Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ வழிபாட்டு உரிமையும் பறிபோகிறதா?’ -கச்சத் தீவில் இலங்கையின் ரகசிய மூவ்

ச்சத் தீவில் புதுப்பித்துக் கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழா வருகிற டிசம்பர் 7-ம் தேதி நடக்க இருக்கிறது. ‘ கச்சத் தீவில் நமக்கான வழிபாட்டு உரிமையை மறுக்கும் வகையில் இலங்கை அரசு செயல்படுகிறது. புதிய ஆலயம் திறப்பு குறித்து தமிழக மீனவர்களுக்குத் தகவல் சொல்லப்படவில்லை’ எனக் கொதிக்கின்றனர் மீனவர்கள். 

ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவில் நடக்கும் அந்தோணியார் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இதையொட்டி தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் இருந்து அழைப்பு விடுக்கப்படும். பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக நெடுந்தீவு பாதிரியார் அளிக்கும் அனுமதிச் சீட்டுடன் மீனவர்கள் பயணம் செய்வார்கள். இரண்டு நாள் திருவிழாவுக்கு சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் கூடுகின்றனர். இந்திய பக்தர்களை பத்திரமாக படகில் ஏற்றி, இறக்கி அனுப்பும் வரையில், அனைத்து ஏற்பாடுகளும் இலங்கைக் கடற்படையினர் செய்வது வழக்கம். இலங்கைத் தமிழர்கள், குளியல் சோப்பு, தேயிலை, தேங்காய் எண்ணெய், உணவுப் பொருட்கள், துணிமணிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

விடுதலைப்புலிகள் இருந்த வரை கச்சத் தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியைக்கூட இலங்கை ராணுவத்தால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பின்னர், கச்சத் தீவை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது இலங்கை அரசு. இந்நிலையில், கச்சத் தீவில் அந்தோணியார் ஆலயத்தை புதுப்பித்துக் கட்டி முடித்திருக்கிறது இலங்கை. “ ராமேஸ்வரம் பாதிரியார்களுக்கு எந்தத் தகவலும் சொல்லாமல், இப்படியொரு செயலில் ஈடுபட்டிருக்கிறது இலங்கை. நமக்கான உரிமைகளை முற்றிலும் புறக்கணிப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. தற்போது வழிபாட்டு உரிமையிலும் கை வைக்கத் தொடங்கிவிட்டது இலங்கை” எனக் கொந்தளிப்போடு பேசினார் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் சின்னத் தம்பி. அவர் நம்மிடம், 

“ கச்சத்தீவு என்பது தமிழர்களின் பாரம்பரிய சொத்து. அங்கு செயல்பட்டு வரும் அந்தோணியார் ஆலயத்தை ராமநாதபுரம், தொண்டியைச் சேர்ந்த சின்னக்குப்பனும் ஓலைக்குடா அந்தோணிசாமியும்தான் கட்டினர். இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட பிறகு, நமக்கான உரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகிறது இலங்கை. அங்கு மீன்பிடிப்பதற்கான அங்கீகாரத்துக்கு முடிவு கட்டியது இலங்கை. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர் நமது மீனவர்கள். தற்போது இலங்கையின் நிரந்தர ராணுவ முகாம்களை கச்சத் தீவில் அமைத்துள்ளனர். இதன் காரணமாகத்தான், அந்தப் பகுதியின் அருகில் சென்றாலே நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்.

கச்சத் தீவு தொடர்பான ஒப்பந்தத்தில், வலை உலர்த்துவது உள்பட நமக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் நிலத்தின் மீதான உரிமையையும் புறம் தள்ளிவிட்டனர். புதிய கட்டுமானத்தையும் எழுப்பிவிட்டனர். இதற்காக, தமிழக மீனவர்களிடம் எந்த நிதி உதவியும் கேட்கப்படவில்லை. இது எங்களுக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கின்ற அந்தோணியார் திருவிழாவுக்கு முறையான அனுமதியைக் கொடுப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ‘ நமது நாட்டின் சொத்து, இன்னொரு நாட்டிடம் இருக்கக் கூடாது’ என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார் வாஜ்பாய். அதைப் பின்பற்றி கச்சத் தீவை மீட்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார் உறுதியாக. 

“ முன்பு சீனாவின் ராணுவ தளவாடங்கள் கச்சத் தீவு பகுதியில் வட்டமிட்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். பிறகு அதைப் பற்றி எந்தப் பேச்சும் எழவில்லை. தற்போது முழுவீச்சில் ராணுவ முகாம்களை கச்சத் தீவில் அமைக்கும் பணியில் இலங்கை இறங்கியுள்ளது. கடல் எல்லைகளைப் பொறுத்தவரையில், அதன் உண்மையான பாதுகாவலர்கள் மீனவர்கள்தான். அவர்களைத் தாண்டி எந்த ஒரு விஷயமும் நடந்துவிடாது. கச்சத் தீவில் நமக்கு இருக்கும் ஒரே உரிமை, அந்தோணியார் ஆலய வழிபாடு மட்டும்தான். வரும் காலங்களில் அதற்கும் தடை போடும் வகையில் இலங்கை அரசின் செயல்பாடுகள் உள்ளன. ஆலய வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், மீனவர்கள் கொதித்தெழுவார்கள்” என்கிறார் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர். 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ