Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் மோதி மேலும் ஒரு யானை பலி! தொடரும் பரிதாபம்

கோவை : கோவை அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற யானை மீது  ரயில் மோதியதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. அடுத்தடுத்து யானைகள் ரயில் மோதி இறக்கும் சம்பவங்கள் தொடர்வதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக - கேரளாவையொட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனத்தையொட்டி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேற முயலும் யானைகள் ரயில் மோதி இறப்பது என்பது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை 7 மணியளவில் பாலக்காட்டிலிருந்து வாளையாறு, மதுக்கரை வழியாக கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் ஒன்று, யானை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. வாளையாறு வனப்பகுதியில் உள்ள வட்டக்காடு எனும் இடத்தில் யானைகள் கூட்டம் ரயில்பாதையை கடந்து செல்ல முயன்றதாகவும், அப்போது ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததை கண்டு யானைகள் ஓட்டம் பிடித்ததாகவும், இதில் கடைசியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றின் மீது இரயில் மோதியதாகவும் சொல்லப்படுகிறது.

ரயில் என்ஜின் வேகமாக மோதியதில் ஆண் யானை, சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. ரயில்வே போலீஸார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானைகள் இறப்பைத் தடுக்க மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில், மணிக்கு 30 முதல் 40  கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே ரயிலை இயக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி ரயில் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த விதிமீறலே யானைகள் ரயில் மோதி இறக்க காரணம் என சொல்லும் வன உயிரின ஆர்வலர்கள், தொடர்ச்சியாக ரயில் மோதி யானகள் இறப்பது என்பது கவலை அளிப்பதாகவும், இதை தடுக்க முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

கோவையில் கடந்த 2008-ம் ஆண்டு ரயில் மோதி ஒரு கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள் உயிர் இழந்தன. அதை தொடர்ந்து 2011-ல் ரயில் மோதி ஒரு யானை இறந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அடுத்தடுத்து 3 யானைகள் ரயில் மோதி இறந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை ஒன்று பஸ் மீது மோதியும் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு யானை ரயில் மோதி இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ