Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உறவுகளுக்குத் தடை போட்ட சசிகலா!  -முதல்வருக்குச் சென்றதா ரகசிய கடிதம்? 

ப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்களைக் கடந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘ சில நாட்களாக மருத்துவமனைக்குள் மன்னார்குடி உறவுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முதல்வரின் கவனத்துக்கு தகவல்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த் தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார் முதல்வர். தற்போது சிங்கப்பூர் நிபுணர்களின் உதவியோடு பிஸியோதெரபி சிகிச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், ‘முதல்வர் எப்போது வீடு திரும்புவார்’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தினம்தோறும் மருத்துவமனை வாயிலில் பூஜை செய்வது; பூசணிக்காய்களை உடைப்பது; அ.தி.மு.க தொண்டர்களின் வருகை போன்றவற்றால், அப்போலோவின் இயல்பு வாழ்க்கையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியில் பரவுகிறது. 

“ வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதால், முதல்வர் கார்டன் திரும்ப வேண்டும் என்பதில் அப்போலோ மருத்துவமனையும் உறுதியாக இருக்கிறது. ஆனால், பிஸியோதெரபி சிகிச்சை உள்பட நிலைமை முழுமையாக சீரடைந்த பிறகே, கார்டன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். இப்படியொரு சூழலுக்கு இதுவரையில் அப்போலோ நிர்வாகம் ஆட்பட்டதில்லை. இதையொட்டியே, மூன்று முறைக்கும் மேல் மீடியாக்களிடம் பேசிவிட்டார் அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி. ஒவ்வொருமுறையும், ‘ முதல்வர் நலமுடன் இருக்கிறார். வீடு திரும்புவதை அவரே உறுதி செய்வார்’ எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடியே, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கிறார் சசிகலா” என விவரித்தார் மருத்துவமனை ஊழியர் ஒருவர். 

“ மருத்துவ சிகிச்சைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாக திவாகரன், தினகரன் உள்பட சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் அப்போலோவை வலம் வந்தனர். முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மருத்துவமனை வாசலில் தவமிருந்துவிட்டுக் கிளம்பினார். முதல்வர் அனுமதிக்கப்பட்டிந்த தளத்துக்குள் அவரை அனுமதிக்கவில்லை. இதுநாள் வரையில் முதல்வரின் கோபப் பார்வையில் இருந்தவர்கள், மீண்டும் கார்டன் வட்டாரத்திற்கு வருவதை அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டிருந்தனர் சீனியர்கள் சிலர். இதனால், அ.தி.மு.க வட்டாரத்தில் கூடுதல் பதற்றமும் ஏற்பட்டது. தற்போது முதல்வர் குணமடைந்துவிட்டதால், ‘ யாரும் அப்போலோவுக்கு வர வேண்டாம்’ எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் சசிகலா” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம்,

“சிகிச்சை தொடங்கிய நாள் முதலாக டாக்டர் சிவக்குமார் முதல்வருக்கு உறுதுணையாக இருந்து வந்தார். அதன்பிறகு, திவாகரன் மகள் ராஜமாதங்கி, டாக்டர் விக்ரம் ஆகியோர் உதவிக்கு வந்தனர். இவையெல்லாம் எந்த விமர்சனத்தையும் எழுப்பவில்லை. இவர்கள் மீது முதல்வருக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஆனால், சசிகலாவின் சகோதரர்கள் வருகை குறித்து முதல்வரின் கவனத்துக்குத் தகவல் சென்றால், தேவையற்ற விளைவுகள் ஏற்படும் என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறார் சசிகலா. அதிலும், முதல்வரின் செயலர்களுக்கு சசிகலா புஷ்பா எழுதிய கடிதமும் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழக முதல்வரின் கவனத்துக்கு’ என எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், முதல்வரின் செயலர் வெங்கட் ரமணன் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறார். 

அந்தக் கடிதத்தில், ‘தாங்கள் சிகிச்சையில் இருந்தபோது தஞ்சாவூரில் சின்னம்மா பேரவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவை முன்னிறுத்தும் வேலைகளும் நடந்தன. உங்களுக்கு எதிராக தீட்டப்பட்ட திட்டங்களை நான் முறியடித்தேன். எனக்கு எதிராக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்களிடம் அறிக்கை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டனர். நான் தங்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், யாரும் என்னை எதிர்க்கவில்லை. இப்போதும் உங்கள் அருகில் உள்ளவர்கள் மீது தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சி எதுவும் எனக்குக் கிடையாது. அரசியல்ரீதியாகத்தான் அவர்களை எதிர்க்கிறேன்’ என விவரித்துவிட்டு, முதல்வர் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் அவரைச் சுற்றி நடந்த சம்பவங்களையும் தொகுத்து எழுதியிருக்கிறார். கார்டன் முகவரிக்கு அனுப்பினால் மறைத்துவிடுவார்கள் என்பதால், அரசு செயலர்களுக்கு அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா. இப்படியொரு கடிதத்தை முதல்வரின் பார்வையில் இருந்து மறைப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார்குடி உறவுகள், மருத்துவமனையை வளைய வந்தால் சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் எதிர்கொள்கிறார் சசிகலா” என்றார் விரிவாக. 

இந்நிலையில், நாடாளுமன்ற உரிமைக் குழுவின் கவனத்துக்கு புகார் மனு ஒன்றையும் அனுப்பியிருக்கிறார் சசிகலா புஷ்பா. அந்த மனுவில், ‘ என் மீது தொடர்ச்சியான பொய் வழக்குகளைத் தொடர்ந்து வருகிறது அ.தி.மு.க அரசு. அடிப்படை முகாந்திரம் இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. எனக்கு எதிராக ஆஜரான வக்கீல் ஒருவரின் வீட்டை நான் தாக்கியதாக வழக்கில் சேர்த்துள்ளனர். அந்த வழக்கறிஞர் வீட்டில் சி.சி.டி.வி கேமரா உள்ளது. அதை ஆய்வு செய்தாலே உண்மை புரியும். இந்த வழக்கில் பதியப்பட்ட முதல் எஃப்.ஐ.ஆரில், ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். என்னை அலைக்கழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, வழக்கில் என்னையும் சேர்த்துவிட்டனர். இதுகுறித்து தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். “ நாடாளுமன்ற உரிமைக் குழுவில் சி.பி.எம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கனிமொழி போன்றவர்கள் இருக்கின்றனர். எனவே, தமிழக உள்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம். அரசு செயலர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒருபுறம், நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மறுபுறம் என சசிகலாவுக்கு எதிரான அரசியலைக் கூர்மைப்படுத்திக் கொண்டே வருகிறார் சசிகலா புஷ்பா” என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

- ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close