Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டாக்டர் ரிச்சர்ட் பெய்ல்-க்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைபுரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

doctor richard beale

 நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் தொடர்பாக பல ஆர்.டி.ஐ. கேள்விகளைக் கேட்டுள்ளார். கடந்த 19.12.2016ல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பெய்ல் தமிழகத்துக்கு வந்தது தொடர்பாக சென்னை, சாஸ்திரிபவன், முதன்மை இமிகிரேசன் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு ஆர்.டி.ஐ.யில் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு மத்திய உள்துறை அலுவலகத்தில் மார்ச் 20-ம் தேதி பதில் வந்துள்ளது. அந்த பதிலில் 'உங்களது ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு சென்னை இமிகிரேசன் அலுவலகத்திலிருந்து தகவல் வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் 19-ம் தேதி வரை லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சாட் பெய்ல் எத்தனை முறை தமிழகத்துக்கு வருகைபுரிந்துள்ளார் என்ற விபரம் தர வேண்டும். 

2. டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு எந்தெந்த தேதிகளில் வந்துள்ளார் என்ற விபரம் தர வேண்டும். ஒவ்வொரு முறை இந்தியா மற்றும் தமிழகம் வரும்போது அவர் வருகைபுரிந்த விமான எண், விமான பெயர், விமானத்தில் ரிச்சர்ட் பீலேவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை எண் ஆகிய விவரம் தனித்தனியே தேதி வாரியாக, மாதம் வாரியாக தர வேண்டும். மேலும் பயணக்கட்டணம் செலுத்திய விவரம், பயணக் கட்டணம் செலுத்திய நபர் விசாவுக்கு விண்ணப்பித்த ஏஜென்ட்டின் பெயர் மற்றும் முகவரி தர வேண்டும்.

3. ரிச்சர்ட் பெய்ல், ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போதும் மற்றும் தமிழ்நாட்டுக்கு வரும்போதும் தனி விமானத்தில் பயணம் செய்து வருகை புரிந்துள்ளார் எனில் தனி விமானம் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த விமான நிலையத்தில் எத்தனை மணிக்குத் தரை இறங்கியது என்ற விவரம் தர வேண்டும். தனி விமானத்துக்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, அந்தத் தொகை வழங்கிய நபரின் பெயர் வழங்கிய விதம் விபரம் தர வேண்டும். 

 4. டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், சென்னைக்கு என்ன வகைக்காக வருகைபுரிந்துள்ளார் என்ற விவரம் தர வேண்டும். அவர் சென்னை விமான நிலையத்தில் கொடுத்த ஆவண நகல் தர வேண்டும். 

5. டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் என்ன வகையான விசாவில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் வந்தார் என்ற விவரம் தர வேண்டும் 

 6. டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் வழங்கப்பட்ட விசா நகல் தர வேண்டும். மருத்துவருக்கு உதவியாளராக வெளிநாட்டிலிருந்து மொத்தம் எத்தனை பேர் வந்தனர். அவர்களின் பெயர், கல்வித்தகுதி ஆகிய விவரம் தர வேண்டும். 

 7. டாக்டர் ரிச்சர்ட பெய்ல், மருத்துவ சிகிச்சைக்கு ஆலோசனை கொடுக்க வருகை புரிந்துள்ளார் எனில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்ற விவரம் தர வேண்டும் ஆலோசனை வழங்க தமிழகத்துக்கு வருகை தருவதற்கு என்ன வகையான விசா வழங்கப்படும் என்ற விவரம் தர வேண்டும் 

 8. தமிழ்நாட்டில் சிகிச்சை கொடுப்பதற்கு அல்லது நோயாளிக்குக் கொடுக்கப்படும் சிகிச்சைக்கு ஆலோசனை கொடுப்பதற்கு வருகை புரிந்துள்ளார் எனில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்துக்கு வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டது. அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகை வருமான வரி அலுவலகத்தில் எந்த தேதியில் செலுத்தப்பட்டது என்ற விவரம் தர வேண்டும் 

 9. டாக்டர் ரிச்சர்டு பெய்ல், படித்த மற்றும் பயிற்சி பெற்ற அளவில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் எந்த மருத்துவரும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து வழங்கப்பட்ட ஆவண நகல் தர வேண்டும் 

 10. டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், சிறப்பு மருத்துவராக எந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையால் தேர்வு செய்யப்பட்டார் என்ற விவரம் மற்றும் அதற்கு கொடுத்த ஆவணங்களின் நகல் தர வேண்டும். 


 
இந்த ஆர்.டி.ஐ கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சென்னை இமிகிரேசன் அலுவலகம் அதை டெல்லிக்கு அனுப்பியது. இதையடுத்து டெல்லி உள்துறையிலிருந்து ஆர்.டி.ஐ. கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிரம்மாஇதுகுறித்து பிரம்மா கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதைத் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுக்கு உள்ளது. இந்தியாவில் தலைசிறந்த டாக்டர்கள் இருந்தநிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், எதற்காக தமிழகத்துக்கு அழைக்கப்பட்டார். ஜெயலலிதா மரணம் அடைந்து சில மாதங்களுக்குப் பிறகு சசிகலா, முதல்வராக முயற்சிகள் நடந்த சமயத்தில் லண்டனிலிருந்து சென்னைக்கு அவசர, அவசரமாக ரிச்சர்ட் பெய்ல் வரவழைக்கப்பட்டு பேட்டி கொடுக்கப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ரிச்சர்ட் பெய்ல், தமிழகத்துக்கு வருகைபுரிந்தது தொடர்பான கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்குக் கேட்டு இருந்தேன். அந்தக் கேள்விகளுக்கு பதில்அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது ஜெயலலிதா மரண விவகாரத்தில் மத்திய அரசு, அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பது தெரிகிறது. இது, சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்றார். 

 - எஸ்.மகேஷ் 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close