Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு. மக்கள் சாலைமறியல்!

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடத்திட, கடந்த 13-ம் தேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தேதியை மாற்றி, மார்ச்-17ல் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது.

ஜல்லிக்கட்டு
 

அதன்படி, இன்று ஜல்லிக்கட்டு நடைபெற இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளாக, நோட்டீஸ் விநியோகம், மைக்செட் அறிவிப்பு, காளை பதிவுகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர், விராலிமலையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 4 கி.மீ வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

 தங்கள் பகுதியில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டுக்குத் தடைபோடுவதாக  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது  குற்றம் சாட்டிய மக்கள், அதிரடிப்படை போலீஸார் மீது பாட்டில் வீசியதுடன், போலீஸ் வாகனக் கண்ணாடிகளையும் உடைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் குவிந்ததால், மத்தியமண்டல ஐஜி வரதராஜுலு அங்கு விரைந்தார்.

விராலிமலையில் போராட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 3-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களை விராலிமலைப் பகுதிகளில் போலிஸார் தேடிவருவதால், விராலிமலையில் பதட்டம் நிலவுகிறது.

- சி.ய.ஆனந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close