Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அமைச்சரை அனுசரிக்காவிட்டால் இதுதான் கதியா?!'  -பல்கலைக்கழகத்தை பதற வைத்த 26 கோடி ஊழல்

பேராசிரியர் பணி நியமன ஊழல் புகார் தொடர்பாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ராஜினாமா செய்துள்ளார். ' அமைச்சர் ஒருவர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படாததே, விவகாரம் இந்தளவுக்கு வெடிக்கக் காரணம்' என்கின்றனர் கல்வியாளர்கள். 

தமிழ்நாட்டில் ஊழல் புகார்களில் சிக்காத பல்கலைக்கழகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, உயர்கல்வித் துறை சீரழிந்து வருகிறது. நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் மோகன், அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். பதவியில் இருந்து விலகுமாறு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இருந்து அழுத்தம் வந்ததே இதற்குக் காரணம். இதற்கு முன்பு பதிவாளராக இருந்த செந்தில் வாசன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு சில மாதம் குழந்தைவேலு அந்தப் பொறுப்பில் இருந்தார். அதன்பிறகு, பதிவாளர் பதவிக்கு வேதியியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மோகன் நியமிக்கப்பட்டார். இப்போது அவரும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார்' என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.  

"பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 76 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் அண்மையில் நடந்து முடிந்தன. பணியிடங்கள் நிரப்புவது குறித்து தகவல் வெளியானதும், அமைச்சர் ஒருவர் துணைவேந்தர் கணபதியை வீட்டுக்கு வரவழைத்தார். ' பதவிக்கு வந்துவிட்டால், அமைச்சரை வந்து சந்திக்கக் கூடாது என்பது விதியா? ஏன் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை' என சத்தம் போட்டுள்ளார். ' நான் பதவிக்கு வந்தபோது தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. முதல்வர் அப்பாயின்மெண்ட்டும் கிடைக்கவில்லை' என விளக்கம் அளித்தார் கணபதி. இதன்பிறகு, யாருக்குப் பணி வழங்க வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர். ஆனால், அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பணியிடங்கள் வழங்கப்படவில்லை. இதனால் அமைச்சர் தரப்பினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்" என்கிறார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

" பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடத்த வேண்டும் என்பதில் கல்வியாளர்கள் உறுதியாக இருந்தனர். அதற்கேற்ப நிர்வாகம் செயல்படவில்லை. பணி நியமன தேர்வுக் கமிட்டியில், ஆளுநர் பிரதிநிதியாக வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நியமிக்கப்பட்டார். சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு துணைவேந்தர் மணிமேகலை நியமிக்கப்பட்டார். அரசு பிரதிநிதியாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார் . இவர் மீது சில புகார்கள் உள்ளன. 'இவை திட்டமிட்டே நடத்தப்பட்டது' என கல்வியாளர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டது. இதையும் மீறி நேர்காணல் நடத்தப்பட்டது. தேர்வுக் கமிட்டியில் இருந்த சிலர், பணியிட விவகாரத்தில் நன்றாக விளையாடிவிட்டனர். அமைச்சர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களில் பலருக்குப் பணியிடம் வழங்கப்படவில்லை. 

இதனால் கொந்தளித்த அமைச்சர், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தார். 'சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிடக் கூடாது' என்பதற்காக, உயர்கல்வித் துறையில் இருந்து கடைசி நிமிடத்தில் ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு பணியிடத்துக்கான ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இதை அமைச்சர் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. எனவேதான், பணியிட விவகாரத்தில் எவ்வளவு பணம் விளையாடியது என்ற தகவலும் வெளியானது. சுமார் 26 கோடி ரூபாய் வரையில் வசூல் நடந்துள்ளதாக உயர்கல்வித்துறையின் கவனத்திற்குப் புகாராக அனுப்பினர். இதற்காக, தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்கள் யார் என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை எல்லை மீறிப் போவதை அறிந்து, பதிவாளரை விலகச் சொல்லிவிட்டனர். வரும் நாட்களில் கூடுதல் அழுத்தங்களை துணைவேந்தர் கணபதி சந்திக்க நேரிடும்" என்றார் ஆதங்கத்தோடு. 

" பாரதியார் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. ' சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக் கூடாது' என அரசுத் தரப்பில் இருந்து கடிதம் வந்ததாக பதிவாளர் கூறுகிறார். பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் சிண்டிகேட் கூட்டத்தை நடத்த துணைவேந்தருக்கு அனைத்து தகுதிகளும் உண்டு. அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிட்டால், எதுவும் செய்ய முடியாது. ஆனால், சிண்டிகேட் கூட்டத்தை தள்ளி வைப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆளுநர் இல்லாத சமயங்களில் மட்டும் அமைச்சர் முடிவெடுக்கலாம். எனவே, பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது. இவை அனைத்தும் ஆளுநர் ஒப்புதலோடு நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து விரிவான விசாரணையை ஆளுநர் அலுவலகம் நடத்த வேண்டும்" என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள். 

- ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ