Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வி.ஐ.பி. தொகுதி என்பதே ஏமாற்று வார்த்தை!  ஆர்.கே.நகர் தொகுதியின்  நிஜமுகம் இதுதான்!

                              ஆர்.கே.நகர்                                          

ட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்லப்பிள்ளையாக, சில அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். முதலமைச்சராக இருந்தவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில் உள்ள சுகாதாரச் சீர்கேடுகளை நீதிமன்றமே சுட்டிக்காட்டினாலும், அதைக் கண்டுகொள்ளாத  அளவுக்கு சில அதிகாரிகள் செல்லப்பிள்ளைகளாக இருந்துள்ளனர், இன்னமும் தொடர்ந்து இருந்துவருகின்றனர் என்பதுதான் தொகுதியின் தற்போதைய நிலை. வி.ஐ.பி. தொகுதி என்ற போலியான முகவரியில் சிக்கியிருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, உயர்நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்ட ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்க ஏதுவாக இடைத்தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் என இரண்டுமுறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயலலிதாவுக்கு போட்டியிடுவதற்கு முன், ஜெயலலிதா போட்டியிட்ட பின் என்று இந்தத் தொகுதியின் நிலவரத்தை இரண்டு காலகட்டமாக பலர் பார்க்கின்றனர். அப்படிப் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு பெரிய அளவிலான ஏற்றமோ, தேக்கமோ இந்தத் தொகுதியில் எப்போதுமே இருந்ததில்லை என்பதுதான் இந்தத் தொகுதி மக்களின் கருத்து.

ஜெயலலிதா, இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரானதும், பொதுப் பணித்துறை அரசு ஊழியர் குடியிருப்பின் விளையாட்டு மைதானத்தில்தான், எம்எல்ஏ அலுவலகம் இதுவரையில் செயல்பட்டுவந்தது. அங்கிருந்து நூறு மீட்டர் தூரத்தில்தான் தண்டையார்பேட்டை காவல்நிலையமும் வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவிக் கமிஷனர் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எதிர்ப் புறத்திலேயே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. அண்மைக்காலமாக வி.ஐ.பி. தொகுதி என்ற போலியான  அங்கீகாரத்துடன் இருந்ததால், தொகுதியில் காவலர் குடியிருப்புகளுக்கு பக்கத்தில் இருந்த காவல் ஆய்வாளர்கள்  குடியிருப்பை மொத்தமாக இடித்துத் தள்ளிவிட்டு, வடசென்னை போலீஸ் இணைக் கமிஷனர் அலுவலகத்தைத் தொடங்கினார்கள்.  வீண் பெருமைக்காகத் தொடங்கப்பட்ட இணைக் கமிஷனர் அலுவலகப் பணியானது, ஜெயலலிதா  இருந்தவரையில் வேகமாக முடுக்கி விடப்பட்டு, உயரத் தொடங்கிய  இணை கமிஷனர் அலுவலகக் கட்டடப் பணிகள், இப்போது படுக்கையில் உள்ள நோயாளி குணமாவதுபோல, கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நிற்க ஆரம்பித்திருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க தண்டையார்பேட்டை மணிக்கூண்டுப் பகுதியில், இணைக் கமிஷனர் அலுவலகம் கொண்டுவர திட்டமிடப்பட்டதே, முதல்வர் தொகுதி என்ற காரணத்தால்தான். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதா, அவருடைய அலுவலகத்துக்கு ஒருமுறையாவது வந்திருக்கிறாரா என்றால், இல்லை. 'தொகுதியைப் பளபளப்பாக வைத்துள்ளோம்' என்று ஜெயலலிதாவிடம் தினமும் மறந்துவிடாமல் சொல்லவே ஒரு பிரதிநிதியை வைத்திருந்தனர்.

                             சென்னை மாநகராட்சி                                              

வாரம்தோறும் செவ்வாய்க் கிழமைகளில், முதல்வரின் தொகுதி அலுவலகத்தில் மூன்று வட்டாட்சியர்கள் மூலம், 'பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்' என்ற பெயரில் மனுக்களை அதிகாரிகள் வாங்கிவந்தனர். ஒவ்வொரு வாரமும் மனுக்கள் கொடுக்க அதிகம் பேர் வந்ததால், போலீசார் மிக நீளத்துக்கு இரும்புத் தடுப்பு வேலி அமைத்து, பொதுமக்களை வரிசையில் அனுப்பிவைத்தனர். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காணாமல் போய்விட்டது. ஜெயலலிதா இருந்தவரை, அந்த முகாமில் கொடுத்த புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் சிலர் உதவிகளைப் பெற்றனர் என்பது மட்டும் உண்மை. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை ஆகியவை கோரி அளிக்கப்பட்ட புகார்கள் கவனிக்கப்பட்டன என்பது மட்டுமே ஒரே ஒரு ஆறுதல். முதல்வரின் பிரதிநிதியாக ஆர்.கே.நகர் தொகுதியில் நியமிக்கப்பட்டவர்கள், முதல்வரின் தொகுதி அலுவலகத்தைச்  சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே சுத்தமாகவும், எந்நேரமும் தெருவிளக்குகள் பளிச்சென்று எரியும் விதமாகவும் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொண்டனர். அமைச்சர்கள் வரப்போகிறார்கள் என்றவுடன் முன் கூட்டியே அந்தப் பகுதி முழுவதும் வெள்ளையாய், வட்டமாய் மருந்து அடிப்பதைப் போல எந்த நேரத்திலும் முதல்வர் அலுவலகத்தைச் சுற்றிலும், மருந்து அடித்த நிலையிலேயே எப்போதும் காணப்படும். ஆர்.கே.நகர் தொகுதியை ஆர்.கே.நகர் பிரதானம், ஆர்.கே.நகர் மேற்கு, ஆர்.கே.நகர் கிழக்கு என மூன்றாகப் பிரிக்கலாம். ஆர்.கே.நகர் பிரதானத்தில்தான் முதல்வரின் தொகுதி அலுவலகம் வருகிறது. வள்ளலார் நகர் மேம்பாலத்தின் இறக்கத்தில் தொடங்கி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சுங்கச்சாவடி வரை, பிரதான ஆர்.கே.நகர்  பகுதியாகும்.

                                      ஆர்.கே.நகர் கொசுக்கள் தொல்லை                              

காவலர் குடியிருப்பு, இணை, உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையங்கள் இந்த பிரதான ஆர்.கே.நகர் பகுதியில் வருகின்றன. ஆர்.கே.நகர் கிழக்கு என்று எடுத்துக் கொண்டால், மக்கள் அதிகளவில் வசிக்கக்கூடிய பகுதி என்று சொல்லலாம். கிழக்குப் பகுதி என்பது சற்று உள்ளடங்கிய பகுதியாகும். குடியிருப்பு வீடுகள், பாலீஷ் பட்டறைகள், இரும்புக் கதவுகளைத் தயாரிக்கும் ரோலிங் ஷட்டர் பட்டறைகள், லேத் மற்றும் டிரில்லிங் பட்டறைகள் போன்றவை, குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் செயல்படுவதைக் காணமுடிகிறது. இங்கு வேலைபார்க்கும் கூலித்தொழிலாளிகளை நம்பி, சிறிய இட்லிக் கடைகளும், டீக்கடைகளும் அதிகளவில் இப்பகுதியில் அமைந்திருக்கும். ஆர்.கே.நகர் மேற்குப் பகுதிதான் தொகுதியின் வாக்குகளைத் தீர்மானிக்கும் பகுதியாகும். ஆர்.கே.நகரின் கிழக்கு மற்றும் பிரதான ஆர்.கே. நகரை வைத்தியநாதன் மேம்பாலம் இணைக்கிறது. இந்தப் பாலம் கட்டப்படுவதற்கு முன்புவரை, ஆர்.கே.நகர் மேற்குப்  பகுதிக்கும், மற்ற பகுதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. தொகுதி உருவாக்கப்பட்ட 1977-ம் ஆண்டு முதல் இன்றுவரை, ஆர்.கே.நகரின் மேற்குப் பகுதியில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் அலுவலகத்தை அமைத்தது இல்லை. இங்கிருக்கும் கொடுங்கையூர் குப்பைமேடு, கேப்டன் கெனால், பக்கிங்ஹாம் கெனால், கூவம், சுண்ணாம்புக் கால்வாய் போன்றவைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றுக்கு எந்த எம்எல்ஏ-வும் தன்னைப் பலி கொடுக்க விரும்பவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியின் எம்எல்ஏ-வாகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஜெயலலிதா இருந்தவரை, சட்டமன்ற அலுவலகம் அமைந்துள்ள முக்கியத் தெருக்களில் தெரு விளக்குகள் அணையாமல் எரிந்தன. சாலையில் குப்பைக்கூளங்கள் இருக்காது. தண்ணீர் தேங்கி நிற்காது. 'ஒரு முதலமைச்சரின் தொகுதி என்ற காரணத்தாலேயே இதுபோன்று  வைக்கப்பட்டுள்ளது' என்று பகுதிவாசிகள் வியந்து பேசிக்கொள்கிறார்கள்.ஜெயலலிதா இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வரும் வரை, இதுபோன்ற நிலையைக்கூட ஏற்கெனவே இருந்த எம்எல்ஏ-க்கள் செய்யவில்லை என்றுதானே அர்த்தமாகிறது? வி.ஐ.பி. தொகுதியாக கருதப்படும் ஆர்.கே.நகர் தொகுதியின் ஒரே சாதனையாக இதைத்தான் குறிப்பிட வேண்டும். 2004-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 'குப்பை கொட்டும் இடம் வெகுவிரைவில் கொடுங்கையூர் பகுதியிலிருந்து மாற்றப்படும்' என அறிவித்தார். 12 ஆண்டுகள் கடந்தும் (2016- வரை)  எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொடுங்கையூர் குப்பைகள் குறித்து, பொதுமக்கள்  போட்ட வழக்கை செப்டம்பர், 2016-ல் அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

       கொடுங்கையூர் குப்பைமேடு

"குப்பை கொட்டும் பகுதிக்கு அருகே வசிக்கும் மக்கள் படும் அவதி, மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. அந்த மக்களின் கஷ்டங்களைத் தெரிந்துகொள்ள, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, குப்பை கொட்டும் இடத்துக்கு அருகே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அதில் அவரை குடியிருக்கச் சொல்ல வேண்டும். அல்லது ஒரு நாற்காலியைக் கொடுத்து உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான், அவருக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். அவரால் 24 மணி நேரம் அந்த இடத்தில் இருக்க முடியுமா? மாநகராட்சி ஆணையர் விரும்பினால், அந்த இடத்தில் அவருக்கு ஒருவீடு கூட கட்டித் தருகிறோம்" என்று நீதிபதிகள், கொட்டினர். நீதிமன்றம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்ட பின்னரும், சென்னை மாநகராட்சி கமிஷனராக தற்போதும் இருந்துவரும் கார்த்திகேயன் தரப்பிலிருந்து இதுவரை பதில் இல்லை. மொத்தம் 740 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு நிற்கும் இந்த கொடுங்கையூர் குப்பைமேடு, எங்களுக்குத்தான் சொந்தம் என்று சென்னை மாநகராட்சியும், மெட்ரோ வாட்டர் நிர்வாகமும் பல ஆண்டுகளாக போட்டுக்கொண்டிருக்கும் சண்டையே இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால், அதில் கொட்டப்படும் குப்பைகளுக்கும், அதன் மூலம் ஏற்படும் நோய்த்தொற்றுக்கும் மட்டும் பொதுமக்கள் சொந்தமானவர்கள். இதுதான் ஆர்.கே.நகர், இப்படித்தான் அரசு இயந்திரமும், அதிகாரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வி.ஐ.பி. தொகுதி என்கிற இந்த மாதிரியான போலியான புகழுடன்தான், ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close