Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஃபேஸ்புக் லைவ்' மக்கள் குறைகளைத் தீர்க்க சென்னை எம்.எல்.ஏவின் முயற்சி!

ஃபேஸ்புக் லைவ் மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் சைதை தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன். 


 இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் என்பது இன்றியமையாததாகி விட்டது. அதற்கேற்ப மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் மாறி விட்டனர்.பல பிரபலங்கள் ஃபேஸ்புக் லைவ் மூலம் தங்கள் ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள். சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், நேற்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை பதிவு செய்திருந்தார். அதில் 'பகல் 12 மணி முதல் 1 மணி வரை புதிய முயற்சியாக சைதை தொகுதி மக்களுடனான முகநூல் மூலம் நேரலையில் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளோம். அடிப்படை வசதிகள் மற்றும் அரசு துறைகளில் அத்தியாவசிய கடமைகள் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சியில் ஈடுபடவுள்ளோம். நட்புடன் இணைந்து நல்லதுகளுக்காக உழைப்போம் வாரீர்.... வாரீர்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி ஃபேஸ்புக் நேரலையில் தொகுதி எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனிடம் மக்கள் தங்களது குறைகளைச் சொல்ல அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். 

 

 

 இதுகுறித்து மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். "சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த காலகட்டத்தில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற நிகழ்ச்சியை தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து தனியார் தொலைகாட்சி மூலமும் மக்களின் குறைகளுக்கு நடவடிக்கை எடுத்தோம். தற்போது, என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதனால் சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள மக்களின் குறைகளை ஃபேஸ்புக் மூலம் தீர்வு காணலாம் என்ற யோசனை வந்தது. அதன்படி நேற்று மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை இதுதொடர்பாக ஃபேஸ்புக் நேரலை மூலம் மக்களிடம் பேசினேன். அப்போதே மக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்தன.

 

 

 


அதில் வேளச்சேரி  ஏரியில் படகு சவாரி, வேளச்சேரி காமராஜர் நகரில் பட்டா, சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் உள்ள மசூதிபள்ளம் என்ற இடத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை சரிவர போடவில்லை, கழிகுன்றம் என்ற இடத்தில் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட கோரிக்கைகள் வந்தன. அதற்கு இனி வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவலைச் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் விவரத்தை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் நேரலையில் தெரிவிப்பேன். 
 இந்த வாரம் வீட்டில் இருந்தபடியே மக்களிடம் குறைகளை ஃபேஸ்புக் மூலம் கேட்டறிந்தேன். அடுத்தவாரம் பெங்களூருவுக்கு சென்றாலும் அங்கிருந்து மக்களின் குறைகளை கேட்பேன். இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 12 மணி முதல் 12.30 வரை ஒதுக்கியுள்ளேன். இந்த முயற்சியால் மக்களின் குறைகளுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். இதுதவிர தொகுதிக்குள்ளேயே என்னுடைய வீடு, அலுவலகம், கட்சியின் மாவட்ட அலுவலகம் இருப்பதால் மக்கள் எந்நேரமும் என்னை சந்தித்து தங்களது குறைகளை கேட்கலாம். அவ்வாறு வர முடியாதவர்களுக்காகத்தான் இந்த ஃபேஸ்புக் நேரலை" என்றார். 

இந்த ஐடியா யாருடையது என்று கேட்டதற்கு, "என்னுடைய மகனான டாக்டர் இளஞ்செழியன் மற்றும் பேரனான ஐ.டி துறையில் பணியாற்றும் விக்கி ஆகியோருடைய ஐடியாதான் இது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர்கள் சொன்னார்கள். நல்ல முயற்சி என்பதால் மதியமே அதை செயல்படுத்தி விட்டேன்" என்றார்.  

 

- எஸ்.மகேஷ்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ