Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சின்னத்தை மீட்க இதுதான் ஒரே வழி!' - பன்னீர்செல்வம் அணியின் ஏப்ரல் 17 அதிர்ச்சி

தினகரன் 

அ.தி.மு.க. உள்கட்சி பூசலால் இரு துருவங்களாக இருக்கும் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய இருதரப்பையும் சமரசப்படுத்த முயற்சிகள் நடந்துவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'முதல்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்தாலும் அடுத்தக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக' உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அவரது தோழி சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, முதல்வராக ஆசைப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார். இதனால், சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்வராகினார். சசிகலா தரப்பு செயல்பாடுகள் பிடிக்காமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை ஏற்படுத்தினார். இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. சசிகலா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களமிறக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தியதால், சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இதனை அடுத்து, டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும் மதுசூதனன் மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின்பேரில் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது வருமான வரித்துறையின் சோதனையையும் ஆளும்கட்சி எதிர்கொண்டு வருகிறது. 

வருமான வரித்துறையினரின் சோதனை, சசிகலா அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்துள்ளது. அதில், பா.ஜ.க.வின் சதி திட்டங்கள் குறித்து பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டது. நிர்வாகிகளின் பேச்சுக்களை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் தினகரன். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நம்முடைய வெற்றியை முடக்கவே தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும், தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் நமக்குத்தான் வெற்றி. பா.ஜ.க., பன்னீர்செல்வம் அணி, தி.மு.க ஆகியவை கூட்டாகச் சேர்ந்து நம்மை அழிக்க துடிக்கின்றன. ஆனால், அவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. எம்.எல்.ஏக்கள் மெஜாரிட்டி இருந்தும் ஆட்சி அமைக்க காலதாமதம் செய்தனர். அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருந்ததால் ஆட்சி அமைத்தோம். அதுபோல, இடைத்தேர்தலில் நமக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதை அறவழியில் எதிர்கொள்வோம்'  எனப் பேசியிருக்கிறார் தினகரன். 

பன்னீர்செல்வம்

நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதில், 'இரட்டை இலை சின்னத்தை மீட்க சட்டரீதியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். சின்னத்தை மீட்டெடுத்துவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. நமக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை ஆதாரத்துடன் ஆணையத்தில் சமர்ப்பிப்போம்' எனப் பேசிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், 'சிலரை மன்னித்து சேர்த்துக் கொண்டால், சின்னம் நமக்குக் கிடைத்துவிடும்' எனக் கூற, இதைக் கேட்டு அதிர்ந்து போன நிர்வாகிகள் சத்தம் போட்டுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.முக. நிர்வாகி ஒருவர், "இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடப்பதால்தான் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இரண்டு பேரும் இணைந்துவிட்டால் சின்னமும் கிடைத்துவிடும் என்ற மனநிலையில் சீனியர்கள் உள்ளனர். இந்தக் கருத்தை தினகரனுக்கு ஆதரவான நிர்வாகிகள் விரும்பவில்லை. இருப்பினும், இதுதொடர்பான சமரசப் பேச்சுவார்த்தையை சிலர் தொடங்கியிருக்கின்றனர் என்ற தகவலும் வெளி வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்றும் தெரியவில்லை" என்றார் அமைதியாக. 
 
ஆனால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, "சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க இருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். அதற்கு அவர்கள் சம்மதித்தால் பிளவுப்பட்ட அ.தி.மு.கவை ஒருங்கிணைத்துவிடுவோம். அதற்காகத்தான் இந்த யுத்தம் நடந்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் அந்தக் குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர். ஏன், சசிகலாவுக்குகூட ஜெயலலிதா எந்தப் பதவியையும் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் மீண்டும் சசிகலா சேர்த்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. மற்ற கட்சிகளைப் போல குடும்ப கட்சியாக அ.தி.மு.கவை மாற்ற நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எங்களை பா.ஜ.க இயக்குவதாக சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. மத்திய அரசின் ஆதரவு இருப்பது உண்மை என்றால், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே வழங்கி இருக்கலாம். இன்னும் ஐந்து நாட்களில் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. அதில் கட்டாயம் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆட்சி அதிகாரம் பறிபோனால் அனைத்து நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களும் எங்களை ஆதரிக்க வந்துவிடுவார்கள். அதை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்கின்றனர். 

- நமது நிருபர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close