Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாவோயிஸ்ட்கள் பதுங்கல்?... 104 தமிழக மலை கிராமங்களில் 'ரெட் அலர்ட்'!

 

திண்டுக்கல் : கேரளாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தப்பிய மாவோயிஸ்ட்கள், தமிழக மலை கிராமங்களில் பதுங்கியிருக்க கூடும் என்பதால் தமிழகத்தில் உள்ள 104 மலை கிராமங்கள் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கேரளாவில் ஆதிவாசி, பழங்குடியின மக்களின் நலன் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்லி கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள் மாவோயிஸ்ட்கள். வனத்துறை அலுவலகங்களுக்கு தீ வைப்பு, வனத்துறை வாகனங்கள் எரிப்பு, கே.எப்.சி. உள்ளிட்ட பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் என தொடர்ச்சியான தாக்குதலால் நிலை குலைந்தது கேரளா.

தாக்குதலின் போது கையால் எழுதப்பட்ட பிரசுரங்களை வீசிச்சென்றனர். அதில், "ஆயுதமேந்திய விவசாய புரட்சி தான் பழங்குடியினர் நலனை காக்கும். கடும் நெருக்கடியில் உள்ள ஆதிவாசிகள் நலனைக் காக்க இந்த போராட்டத்தை துவங்கியுள்ளோம்.  அரசு பயங்கரவாதம் இந்த பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய போராட்டங்கள் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும். நாங்கள் இங்கு மட்டுமில்லை. தமிழகம், கர்நாடகத்திலும் நாங்கள் இருக்கிறோம். அங்கும் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்," என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கேரளா மட்டுமல்லாது தமிழகம், கர்நாடகத்திலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கேரளாவில் அம்மாநில அதிரடிப்படையான தண்டர் போல்ட் போலீஸார் மூலம் தொடர் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யும் இதில் தீவிரமாக ஈடுபட்டன.

தொடர்ச்சியான கண்காணிப்பு, தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் தப்பியோடினர். அவர்கள் தமிழகத்தில் உள்ள மலை கிராமங்களில் தங்கி இருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மலைகிராமங்களில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 கிராமங்கள், தேனி மாவட்டத்தில் 9 கிராமங்கள், தர்மபுரி மாவட்டத்தில் 35 கிராமங்கள், கிருஷ்ணகிரியில் 48 கிராமங்கள் என மொத்தம் 104 கிராமங்கள் நக்சல் தடுப்பு பிரிவினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஆர்.குமரேசன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ