Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்குலாப் : ஒரு கவிதை பட்டறையின் அஸ்தமனம்...!

இன்குலாப்

மனுஷங்கடா... நாங்க மனுஷங்கடா...

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது

சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெய் ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க

எரியும் போது.... எவன் மசுரப் புடுங்கப் போனீங்க...?

வெண்மணித் துயரம் பற்றிய ஆத்திரமும் ஆவேசமும் தெறிக்கும் இந்தப் பாடல் எழுபதுகளிலிருந்து இன்றுவரை எல்லா முற்போக்கு மேடைகளிலும் பாடப்பட்டு வருகிறது. காற்று மண்டலத்தின் செவிப்பறை கிழித்து, நரம்புகளை அதிர வைத்து, முறுக்கேற்றி, ரத்தத்தைச் சூடாக்கிப், பாதிக்கப்பட்டவனைக் களத்தில் குதிக்க வைக்கும் இந்தப் போர்ப் பரணியை இயற்றியவர் இன்குலாப். இன்குலாப் என்றாலே புரட்சி என்றுதான் அர்த்தம்.

‘எனது நிறத்திலும், மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகும் வரை பூப்பேன்’ என்று பிரகடனப் படுத்தியவர் அப்படியே வாழ்ந்தார்.

விழிகளின் எரியும் சுடர்களையும் போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் கவிதையாய் மொழி பெயர்த்தவர். ‘நியாயச் சூட்டால் சிவந்த கண்கள், உரிமை கேட்டுத் துடிக்கும் உதடுகள், கொடுமைகளுக்கு எதிராக உயரும் கைகள் இவையே எனது பேனாவை இயக்கும் சக்திகள்’ என்றவர்.

விடுதலையில்லாமல் வாழ்க்கை சுவைக்காது. போராட்டம் இல்லாமல் விடுதலை வாய்க்காது என்பதிலே தெளிவாக இருந்தவர் இன்குலாப். கவிதைகளை வாத்தியக் கருவிகளுக்கு வண்ணங்களாகப் பயன்படுத்தாமல் போராளிகளின் ஆயுதங்களாக மாற்றித் தந்தவர். சமூகக் கொடுமைகள் மீது வினா தொடுக்கவும் விசாரணை செய்யவும் போலிகளின் அறிமுகத்தையும் பொய்யர்களின் நரிமுகத்தையும் தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்தவும் தன் கவிதைகளைப் பயன்படுத்தியவர்.

‘ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது’ என்பார் மாசேதுங். இவரது ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் உழைக்கும் வர்க்கத்தின் வியர்வை இருக்கிறது. கனவு இருக்கிறது. சமூகத்தின் மனசாட்சி இருக்கிறது. பாட்டாளி மக்களை அரவணைப்பது, ஆதிக்க சக்திகளை நிர்மூலமாக்குவது என்ற இலட்சியத்துடன் எழுதத் துவங்கியவர். அவருடைய முதற்கவிதையிலிருந்து இறுதி எழுத்து வரை எதிர்க்குரல்களாகவே ஒலிக்கின்றன. இப்படி ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தடம் மாறாமல் தடுமாறாமல் ஒரே அலைவரிசையில் எழுதியவர்கள் யாரேனும் உள்ளனரா?

 

துவக்கத்தில் தமக்கு ஒரு இடதுசாரி அடையாளம் வேண்டுமென்பதற்காக எல்லோருமே புரட்சிகரமாக எழுதுவார்கள்.  ஆனால் காலப்போக்கில் சின்னத்திரை ஆசை, வண்ணத்திரை ஆசை, ஊடக விளம்பரம், புகழ், பணம், பட்டம் இவற்றிற்காகத் திசை மாறி விடுவார்கள். ஆனால் இவர் இறுதிமூச்சுவரை வைராக்கியமுடன் வாழ்ந்தவர். எதிர்ப்புக் குரலை அழகியலோடு பதிவு செய்தவர்.  அவரது அரசியல் கருத்துகளின் எதிரொலியாகவே அவரது படைப்புகள் அனைத்தும் விளங்குகின்றன.

இராமநாதபுரம் கீழக்கரையில் 5.4.1944 அன்று பிறந்தவர். இயற்பெயர் சாகுல் அமீது. தாயார் ஆயிசா அம்மாள். தந்தை சீனி முகமது. கீழக்கரை அரசினர் அமீதிய உயர்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்தவர். புகுமுக வகுப்பு சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் நினைவுக் கல்லுரியிலும் பட்ட வகுப்பு மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பயின்றவர். இசைப்பாடல்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் அடங்கிய 7 கவிதைத் தொகுதிகளும், 7 கட்டுரைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு நாடகமும் (ஔவை) தந்துள்ளார். முன்னாள் அமைச்சர் கா. காளிமுத்து இவரது பள்ளித் தோழர்.

’நாய் நாக்கைப்போல நயந்து குலையாமல் காளி நாக்கிலிருந்து கனல் எடுத்த சொல்வேண்டும். பொன்துகளுக்குள்ளே புரண்டு கிடக்காமல் மண்துகளை மின்துகளாய் மாற்றுகிற சொல்வேண்டும்’ எனக் கவிஞர் நவகவி வேண்டுவார். அத்தகைய சொற்கள் இன்குலாப்புக்கு வாய்த்திருக்கின்றன.

‘சிறகு முளைத்து விதையொன்று அலையும்... முளைக்க ஒருபிடி மண்தேடி’ என்று ஈழப் போராளிகளுக்காக அவர் எழுதிய கவிதை மறக்க முடியாதது.

நஸ்ருல் இஸ்லாமின் தமிழக வடிவம். மெய்யான புரட்சிக் கவி. நிலப்பிரபுகளுக்கு எதிராக, பெருமுதலாளிகளுக்கு எதிராக அவர் உருவாக்கிய கவிதாயுதங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்திலாவது அவற்றைப் பயன்படுத்துவார்களா?

- தஞ்சை தாமு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close