Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“இவரிடமிருந்துதான் இரக்கக் குணத்தைக் கற்றார் எம்.ஜி.ஆர்!''- என். எஸ்.கே பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

50-களின் மத்தியில் சென்னையின் மத்தியில் உள்ள அந்த பிரபல மண்டபம் பிரபலஸ்தர்களால் நிரம்பி வழிந்தது. விழா நாயகனை விழா எடுத்த பிரபலமும் விழாவுக்கு வந்த பிரபலங்களும் மேடையில் பாராட்டித்தள்ளினர். பணமுடிப்பும் பாராட்டும் குறைவின்றி கொடுக்கப்பட்டது விழாவின் நாயகனுக்கு. நடந்து முடிந்த அந்த விழா குறித்து திரையுலகமே பல மாதங்கள் ஆச்சர்யமாக பேசிக்கொண்டனர். காரணம் விழா நாயகன் சாதாரண ஒரு டிரைவர். தனக்கு பல ஆண்டுகள் காரோட்டிய டிரைவரை கவுரவிக்க அவருக்குப் பிரபலங்களைக் கூட்டி விழா எடுத்த அந்த மனிதநேயர் வேறு யாருமல்ல; கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை என்.எஸ்கிருஷ்ணன்.

நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் தொடங்கி திரையுலகில் ஈடில்லாத நகைச்சுவை மேதையாகத்  திகழ்ந்தவர். திரையுலகில் தான் சம்பாதித்ததை வாரி வழங்கி மகிழ்ச்சியடைந்தவர் கலைவாணர்

பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம் ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும் இடம்பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா முதற்படம். புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும் அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச் செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப் போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.

இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார். ஆனால் கலைவாணரின் செயல் வெறுப்போடு கொஞ்சம் அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது. 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன் கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன். ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக் கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்துபோனார் மதுரம். புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர் இருவரும்.

சாதாரண நடிகராக மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றபின்னரும் கலைவாணரின் இரக்க குணம் சற்றும் குறையவில்லை. வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினார். திரையுலகில் வள்ளல்குணத்துக்கு உதாரணமாக ஒருவரை காட்டச்சொன்னால் சிறுகுழந்தையும் எம்.ஜி.ஆர் என்ற மனிதரை அடையாளம் காட்டும். எம்.ஜி.ஆர் என்ற மனிதநேயரின் வள்ளல்குணத்துக்கு வழிகாட்டி கலைவாணர்தான். கலைவாணரிடமிருந்துதான்தான் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டேன் என பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பெருமிதமாகக் குறிப்பிட்டதுண்டு.

1966-ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலருக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்து எம்.ஜி.ஆர் எழுதியவற்றை பார்ப்போம். “புகழ் மிகுதியின் அடித்தளத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை அவரது அறிவும் பண்புமே நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல. பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால் திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள். சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால் அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.

இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.

இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

'மாய மச்சேந்திரா' படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், படக் கம்பெனிச் சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத் தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்.

மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள். இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;

நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துக் கொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்து கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்து கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால் பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?

அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துக் கொண்டார்கள். இவர் தான் கலைவாணர்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம். ஆனால் ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால் அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலினும் பெரியது; மலையினும் உயர்ந்தது. அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை.

அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார்.ஆனால் பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்துக்குள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துக் கொள்வார்கள்.

கலைவாணர் அவருடைய கடைசி கால கட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி. அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன்.  பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போறாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!

அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது. இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்பு மிக்க செயல்கள்தாம். கலைவாணரின் மறைவின் போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சிபேதம், மொழி பேதம், இனபேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!

அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close