Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அரசின் வருவாய் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது!” - நிதி அமைச்சர் சொல்வது உண்மையா?! #TNBudget

 பட்ஜெட் பற்றாக்குறை

மிழக அரசின் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.  அதில், அரசின் வருவாய் பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருப்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு தகவலும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் உரையின்போது, மாநிலத்தின் மொத்த வருவாய், செலவு மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரங்களை எடுத்துரைத்தார். அதன்படி, 2017-18-ம் நிதியாண்டில் அரசின் மொத்த வருவாய் ரூ.1,59,363 கோடி. செலவுகள் - ரூ.1,75,293 கோடி.
வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், மாநில அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருப்பதற்கான காரணமாக, பிற மாநிலங்களில் செயல்படுத்தாத பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதுதான் என்று சொன்னார். அதனால், அரசின் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசின் வரி வருவாயில் குறிப்பாக, வணிகவரி வருவாயில் காணப்பட்டு வந்த குறைவான வளர்ச்சி தொடர்ந்து நீடிப்பதாகவும், கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கிடைக்கக்கூடிய விற்பனை வரி வருவாயும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்து விட்டதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதன்காரணமாக ரூ. 9,154.78 கோடி வருவாய் பற்றாக்குறை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைத்ததும், கடந்த ஜூலை மாதத்தில், சென்ற நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வருவாய் பற்றாக்குறையானது மேலும் அதிகரித்து, ரூ.15,854.47 கோடியாக இருந்தது. உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையின் தாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை அளவு அதிகரித்துள்ளதாக அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 3 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை அளவு 2.96 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தற்போது ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகச் செயல்படுகிறார். சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்து, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகி, எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக டி.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.

சட்டசபையில் பட்ஜெட்அதன்படி, 2017-18-ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை அளவு கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் பெருமளவு உயர்ந்து ரூ.15,934 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 90 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் பற்றாக்குறையாகும். ஏற்கெனவே முந்தைய கால கட்டங்களில் பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிதிப்பற்றாக்குறையால் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், தற்போது வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரித்திருப்பது, வரும் ஆண்டில் திட்ட செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண மக்களுக்கு புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும் வளர்ச்சிக்கான அறிகுறிகள் மிகவும் அருகியே காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவிர, ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை அளவைக் குறைக்கவோ அல்லது நிதி ஆதாரங்களைப் பெருக்கவோ எந்தவொரு திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தையே அளிக்கிறது என்றும் அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவது மாநில அரசின் நிதிநிலை மோசமாகி வருவதையே வெளிப்படுத்துவதாக உள்ளது என்பதே பொருளாதார வல்லுநர்களின் பொதுவான கருத்தாக உள்ள நிலையில், "வருவாய்ப் பற்றாக்குறையால் பாதிப்பு ஏதும் இல்லை; அது கட்டுக்குள் இருக்கிறது" என்று அமைச்சர் தெரிவிப்பது வேடிக்கையான விந்தையாக உள்ளது.

மாநில அரசின் வருவாயைப் பெருக்கி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இனிவரும் காலங்களிலாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- சி.வெங்கட சேது

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close