Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் சங்க விவகாரம்..கேள்வியை சிவாஜியிடமிருந்து தொடங்க வேண்டும்! - கொதிக்கும் ராதிகா சரத்

நடிகர் சங்கம்

டந்த நவம்பர் 28-ம் தேதி நடிகர் சங்க மைதானத்தில் நடத்தப்பட்ட நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதாரவி இருவரும் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் திடீரென கலவர பூமியானது மைதானம். நடிகர் கருணாஸின் ஆட்களுக்கும் நடிகர் சங்க உறுப்பினருக்கான பழைய அட்டையை வைத்திருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம்- தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த நிரந்தர நீக்கம் குறித்து சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என சரத் தரப்பினர் புகார் கூறுகிறார்கள். நடிகர் சங்க இடம், SPI சினிமா விவகாரம், நிரந்தர அறங்காவலர்கள் பிரச்னை என பலதரப்பட்ட சிக்கல்களைச் சந்தித்துவரும் நடிகர் சங்கம் இப்போது பிரச்னையின் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகர் சங்க உறுப்பினருமான நடிகை ராதிகா, "நடிகர் சங்க விவகாரம் குறித்து நான் கேள்வி கேட்பேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கிரிக்கேட் விளையாடி 14 கோடி திரட்டி இருக்கிறார்கள். ஆனால் 6 கோடி அதற்காக செலவழித்து இருக்கிறார்கள். நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு கிரிக்கேட் விளையாடியதற்காக பல லகரங்கள் செலவானதாக கணக்கு காட்டுகிறார்கள். எந்த நடிகர் மேக்கப் போட்டுக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார்? அதற்கு எப்படி பல லட்சம் ரூபாய் செலவானது என்று எனக்கு விளக்கம் அளித்தாக வேண்டும். இவ்வளவு நாட்கள் நானும் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். என் பணமும் அதில் இருக்கிறது என்னும் அடிப்படையில் எனக்கு விளக்கம் தேவை”.

”கட்டடம் கட்டக் காலதாமதமாகிறது ஆனால் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிப்போம் கூடவே சங்கத்தின் கடனை அடைத்துள்ளோம் என்கிறார்கள். தலைவர் பொறுப்பிலிருந்து சரத் விலகும்போது 1 கோடியே 25 லட்சம் பணம் வைத்துவிட்டுவந்தார். நந்தா ப்ளாட்ஸ் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பெருமானமுடையது. இவ்வளவு இருக்கும்போது இவர்கள் எதற்கு பணம் வாங்கிக் கடன் அடைக்க வேண்டும். கடனை அடைத்தோம் என்று விஷால் சொல்லுவதே தவறு.”

”மேலும் ராதாரவியைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?. நடிகர் சங்கத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜயகாந்துடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார். நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர் நினைத்திருந்தால் அப்போதே விலகி இருக்கலாம். ஆனால் 2015-ல் சரத் தலைவராக இருந்த காலம் வரை சங்கத்துக்காகதான் உழைத்தார். சரத் மீதும் ராதாரவி மீதும் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டி தற்போது முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கம் செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை அவர்கள் தலைமையேற்க தகுதியற்றவர்கள்”.

“சிவாஜி கணேசன் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தபோது, வாரிசுகள்தான் சங்கப் பொறுப்புகளுக்கு உரிமை என்று மாற்றம் கொண்டுவந்தார். அதனை எஸ்.எஸ்.ஆர் தவறு என்று சுட்டிக்காட்ட பின்னர் சிவாஜி அதனை மாற்றி அமைத்தார்.  இந்த வரலாறு கார்த்திக்கு தெரியவில்லை என்றாலும் வரலாறு பேசும் அவரது அப்பா சிவகுமாருக்கு நன்கு தெரியும். இவர்கள் கேள்வி கேட்பதை சிவாஜி சாரிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்படிச் செய்ய முடியுமா?”.

”நடிகர் சங்கத் தேர்தல் வந்தபோது கூட சிவக்குமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன்.சரத்குமாருக்கு போட்டியிடவே விருப்பமில்லை என்றும் தெரிவித்தேன். சிவக்குமார் தன் கையில் எதுவும் இல்லை, தன் பிள்ளைகள்தான் இந்த விவகாரத்தைப் பார்த்துகொள்கிறார்கள் என்றார். விஷாலையும் சந்திக்கச் சென்றேன். ஆனால், அதற்குள் கார்த்தி விஷாலுக்கு போன் செய்து என்னிடம் பேசவேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.விஷால் நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பிறகு அதில்தான் தன் திருமணம் என்று கூறி இருக்கிறார். அவர் கட்டடம் கட்டுவார் என்பதை கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணம் செய்துகொள்வார் என்பதை எல்லாம் நம்ப முடியாது. நாளுக்கு நாள் இப்படியான தனிப்பட்ட தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இனிமேல் இதனை சும்மா விடுவதற்கில்லை” என்று படபடப்பாகப் பேசினார்”.

- ஐஷ்வர்யா
படங்கள்: நிவேதன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ