Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாதான் பணம் வாங்கினார்... இல்லை, மாதவன்தான் பணம் வாங்கினார்..! - இது புது கலாட்டா

தீபா

''எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் என் மனைவிக்கு பக்கபலமாக இருப்பேன். தீய சக்திகளை என் மனைவியிடமிருந்து விரட்டியடிப்பேன்'' என்றெல்லாம் சொல்லி வந்த ('எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' பொதுச்செயலாளர்) தீபாவின் கணவர் மாதவன் தற்போது தனியாகப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்துவிட்டார். இதையடுத்து, தீபா பணம் வாங்கிவிட்டதாக மாதவன் தரப்பினரும், மாதவன் பணம் வாங்கி விட்டதாக தீபா தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சில தினங்களுக்கு முன் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யை ஆரம்பித்தார். கட்சியின் நிர்வாகிகள் பட்டியலையும் தீபாவே அறிவித்தார். ஆனால், 'அந்தப் பட்டியலில் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்த்துள்ளார். கட்சிக்காக பணியாற்றியவர்கள் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை' என்று தொண்டர்கள் அவர் வீட்டின் முன் போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டதாக மற்றொரு நிர்வாகிகள் பட்டியல் வெளிவந்தது. ஆனால், அதிலும் குறிப்பிட்ட சிலரது பெயர்கள் விடுபட்டுப் போனதாகக் கூறி  கொந்தளித்த தொண்டர்களில் பலர், 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை'யை விட்டு வெளியேறி மற்றக் கட்சிகளுக்கு சென்றனர். 'கணவன் - மனைவிக்குள் இருக்கும் பிரச்னையில் கட்சித் தொண்டர்களை இருவருமே சேர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்' என்று கொதித்தனர்.

மாதவன் இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த மாதவன் "கட்சி நிர்வாகிகள் குறித்து நான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கட்சியை பொறுத்தவரை முடிவு எடுக்கும் அதிகாரம் தீபாவுக்கு மட்டுமே இருக்கிறது. எங்களைச் சுற்றி ஒரு சதிகார கும்பலே இருக்கிறது. அந்த கும்பல் எங்களை எப்போதும் அழிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் எனக்கும், தீபாவுக்கும் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. அவருக்கு ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் நான் கண்டிப்பாக ஆலோசனை வழங்குவேன்" என்று கூறினார். மாதவனின் இந்தப் பேட்டி குறித்து விமர்சித்த தொண்டர்கள், ''இவர் சொல்கிற அந்த சதிகார கும்பல்கள் வேறு யாரும் இல்லை... தற்போதும் தீபாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கும்பல்தான் அவர்கள். இவர்களாலேயே மாதவன் - தீபா இருவருக்குள்ளும் பெரிய பிரச்னைகள் எழப்போகிறது'' என்று கணித்தார்கள்.

இந்த நிலையில், நேற்று (17-3-2017) இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தீபாவின் கணவர் மாதவன், அங்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றியான அறிக்கையை விரைவில் வெளியிடுவேன்'' என்று சொல்லி தொண்டர்களின் கணிப்பை நிஜமாக்கினார். மாதவனின் இந்த அதிரடிப் பேட்டியை பார்த்த தீபா தரப்பினர் உச்சக்கட்ட கோபத்துக்கு உள்ளானார்கள். தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்
இதையடுத்து, தீபாவின் கருத்தை அறிவதற்காக தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பத்திரிகையாளர்களிடம், "மாதவனுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அவர் சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்தக் கட்சியை உடைப்பதற்காகத்தான் எங்களோடு இதுவரையிலும் இருந்தார். இப்போது அதற்கான வேலையையும் செய்துவிட்டார். தீபாவின் கட்சி பற்றிப் பேச வேண்டுமானால் மட்டும் இங்கு வாருங்கள். மாதவனைப் பற்றிப் பேச இங்கு யாரும் வராதீர்கள்'' என்று கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளில் பேசிமுடித்தனர் தீபாவின் கட்சி அலுவலகத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகள்.

தீபா தரப்பினரின் இந்தக் கருத்துக்கு பதில் கேட்க மீண்டும் மாதவனை சந்திக்க சென்றபோது, "கட்சி வேலையாக மாதவன் வெளியே சென்றுவிட்டார்.'' என்று கூறிய மாதவன் தரப்பினர், "தீபாவை சிலர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் பிடியிலிருந்து தீபாவால் வெளியே வர முடியவில்லை. இதனால் தீபாவுக்கும், மாதவனுக்கும் பிரச்னை எழுந்துள்ளது. இதனால்தான் மாதவன் தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார். அதனால் உண்மையான தொண்டர்கள் மாதவனுடன் வந்துவிட்டோம். தீபா தரப்பில் உள்ள சிலர்தான் அந்தக் கட்சியை உடைப்பதற்காக பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யை கூடிய விரைவில் அழித்துவிடுவார்கள்" என்று  சாபம் கொடுத்தனர்.

'தீபா தரப்பினர் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டார்கள்' என்று மாதவன் தரப்பினரும் 'மாதவன் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதாக' தீபா தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். 'இவர்களில் யார் சொல்வது உண்மை?' என்பது தெரியாமல், தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ஜெ.அன்பரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close