Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஒற்றுமையாக இருங்கள்’ - கருணாநிதி மகன்களுக்கு அன்பழகன் அட்வைஸ்

சென்னை காவேரி மருத்துவமனையில் இரண்டாம் நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. ' குடும்ப பஞ்சாயத்து உச்சகட்ட மோதலாக வெடித்துக் கொண்டிருந்தது. அன்பழகன் தலையீட்டால் நிலைமை முடிவுக்கு வந்திருக்கிறது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைவு (ஆட்டோ இம்யூன்) காரணமாக, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். உடல் நலிவுற்ற நாளில் இருந்து கருணாநிதியைப் பார்ப்பதற்காக, நான்கு முறைக்கும் மேல் கோபாலபுரம் வந்துவிட்டார் மு.க.அழகிரி. தொடர்ச்சியான இந்த சந்திப்புகளை ஸ்டாலின் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை. ' அழகிரி கட்சிக்குள் இணைவதை முறைப்படி அறிவிப்பார் கலைஞர்' என்றெல்லாம் தகவல் வெளியானது. " கட்சிக்குள் அழகிரி தலையெடுப்பதை அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமே விரும்புகின்றனர். பெரும்பாலான உடன்பிறப்புகளுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோள்படியும் கலைஞரின் விருப்பப்படியும் மீண்டும் அழகிரி கட்சிக்குள் சேர்க்கப்பட இருக்கிறார். இதில் எந்தக் குழப்பமும் இல்லை. இப்படியொரு காட்சி அரங்கேறுவதை ஸ்டாலின் தரப்பினர் விரும்பவில்லை. இதையொட்டியே சில சம்பவங்கள் நடந்தன” என விவரித்த அறிவாலய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து, 

“ ஸ்டாலினை மையப்படுத்தியும் கட்சியின் தலைவர் பதவி குறித்தும் வெளியாகும் செய்திகளால் கொந்தளிப்பில் இருந்தார் அழகிரி. ‘ தலைவர் சிகிச்சையில் இருக்கும்போதே, செயல் தலைவர் பதவியை அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. இப்போது அதற்கான அவசரச் சூழல் எங்கே வந்தது?’ என ஆவேசப்பட்டார். ஆனால், ‘ தலைவர் இருக்கும்போதே செயல் தலைவர் பதவியைக் கொண்டு வர வேண்டும்’ என்பதில் பொருளாளர் தரப்பு உறுதியாக இருந்தது. கட்சிக்குள்ளும் குடும்பத்திற்குள்ளும் நிலவும் வார்த்தைப் போர்களால் கலைஞரைப் போலவே, அதிகம் கவலைப்பட்டவர் பேராசிரியர் அன்பழகன். கலைஞருக்கு சிகிச்சை தொடர்வதுபோல, குடும்பத்திற்குள்ளும் பஞ்சாயத்துக்கள் நீண்டு கொண்டே போவதை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார். கட்சியின் எதிர்காலம் மற்றும் தலைவர் குடும்பத்தின் நலன்கள் குறித்தும் விரிவாகவே கலைஞரிடம் விவாதித்தார்.

ஒருகட்டத்தில், ‘ இந்தக் கட்சியை இத்தனை ஆண்டுகாலமாக காப்பாற்றி வந்தது கலைஞர்தான். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுச் சென்றபோது, வேறு ஒருவராக இருந்திருந்தால் கட்சியை விட்டுச் சென்றிருப்பார். எவ்வளவோ எதிர்ப்புகளையும் தோல்வியையும் தாங்கிக் கொண்டு கட்சியை முன்னேற்றியவர் அவர். அவருக்குப் பின்னால் யார் இந்தக் கட்சியை வழிநடத்தப் போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கருணாநிதிக்கு மட்டும் ஸ்டாலின் வாரிசு இல்லை. எனக்கும் அவர்தான் வாரிசு. குடும்பத்தில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான், கட்சி நிர்வாகத்தில் செய்ய வேண்டிய வழிமுறைகளைப் பற்றி முடிவு செய்ய முடியும்’ என கண்டிப்பான குரலில் கொந்தளித்தார் பேராசிரியர். அவரது வார்த்தைகளைத் தாண்டி, பொருளாளர் ஸ்டாலினால் எதுவும் பேச முடியவில்லை” என்றார் விரிவாக. 

“ காவேரி மருத்துவமனையில் கனிமொழியும் ராஜாத்தி அம்மாளும் கலைஞரை கவனித்து வருகின்றனர். சி.ஐ.டி காலனி வீட்டில் இருந்தே உணவுகள் செல்கின்றன. உடலில் உள்ள கொப்புளங்கள் முழுமையாக ஆறுவதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதற்கான மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. காயங்கள் முழுமையாக ஆறிய பின்னரே, கோபாலபுரம் வீட்டிற்குச் செல்வார் கலைஞர். அதற்குள் கட்சி நிர்வாகத்திற்குள் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றரீதியில் செய்திகள் பரவியது. ‘ கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் கோலோச்சிவிடக் கூடாது’ என்ற பயம் சிலரது மனதில் எழுந்துள்ளது. ‘இது தேவையற்றது’ என பேராசிரியர் விளக்கிக் கூறிய பிறகே, கோபாலபுரத்தில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது” என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

நீதிக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘ எத்தனை அம்புகள் தன்னை நோக்கி பாய்ந்தாலும், திராவிட இயக்கத்தை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. போர்வாள்களாக விளங்கிக்கொண்டு இருக்கும் திராவிட கழகமும் தி.மு.க.வும் ஆயிரம் காலத்துப் பயிராகும். இதை யாரும் எளிதில் அறுவடை செய்யமுடியாது’ என்றார். 

‘இந்த வார்த்தைகள் யாரை நோக்கிப் பாய்கின்றன’ என்ற விவாதங்களும் அறிவாலய வட்டாரத்தில் எழாமல் இல்லை.  

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ