Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்று தீரும் பூந்தமல்லி போக்குவரத்து நெரிசல்? கிடப்பில் ஜெயலலிதாவின் அறிவிப்பு

              பூந்தமல்லி

சென்னையின் மிக முக்கிய புறநகரான பூந்தமல்லி தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறிவருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மேற்கு நுழைவாயிலாக இருக்கும் பூந்தமல்லி, பல்வேறு தொழில் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியாகும். காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, என்று தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கர்நாடகத்துக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பேருந்துகள் பூந்தமல்லி வழியாகவே சென்று வருகின்றன. அத்தோடு ஆயிரக்கணக்கில் லோடு லாரிகளும், கார்களும் கடந்து செல்லும் பகுதியாக பூந்தமல்லி இருக்கிறது. அதன் அருகில் உள்ள குமணஞ்சாவடி சந்திப்பும் கரையான் சாவடி பகுதியும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான வாகன நெரிசலில் சிக்கித்தவிப்பது தினமும் நிகழ்கிறது.

இதனால் தங்களுக்கு மிகுந்த சிக்கல் ஏற்படுகிறது என்றும் அதனால் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் பூந்தமல்லி பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுத்தனர். அதன் பயனாக கடந்த 12.08.2016 தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், "சென்னை மாநகரின் முக்கிய நகர்ப்புற சாலைகளான தேசிய நெடுஞ்சாலை-45, தேசிய நெடுஞ்சாலை-4, தேசிய நெடுஞ்சாலை-5 மற்றும் தேசிய நெடுஞ்சாலை-205 ஆகிய சாலைகள் பல்வழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை பெருநகர எல்லைக்குள் சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னை புறவழிச்சாலை, சென்னை வெளிவட்ட சாலை திட்டங்கள் செயலாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

மேலும், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை துறைமுகப் பகுதிகளை இணைக்கும் பொருட்டு “சென்னை பெரிய வட்ட சாலை” அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய இணைப்பு சாலைகள் மேம்படுத்தப்படும். அதனால் சென்னை புறநகர் பகுதிகளில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது என்று பூந்தமல்லி மக்கள் புகார் கூறுகின்றனர். 

மேலும், முதல்வர் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அதற்கு பூந்தமல்லி முன்னாள் அதிமுக பிரமுகரும் இந்நாள் முக்கிய நபர்கள் சிலரும் காரணமாக இருக்கிறார்கள் என்றும் அதிர்ச்சியூட்டுகிறார்கள். முதல்வரின் அறிவிப்புக்கு ஆளும் கட்சியினரும் ஒரு சில அதிகாரிகளும் எதிராக இருப்பதால் பூந்தமல்லியின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தீராத பிரச்னையாக இருக்கிறது என்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

               பூந்தமல்லி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பூந்தமல்லி பகுதியில் நீண்டகாலம் வசிக்கும் உதயகுமார் என்பவர் கூறுகையில்,"கடந்த 20 ஆண்டுகளில் பூந்தமல்லி அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. பள்ளி கல்லூரி என்று எங்கள் பகுதியைச் சுற்றி அதிகம் இயங்கிவருகின்றன.அதே போல குமணன்சாவடி, கரையான் சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் எண்ணிக்கை அதிகம் பெருத்துவிட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதனால் மக்கள் தொகையும் இந்தப்பகுதியில் கூடிவிட்டது. போக்குவரத்தும் அதிகரித்துவிட்டது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.

இதனால் மக்கள் அதிகம் கூடும் நேரங்களில் கடுமையான போக்குவரத்துச் சிக்கல் ஏற்படுகிறது. பூந்தமல்லியில் இருந்து குமணன் சாவடி, கரையான் சாவடி சந்திப்புகள் வழியாக சென்னைக்கு வெளியே செல்லும் வாகனங்கள் பல மணிநேரம் காத்திருந்து, அடி அடியாக நகர்ந்து செல்கின்றன. அதே போல சென்னைக்கு உள்ளே வரும் வாகனங்களும் ஊர்ந்து ஊர்ந்துதான் வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் இங்கே ஏற்படுகின்றன. பொதுமக்களாகிய எங்களின் அவதி சொல்லிமாளாது."என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "எங்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரும் கனிவோடு பரிசீலித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தில், சென்னைக்கு வெளியே உள்ள தேசிய நெடுஞ்சாலை 4 பல்வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அறிவித்தார். அதன் அருகில்தான் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பூந்தமல்லியும் உள்ளது. குமணன் சாவடி முதல் பூந்தமல்லி வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னமும் அகற்றப்படவில்லை. முதல்வர் உத்தரவிட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதில் முனைப்புக்காட்டவில்லை. நகராட்சியின் அதிகாரிகளும் மெத்தனமாகவுள்ளனர். இதன் பின்னணியில் பூந்தமல்லியின் முன்னாள் சேர்மன் உள்ளார் என்று ஆளும் கட்சியினரே தெரிவிக்கின்றனர். நாங்கள் வேறு எங்கே முறையிடுவது என்று தெரியவில்லை'' என்றார் கவலையோடு.

 - சி.தேவராஜன் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ