Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடிக்கு வைகோ திடீர் ஆதரவு... மக்கள் நலக்கூட்டணியில் மீண்டும் குழப்பம் !

கோவை : 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, போராட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், செல்லாது அறிவிப்பை வரவேற்றுள்ளார் வைகோ. இதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களையும் அவர் விமர்சித்துள்ளார்.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளன. சாமானிய மக்களை இந்த அறிவிப்பு வெகுவாக பாதித்து வருவதால், இதை திரும்பப் பெற வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தவிர முக்கிய கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ஏற்கவில்லை. இதை எதிர்த்து போராட்டங்களை அறிவித்தும், நடத்தியும் வருகின்றன. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரூபாய் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை வரவேற்பதாகவும், இதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, "நாடெங்கும் பெரிய அளவில் விவாதிக்கப்படும்  500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ம.தி.மு.க. வரவேற்கிறது . மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு அரசியல்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது . ஆனால் இதற்கான போரட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள்நோட்டுகளை மாற்றி விட முடியாதபடி பிரதமரின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அந்த சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாக மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதை தான் நான் எதிர்கிறேன் . இந்த நடவடிக்கை அடிதட்டு மக்கள் உள்ளிட்ட  பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. அதனால் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை ம.தி.மு.க. வரவேற்கிறது," என்றார்.

மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில், மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் மோடியின் செல்லாது அறிவிப்பை எதிர்க்கும் நிலையில், வைகோ திடீர் ஆதரவு கொடுத்ததோடு, செல்லாது அறிவிப்புக்கு எதிராக இடதுசாரிகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு எதிராக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணியில் பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், இந்த முரண்பாடு இன்னுமொரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- சே.சின்னதுரை

எடிட்டர் சாய்ஸ்

MUST READ