Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழை பெய்யக்கூடும் என்றால் விடுமுறை... கட்டடம் இடிவதைப் பற்றிக் கவலை இல்லை! - கரூர் அவலம்

கரூர் : தமிழகத்தின் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிற அதே நேரத்தில், பாதி இடிந்து விழுந்து, மீதி கட்டடமும் இடிந்து விழும் என அஞ்சப்படுகிற கட்டடத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

கட்டிட வசதி சரி இல்லாத காரணத்தினால், குடந்தை தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 பிஞ்சுகள் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்துக்குள்ளாக்கியது. ஆனால் சம்பவம் நடந்த பின்னர் தான் அதைப்பற்றி கவலைப்படுகிறோமே தவிர, அதற்கு அதைப்பற்றி துளியும் கவலை கொள்வதில்லை.

அப்படி கண்டுகொள்ளப்படாத பள்ளி தான் கரூர் மாவட்டம்,கள்ளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த பள்ளியில் 31 மாணவ, மாணவியர்கள் பயில்கிறார்கள். மிக பழமையான இந்த பள்ளிக்கட்டடத்தின் ஒரு பக்க சுவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் அதிர்ஷ்டவசமாக 31 மாணவர்கள் தப்பினர்.

மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. பாதுகாப்பற்ற அந்த கட்டடத்திலேயே வகுப்புகள்ள் இயங்கி வருகிறது. ஏற்கனவே சுவர் இடிந்து விழுந்த நிலையி,க் எப்போது பள்ளி கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சமும் மாணவர்கள், பெற்றோரிடமும் மேலோங்கி இருக்கிறது. எந்நேரமும் இடிந்துவிழ தயாராக இருக்கும் அந்த கட்டிடத்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற திக்திக் மனதோடு பெற்றோர்கள் இருக்கின்றனர்.

அந்த பள்ளிக்கு சென்று நேரில் விசாரித்தோம். மிக மோசமாகவே இருந்தது. ஏற்கனவே ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்த கட்டடத்தில் எப்படி வகுப்புகளை நடத்துகிறீர்கள் என்பது குறித்து பள்ளியில் இருந்த சாந்தி,சித்ரா என்ற இரு ஆசிரியைகளிடம் கேட்டோம்.

 "நாங்க என்ன பண்றது சார். நாங்களும் பல தடவை ஊராட்சிமன்ற தலைவரிடமும்,கல்வித்துறை அதிகாரிகளிடமும் சொல்லீட்டோம். கடந்த ரெண்டு வருஷமாகவே  கட்டிடத்தின் நிலை  மோசமாகத்தான் இருக்கு. அவங்க யாரும் கண்டுக்கலை. இந்த நேரத்துல தான் கட்டடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துடுச்சு. வேற இடம் இல்லாததால்,அதே கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்திட்டு இருக்கோம். இன்னைக்கு மழை தொடங்கியதால் லீவு விட்டுட்டோம்" என்றார்கள்.
 
அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் பேசினோம்.   "புது கட்டடம் கட்ட நிதி ஒதுக்கு ஒரு வருஷத்துக்கு மேல ஆவுது. ஆனால்,கட்டடம் கட்டலை. இந்த கட்டடம் எப்ப வேணும்னாலும் இடிந்து விழலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தோம். அதேபோல்,ஒரு பக்க சுவர் இடிஞ்சு விழுந்துச்சு. நல்ல வேளையாக பள்ளி லீவு நாளில் இடிஞ்சு விழுந்துச்சு. இல்லைன்னா, மாணவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். அந்த ஒரு பக்க சுவர் அருகே முற்களை அள்ளிப்போட்டு மறைச்சு வச்சு அந்த கட்டிடத்திற்குள்ளேயே மாணவர்களுக்கு பாடம் நடத்துறாங்க. இடிந்து விழுந்த செங்கற்களைகூட அப்புறப்படுத்தலை. அந்த செங்கற்களுக்குள் பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துகள் போய் அடைஞ்சு இருக்குனு சொல்றாங்க.

ஏற்கனவே அந்த கட்டிடத்தின் மத்த சுவர்களும் இடியும் நிலையில் இருப்பதால்,மழை வேறு பெய்வதாலும் அந்த கட்டடத்திலேயே பாடம் நடத்துவது ஆபத்தானது. ஏதாவது அசம்பாவிதம் நடக்குறதுக்குள்ள அதிகாரிகள் மாற்று ஏற்பாடு பண்ணனும்," என்றனர்.

மழை வந்தால் விடுமுறை கொடுப்பது மட்டும் போதாது. மழையில் நனைவதை விட கட்டடம் இடிந்து மாணவர்கள் உள்ளே சிக்கினால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கவனிப்பார்களா அதிகாரிகள்?

- துரை.வேம்பையன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ