Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளில் தாராளமாக பணம் வழங்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்

ஊதியப் பணத்தை எடுக்க ஏ.டி.எம்.களில் தாராள பணம் வழங்கலை உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பணப் புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் இந்த பாதிப்பும், அவதியும் அடுத்து வரும் நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வங்கிகளுக்கு கூடுதல் பணம் வழங்கப்படாத நிலையில், ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கவுள்ள வாடிக்கையாளர்களின் பணத் தேவையை வங்கிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன? என்ற வினாவுக்கு விடையில்லை. வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாததால் தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல், வங்கி அதிகாரிகளுடன் மோதல், ஏ.டி.எம். எந்திரங்கள் மீது தாக்குதல் என வன்முறைகள் நடந்துள்ளன. ஒன்றாம் தேதிக்கு பிறகும் பணப் பஞ்சம் நீடித்தால் இந்த வன்முறைகள் அதிகரித்து  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் ஒன்றாம் தேதி முதல் தாராளமாக பணம் வழங்கப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய, மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியத்தில் ரூ.3000 ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், பணம் வசூலிக்கும் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இயன்ற அளவு தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ