Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பாகிஸ்தான் பிரிவும், நேருவின் கையெழுத்தும்!' - ஹெச்.ராஜா

கறுப்புப் பணம்

'கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் நடத்தும் 'பந்த்' போராட்டத்துக்கு, வியாபாரம் செய்யும் வணிகர்கள் ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார்கள்' என்று பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவக்கையைக் கண்டித்து இன்று நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனால், இந்த கடையடைப்பு - ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என பி.ஜே.பி- யின் தலைவர்கள், வணிகர்களிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இந்நிலையில் இந்த கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் குறித்து பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, “தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் சேர்த்திருக்கும் கறுப்புப் பணத்தை காப்பாற்றுவதற்காக, உங்களை கடையடைக்கச் சொல்கிறார்கள். அவர்கள் பணத்துக்கு நீங்கள் ஏன் கடையடைக்க வேண்டும்? என்று வியாபாரிகளிடம் கேட்டுக் கொண்டோம். வர்த்தகர்களுக்கு சிறுசிறு சிரமங்கள் இருந்தாலும் தாங்கள், பந்த்-ஐ ஆதரிக்கப்போவதில்லை என்கிறார்கள். 

புதிய ஐநுாறு ரூபாய் நோட்டுகளை, அப்போதே அச்சடித்திருந்தால் விஷயம் வெளியே கசிந்து விடும் என்பதால்தான் முன்கூட்டியே அடிக்கவில்லை. இப்போது தேவையான அளவிற்கு ஐநுாறு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ்காரர்கள், 'யாரைக் கேட்டு இந்தத் திட்டத்தை மோடி அறிவித்தார்' என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் யாரைக் கேட்டு நாட்டைப் பிரித்தார்கள்? அதனால் தானே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். யாரைக் கேட்டு இவர்கள் பிரித்தார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதமர் மோடி தான் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், 1947-ல் நாட்டைப் பிரித்துக் கொடுக்க அப்போது ஜவஹர்லால் நேரு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது எந்த உரிமையில்? யாரைக்கேட்டு நேரு கையெழுத்து போட்டார்? இந்த நாட்டைப் பிரித்து, தேசத்தை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட ஒரு கூட்டம், இன்று கறுப்புப் பண ஒழிப்பை எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் என்ற ஒரு பிரிவினைவாதசக்தி நடத்தும் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை” என்று கடுமையாக தெரிவித்துள்ளார். 

- அ.சையது அபுதாஹிர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ