோம். "அவங்க ஊருக்கு போக சாலை வசதி சரியில்லை. அதனால், தளபதி பயண நேரத்தில் சிக்கல் ஏற்படும் போல தெரிந்தது. அதனால்,தளபதி அந்த விவசாயி வீட்டிற்கு போகவில்லை. மத்தப்படி,நீங்க சொல்ற எந்த காரணமும் இல்லை" என்றார்.

- துரை.வேம்பையன்

படங்கள் : என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ