Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்படியும் நடத்தலாம் ஐ.டி ரெய்டு!  கதிகலக்கிய 'களவாணி' போலீஸ் 

 


கோவை சிங்காநல்லூரில் பிரபல தொழிலதிபர் வீட்டில்  150 சரவன் தங்க நகைகளையும், 40 லட்சம் ரூபாய் பணத்தையும் வருமானவரித் துறை அதிகாரிகள் என்ற பெயரில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது ஒரு திருட்டு கும்பல். அதில் மூன்று பேர், கோவை போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். 


 கோவை, சிங்காநல்லூரை சேர்ந்தவர் அகமது. தொழிலதிபர். இவரது வீட்டுக்கு கடந்த அக்டோபர் 5-ம் தேதி அதிகாலை 12 பேர் சென்றனர். வீட்டில் இருந்தவர்களிடம், நாங்கள், வருமானவரித் துறை அதிகாரிகள். 'வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் உங்கள் வீட்டில் ரெய்டு நடத்த வந்துள்ளோம்' என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு அதிகாரி பேசி உள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் டிப்டாப் உடையில் வந்தவர்களைப் பார்த்ததும் வீட்டில் இருந்த அனைவரும் கதிகலங்கிப் போய்விட்டனர்.  உடனடியாக ஏதோ ஒரு பேப்பரை நீட்டிய அதிகாரிகள், உடனடியாக வீடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். சில மணி துளிகளில் வீட்டின் லாக்கரில் இருந்த 150 சவரன் நகைகளும், 40 லட்சம் ரூபாய் பணத்தையும் அள்ளிய வருமானவரித் துறை அதிகாரிகள், வீட்டில் இருந்தவர்களிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு கோவை வருமானவரி அலுவலகத்துக்கு வரும்படி தெரிவித்தனர். அப்போது அகமது, இந்த நகை, பணம் எல்லாம் என் மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்தது என்று கூற அதை வருமான வரி அதிகாரிகள் காது கொடுத்து கேட்கவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த வருமான வரி அதிகாரிகள் சிறிய யோசனைக்குப்பிறகு அகமதுவை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். கோவை அவினாசி சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அகமதுவை இறக்கி விட்ட அந்த கும்பல், 200 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு  ஆட்டோவில் வீட்டுக்கு செல்லும்படி தெரிவித்தது. அடுத்த சில நிமிடங்களில் கார் மின்னலாக பறந்தது. 


 இதையடுத்து கோவை வருமான வரி அலுவலகத்துக்குச் சென்று அகமது விசாரித்தபோது, அப்படியொரு ரெய்டு நடத்தப்படவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதன்பிறகே அகமது, ஐ.டி அதிகாரிகள் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட விவரம் தெரிந்தது. பின்னர் இதுதொடர்பாக கோவை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க போலீஸில் தனிப்படை அமைக்கப்பட்டது-


இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் போலி ஐ.டி அதிகாரிகள் தலைமறைவாக இருக்கும் தகவல் தனிப்படை போலீஸுக்கு கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாரைக் கண்ட கொள்ளைக் கும்பல், காரில் தப்பி ஓடியது. ஐ.டி அதிகாரிகளாக நடித்த மூன்று பேர்களை களக்காடு மலைப்பகுதியில் விரட்டிச் சென்று போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தென்காசியைச் சேர்ந்த அருள், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஆறுமுகபாண்டி, தென்காசி ஆய்குடியைச் சேர்ந்த செந்தில் என்பது தெரிந்தது. 
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "நெல்லையில் பிடிப்பட்ட ஆறுமுகபாண்டி, அருள், செந்தில் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களுடன் சேர்ந்த கும்பலில் சிலர் தலைமறைவாக உள்ளனர். அருள், போலீஸ் கெட்டப்பிலும்  திருடி உள்ளார். போலீஸ் சீருடையில் அவர் பல கெட்அப்களில் புகைப்படம் எடுத்துள்ளார். திருடச் செல்லும் இடங்களில் போலீஸ் என்று கூறியும் கைவரிசையை காட்டி உள்ளார். ஆறுமுகபாண்டி, ஒரு இடத்தில் திருடும்போது அவரது காலில் அடிப்பட்டுள்ளது. அவரது அடைமொழியே கண்டெய்னர் ஆறுமுகபாண்டி. கண்டெய்னர்களை திருடுவதில் கில்லாடி. கொள்ளைக் கும்பல் தப்பிய காரை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார். 

 

 

 

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை முழுமையாக கைது செய்தபிறகே முழுவிவரம் தெரியவரும். மேலும் அவர்கள் ஐ.டி அதிகாரிகள் என்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால் இதுபோல வேறு எங்கேயும் கொள்ளையடித்து உள்ளார்களா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொள்ளைப் போன பணம்,  நகைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது எங்களிடம் பிடிப்பட்ட செந்தில், ஆறுமுகபாண்டி, அருள் ஆகியோர் மீது ஏற்கனவே பல கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளன"என்றனர். 

நமது நிருபர் 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ