Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு காய்ச்சலுக்கு இங்கு சிகிச்சை இல்லை... அரசு மருத்துவமனையில் துரத்தியடிக்கப்பட்ட பெற்றோர் !

கரூர் : டெங்கு காய்ச்சலுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என அரசு மருத்துவமனையில் இருந்து தம்பதியினர் விரட்டியடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

"டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் தேவையான பரிசோதனைக் கருவிகள், மருந்து, மாத்திரைகள், ரத்தம், ரத்த தட்டணுக்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்' எனச்சொல்லி இருந்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் நாட்டு நடப்ப் வேறாக இருக்கிறது.

டெங்கு பாதித்த தங்கள் குழந்தையை கரூர் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனைகளுக்கு தம்பதியினர் அழைத்துச் செல்ல, 'இங்கு டெங்குவுக்கு எல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது' என்று விரட்டி இருக்கிறார்கள் மருத்துவர்கள். இதையடுத்து வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் குழந்தையை தனியார் மருத்துவனையில் அனுமதித்திருக்கிறார்கள் அந்த பெற்றோர்.

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள செந்திலவாடியை சேர்ந்த ரஞ்சித், மலர்விழி தம்பதிக்குதான் இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. ஒன்றாவது வகுப்பு படிக்கும் அவர்களது மகள் லட்சயாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு காய்ச்சல் வந்திருக்கிறது. 'சாதாரண காய்ச்சலாகதான் இருக்கும்' என்று நினைத்த அவர்கள்,ஜூரத்திற்கு மாத்திரை கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,அதன் பின்னரும் காய்ச்சல் வாட்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் மாணவி மயங்கி விழ.. பதறியடித்துக் கொண்டு குழந்தையை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

லட்சயாவை பரிசோதித்த மருத்துவர்கள், "குழந்தைக்கு டெங்கு காய்ச்சல். ஆனால் இங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை. கரூருக்கு கூட்டீட்டு போங்க' என சொல்லி இருக்கிறார்கள். இதனால் அவர்களின் பதற்றம் மேலும் அதிகரித்தது. குழந்தையை கரூர் கொண்டு சென்றனர். அங்கும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

'குழந்தை கிரிட்டிக்கலான நிலைமையில இருக்கு. அதனால்,எங்களால் எதுவும் செய்ய முடியாது' என்று கையை விரித்திருக்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் பதறிய பெற்றோர், என்ன செய்வது என தெரியாமல் இருக்க தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள். மும்பையில ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தர் இருக்கிறார் என அவர்கள் சொல்ல... மும்பைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார்கள். இதற்கு ஆன செலவு 3 லட்சமாம். வட்டிக்கு கடன் வாங்கித்த்தான் மகளை காப்பற்றியதாக நம்மிடம் சொன்னார்கள் அந்த பெற்றோர்.

 "இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் எங்களை துரத்தி அடிச்சாங்க. கொஞ்சம் காலம் கடத்தி இருந்தாலும்,எங்க பிள்ளை இப்போ எங்களோட இருந்திருக்க மாட்டா. 'டெங்குவை தடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்கு'ன்னு சுகாதாரத்துறையில் விளம்பரம் பண்றாங்க. ஆனால்,நேரடியா என்ன நடக்குதுங்கிறதுக்கு எங்க சம்பவமே உதாரணம். எப்படியோ கடனவுடன வாங்கி மும்பைக்கு போய் எங்க குழந்தையை காப்பாத்திட்டோம்.

எதுக்கு முடியாம கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு போறவங்க நிலைமையை யோசிச்சா கஷ்டமா இருக்கு சார். இனியாவது அரசு மருத்துவமனைகள் இந்த மாதிரி மோசமா இருக்க கூடாதுங்கறதுக்காகத் தான் இதை சொல்றேன். சும்மா டெங்குவை தடுப்பு பிரச்சாரம்னு சொல்லீட்டு இருக்காங்க. ஆனா உண்மையில் கொசுவை ஒழிக்கவோ, சிகிச்சைக்கான வசதியோ சுத்தமா இல்லை," என்றனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க... கரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராம்ராஜனை தொடர்பு கொண்டோம். பலமுறை முயற்சித்தும் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

- துரை.வேம்பையன்,

படங்கள்: தே.தீட்ஷித்.

எடிட்டர் சாய்ஸ்