Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆலய வழிபாடும்...ஆய்வுப்பணியும்: தமிழக அமைச்சர்களின் அப்டேட்ஸ்!

                   அமைச்சர்

ப்போலோ மருத்துவமனையில், தமிழக முதல்வர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 70 நாட்கள் கடந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் ஆலயங்களில் வழிபடுவது, ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது என்று தினமும் பிசியாக இருக்கிறார்கள்.இதனால் தலைமைச் செயலகமும் சென்னையின் முக்கிய கோயில்களும் வாரம் முழுக்க பரபரப்பில் உள்ளன. ஆனால் இதெல்லாம் நாங்கள் இருக்கிறோம் என்பதைக் காட்டும் விதமாக சில அமைச்சர்கள் மட்டும் செய்யும் கண்துடைப்பு என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வருவதும்,தேர்தலில் சீட் பெற்று வென்று அமைச்சராக வலம் வருவதெல்லாம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.எம்.ஜி.ஆர். காலம் தொட்டு அதிமுகவின் உறுப்பினராக இருக்கும் 'ரத்தத்தின் ரத்தங்கள்' லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.அவர்களைத் தாண்டியும் சில ஆண்டுகளே அதிமுக உறுப்பினராக இருந்த நபர்கள் தமக்குத் தெரிந்த பல்வேறு 'உள்ளடிகளை' நடத்தி குறுகிய காலத்தில் அமைச்சர் அந்தஸ்து பெற்றும் விடுகிறார்கள்.இதெல்லாம் அதிமுகவில் சாதாரணம் என்பதை கட்சியின் சீனியர்கள் மிக எளிதாக எடுத்துக்கொள்ளவும் பழகிவிட்டார்கள்.

இதெல்லாம் 'அம்மா' அருள் பெற்றால் மட்டும் சாத்தியமில்லை, மன்னார்குடி டானிக்கும் வேண்டும் என்பதை அவர்கள் அறிந்தவர்கள்தான். இரண்டும் சாத்தியமாகும்போது அதிகாரம் அவர்களுக்குப் பரிசாக கிடைக்கும். இதில் ஒன்று கூடினாலும் குறைந்தாலும் அது அவர்களை செல்லாக்காசு நிலைக்குத் தள்ளிவிடும் என்பது அதிமுகவின் கடைக்கோடித் தொண்டனுக்கும் அத்துப்படி.சிலருக்கு இரண்டும் இருந்தும் பதவிகளை அலங்கரிக்காமல் இருப்பது புரியாத புதிர்தான்.வேறு கட்சிக்கும் செல்லாமல் போயஸ் கார்டனுக்கும் லாயிட்ஸ் ரோடுக்கும் அடிக்கடி சென்றவர்கள் இப்போது அன்றாடம் அப்போலோ சென்றுவிடுகிறார்கள்.

            அமைச்சர்

இப்போதுள்ள அதிமுக அமைச்சர்கள் மத்தியில் சில பிரிவுகள் இருப்பதாக அந்தக் கட்சியினர் மத்தியிலேயே பேச்சுக்கள் உலாவருகின்றன.முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூடுதலாகக் கவனித்தாலும் முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திடுவதில்லை, அப்படியே கையெழுத்திட்டாலும் அது தலைமைச் செயலாளர் காட்டிடும் இடங்களில்தான் அவர் கையெழுத்திடுகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.அதே போல ஓபிஎஸ் சொல்லுக்கு மயங்காத அமைச்சர்கள்கூட எடப்பாடி சொல்லுக்கு தலையாட்டுகிறார்கள் என்றும்,தென்மாவட்ட அமைச்சர்கள் மற்றும் கொங்கு பெல்ட் அமைச்சர்கள் என்ற உள் மோதல் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்றும் கோட்டை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

இந்த நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக எந்த அமைச்சரும் பேச இயலவில்லை என்பதால் தமது துறையில் என்ன நடக்கிறது, அதில்  நாம் என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள சரியான முகாம் இல்லாமல் எல்லா அமைச்சர்களுமே தவிக்கிறார்கள்.இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் மட்டும்தான் விதிவிலக்கு என்றும், அவருக்கு டெல்லி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அது முதல்வரின் ஒப்புதலோடு நடந்தது என்றும் அதிமுகவின் சீனியர்கள் தமக்குள் பரபரப்பாகப் பேசிவருகிறார்கள். இந்த வித்தியாச சூழலில் எந்தவித 'இன்னர் பாலிடிக்ஸ்' நடவடிக்கையிலும் இறங்காமல், அல்லது அதையெல்லாம் செய்யத் தெரியாத அமைச்சர்கள் கோயிலை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.  

           அமைச்சர்

சென்னையின் முக்கிய கோயில்களான காளிகாம்பாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலை கபாலீசுவரர் கோயில், சாய்பாபா கோயில், ஆஞ்சநேயர் கோயில் என்று எல்லா பிரபல கோயில்களுக்கும் வாரந்தோறும் அட்டவணைப் போட்டு அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக ஆலய வழிபாட்டுப் பணியில் மும்முரமாகியுள்ளனர். இது மற்ற அமைச்சர்களையும் கவனிக்க வைத்துள்ளது.முதல்வர் உடல்நலம் பெறவேண்டி தமிழகம் முழுக்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், வேண்டுதல் பிரார்த்தனைகள் நடந்தன.அனைத்தையும் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.கள், எம்.பி.கள் என்று முக்கிய பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.அதிமுக மகளிரணியினர் அப்போலோ வாசலில் விதவிதமான ஹோமங்கள் நடத்தினர். (அவர்களின் ஹோமங்கள் வழிபாடுகள் அப்போலோ ரெட்டியை கொஞ்சம் கடுப்படிக்க, இப்போது அந்த இடத்தில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு அப்போலோ ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.)

            

இப்போது தமது துறை சார்ந்த பணிகளைக் கவனிக்கிறார்களோ இல்லையோ அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன்,கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் காளிகாம்பாள் கோயில் தொடங்கி சென்னையின் பிரதான கோயில்களில் செவ்வாய், வெள்ளி, சனி என்று ஆஜராகிவிடுகிறார்கள். முதல்வர் பூரண உடல்நலம் பெறவேண்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன என்று செய்திக்குறிப்புகளும் வெளியாகின்றன. ஆனால் அவர்களின் உள்மனதில், தமது பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்றுதான் வேண்டுகிறார்கள் என்று கோட்டை அதிகாரிகள் கிசுகிசுக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கவும் செய்கிறது.இவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாய்ஸ். அதனால் இவர்களிடம் மன்னார்குடி தரப்பு தள்ளி இருக்குமாம். இதுவே இப்போது இந்த மூவரின் ஆலய பிரவேசத்துக்குக் காரணம் என்கிறார்கள் கார்டனை நன்கு அறிந்தவர்கள்.

அடுத்து ஆய்வுக்கூட்டம் நடத்தி அரசு சுறுசுறுப்பாக இயங்குவதாக மீடியாக்களில் தோற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் சில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அதில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அடிக்கடி ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் முயற்சியில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது முதல்வர் ஜெயலலிதா இல்லம் திரும்பிய பின்னர்தான் தெரியவரும். ஆனால் தங்களைப் பற்றி செய்திகள் வரவேண்டும் என்ற இலக்கை அடைந்துள்ளார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

               

இது நவம்பர் மாதம் என்பதால்,இலவச வேட்டி சேலைகள்,சிறப்பு வழங்கல் திட்டம் என்பது போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு உரிய ஆணைகள், நிதியொதுக்கீடுகள் இந்த மாதமே பிறப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் யார் ஆணை பிறப்பிப்பது,யார் கோப்புகளில் கையெழுத்திடுவது என்ற குழப்பங்கள் அமைச்சர்கள் மத்தியிலும், துறை சார் செயலாளர்கள் மத்தியிலும் பலமாக நிலவுகிறது.இப்போதே இதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டால்தான் வரும் பொங்கல் பண்டிகையின்போது,ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய இலவசங்கள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ஆனால் அது சம்பந்தமாக தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்படும் கோப்புகள் விரைவாக சுவற்றில் அடித்த பந்துபோல அனுப்பிய துறை அதிகாரிகளுக்கே வந்துவிடுகின்றன என்று தலைமை செயலக அதிகாரிகள் மத்தியில் புலம்பல்கள் எழுந்துள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய தலைமைச் செயலக உயரதிகாரி ஒருவர்,"யார்,யாருக்கு கோப்புகள் அனுப்பவேண்டும், அவற்றில் யார் கையொப்பம் இடவேண்டும் என்று தெரியாமலே நூற்றுக்கணக்கான கோப்புகள் முடங்கிப்போயுள்ளன.இதனால் மக்களுக்கு செல்லவேண்டிய பயன்கள் ஏராளமானவை தாமதமாகியுள்ளன. உதாரணத்துக்கு ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.காரணம் அவற்றை கொள்முதல் செய்வதில் உள்ள நிர்வாக சிக்கல்கள். அதைக் களைய வேண்டியது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கோப்புகளை யாருக்கு அனுப்புவது என்பது தெரியாமல் இருக்கிறது."என்றார் தெளிவாக.

- சி.தேவராஜன்
 

எடிட்டர் சாய்ஸ்