Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாரத்தினத்துக்கு முடிவு கட்டிய மத்திய அரசு!  - சேலம் இரும்பாலை கைநழுவிய பின்னணி 

சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. 'நாட்டின் மகாரத்தினமாக போற்றப்பட்ட மிகப் பெரிய இரும்பாலையின் சகாப்தம், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தனியாரின் கைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது' என வேதனைப்படுகின்றன தொழிற்சங்கங்கள். 

மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய், நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் தமிழக அரசியல் கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், ' இந்திய உருக்கு ஆலை ஆணையகரத்தின் தலைமையில் இயங்கி வரும், சேலம் இரும்பாலை நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது (மகாரத்னா). கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ச்சியான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஆணையத்தின் மூலம் 2,200  கோடி ரூபாய் செலவில், ஆலையை நவீனப்படுத்தியும் விரிவாக்கம் செய்த பிறகும் நஷ்டமே ஏற்பட்டு வருகிறது. எனவே, சேலம் இரும்பாலையின் பங்குகளை விற்பனை செய்வது எனக் கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது' எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் எழுத்துபூர்வமான பதிலை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. வரும் நாட்களில் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகின்றனர். "ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி வருகிறது சேலம், இரும்பாலை. உருட்டு ஆலை, வெப்ப உருட்டு ஆலை ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் டன்னுக்கும் மேற்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே துருப்பிடிக்காத எஃக்கு மூலம் மிக அகலமான தகடுகள் உற்பத்தி செய்யும் கூடம் இங்குதான் தொடங்கப்பட்டது. இதனை நம்பி நேரடியாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இப்படியொரு ஆலை உருவாவதற்கான முயற்சிகள் மிகச் சாதாரணமாக நடந்துவிடவில்லை" என ஆதங்கத்தோடு பேசினார் தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் நம்மிடம், 

"சேலத்தில் உருக்கு ஆலை அமைய வேண்டும் என்பது அண்ணாவின் நீண்டநாள் கோரிக்கை. இதற்காக, 1965-ம் ஆண்டில் சேலத்தில் எழுச்சி நாள் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ‘சேலம் உருக்காலையும் சேது சமுத்திர திட்டமும் கொண்டு வரப்பட வேண்டும்’ என முழுங்கினார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர், உருக்குத் துறை அமைச்சர் நீலம் சஞ்சீவி ரெட்டியை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசினார் தி.மு.க எம்.பியாக இருந்த ஈ.வி.கே.சம்பத். இதன்பிறகும் இரும்பு ஆலை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதன்பிறகு, 1975-ம் ஆண்டு பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, திட்டக் குழு கூட்டத்துக்குச் சென்றார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

கூட்டத்தில், ' இரும்பு ஆலை திட்டம் எதுவும் இல்லை' எனச் சொல்லப்பட்டதால், கொந்தளித்த முதலமைச்சர் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்துவிட்டார். இந்தத் தகவல் பிரதமர் இந்திராகாந்தியின் கவனத்துக்குச் சென்றது. அவர் உடனே, 'அதனால் என்ன? இரும்பாலை அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுப்போம்' என உத்தரவிட்டார். நீண்டகால போராட்டத்தின் விளைவாகவே, சேலம் இரும்பாலை நமக்குக் கிடைத்தது. அதிக வளம் கொழிக்கும் இந்த ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதன் பின்னணியில், பல மர்மங்கள் உள்ளன. மாட்டுச் சந்தையில் பேரம் பேசப்படுவது போல், அனைத்து விவரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்றார் விரிவாக. 

"தமிழ்நாட்டில் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை குறிவைத்து மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கிண்டி, சிப்பெட்டை டெல்லிக்கு இடம் மாற்றும் முயற்சிகள் நடந்தன. தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டு போராடியதால், அந்த நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. சிப்பெட் குறித்த இறுதி முடிவு எழுத்துபூர்வமாக அளிக்கப்படவில்லை. இதனால் சிப்பெட் ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பத்து நாட்களுக்கு முன்பு, 'சேலம் உருக்காலையை தனியாருக்கு அளிக்கும் எண்ணம் இல்லை' எனப் பேசிவிட்டுச் சென்றார் மத்திய கனரகத் துறை அமைச்சர். ஆனால், தற்போது நிலைப்பாட்டை மாற்றிப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்கிறார் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர், "தொடங்கிய காலத்தில் இருந்தே நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது சேலம் இரும்பாலை. உருட்டாலையாக தொடங்கப்பட்டு, இன்று இரும்பு மற்றும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உள்பட உலகத் தரத்திலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் பெட்டி உற்பத்திக்குத் தேவையான நான்காயிரம் டன் இரும்புத் தகடுகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. வருடத்துக்கு ஐந்தாயிரம் டன் நாணய வில்லைகளை உற்பத்தி செய்து வருகிறது. இரும்பு ஆலைக்குத் தேவையான மின்சாரத்தை முறையாக கிடைக்கவிடாமல் செய்தது; மின் உற்பத்திக்கான திட்டத்தைக் கிடப்பில் போட்டது; இரும்பு ஆலை இயங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காதது என திட்டமிட்டே செயற்கையாக சில காரணங்கள் உருவாக்கப்பட்டன. ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ என முழங்கிக் கொண்டே, நல்லநிலையில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு மடைமாற்றும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதனால், ஆலையை நம்பியுள்ள பல்லாயிரம் தொழிலாளர்கள் வீதிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்பதுதான் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி” என்கிறார் ஆதங்கத்துடன். 

சந்திராயன் விண்கலத்தில் சேலம் உருக்காலை தகடு இடம்பெற்றிருப்பதே பெருமை சேர்க்கும் அம்சம். அதை முற்றாகத் துடைத்தெறிவதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா?

- ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close