Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவில் கட்டாயம் மலையாளம்! தமிழகம் கற்றுக்கொள்ளுமா?

மைல்கல்லில் கூட இந்தியை அனுமதிக்காத தமிழகத்தில் தாய்மொழிக்கல்வி இல்லாத நிலை. ஆனால், கேரள அரசு 10-ம் வகுப்பு வரை 'கட்டாயம் மலையாளம்' என்கிற அவசரச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இதே ஏப்ரல் மாதம்தான் 102 தமிழறிஞர்கள் தாய்மொழிக்கல்வியான தமிழ்வழிக்கல்வி வேண்டி 'சாகும் வரை உண்ணாவிரதம்' தொடங்கினர். உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதனை அமுல்படுத்துவதாக உத்திரவாதம் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக அறிவித்து அரசாணையும் பிறப்பித்து உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் அந்த ஆணைச் செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மலையாளம்

இந்நிலையில், பினராய் விஜயன் தலைமையிலான அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை பிறப்பால் தமிழரும், ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதியுமான கேரள ஆளுநர் சதாசிவம் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியனிடம் கேட்ட போது..

சுபவீ

 "கேரள அரசு மலையாளத்தை கட்டாயப் பாடமாக்கியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. இது தமிழகத்திலும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் முதல் ஐந்தாம் வகுப்பு வரையும் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஒவ்வொரு வகுப்பாக விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு செய்திகள் உள்ளன. அது 'தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழி வழிக்கல்விக்கும்' வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் அறிவித்ததும்,கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளதும் தாய்மொழிக்கல்விதான். தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை நீதிமன்ற உத்தரவால் மறுக்கப்படுகிறது, ஆனால் தாய்மொழிக்கல்வியில் அந்தச்சிக்கல் இல்லை. ஒரு மாநிலத்தில் படிக்கும் எந்த ஒரு பிள்ளையும் அந்த மாநிலத்தின் மொழியைக் கண்டிப்பாக கற்றிருக்க வேண்டும் என்பது நியாயமான ஒன்று. அதே போல மத்திய அரசின் பாடத்திட்டங்களான சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சியில் படிக்கும் மாணவர்களும் மாநில மொழியைக் கட்டாயம் ஆக்கியுள்ளது துணிச்சலான அறிவிப்பு. கேரள அரசின் புதிய சட்டத்தை வாழ்த்தி வரவேற்கிறேன்" என்றார். 

ஹெச்.ராஜா மலையாளம்

"கண்டிப்பாக வரவேற்க வேண்டிய சட்டம் இது. தமிழ்நாட்டில் படிக்கும் ஒருவர் தமிழே படிக்காமல் உயர்கல்வி வரை செல்ல முடிகிற நிலை தற்போது இருக்கிறது. இந்நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. சிபிஎஸ்சியிலும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக வைக்கும் படி ஏற்கனவே கோரியிருந்தோம். இதே போல் தமிழகத்திலும் உடனடியாக தமிழை கட்டாயப்பாடமாக கொண்டு வரச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறேன்" என்று பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தெரிவித்தார். 

வழக்கமாக இது போன்ற அறிவிப்புகளுக்கு உடனடியாக எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்காத தனியார் பள்ளி சங்கங்களின் பக்கம் இருந்தும் பாஸிட்டிவான கமெண்ட்ஸ்களே வருகின்றன. 

"அந்தந்த மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது நல்ல விஷயம்தான். தமிழ் கற்றுக்கொள்ளாமல் தமிழ்நாட்டில் படித்து ஐஏஎஸ் எழுதலாம் என்கிற நிலை இருக்கிறது, மாநில மொழிகளுக்கான மரியாதை என்பது இப்படியான சட்டங்களினால்தான் அதிகரிக்கச் செய்யும். தமிழகத்திலும் இப்படியான சட்டத்தை விரைவில் கொண்டு வரவேண்டும்" என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் துணைத்தலைவர் ஶ்ரீதரன் தெரிவித்தார். 

கி.த.பச்சையப்பன்

1998-ம் ஆண்டு தமிழ்வழிக்கல்வி வேண்டி 102 தமிழறிஞர்கள் போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடிய தமிழறிஞர் கி.த.பச்சையப்பனிடம் இது குறித்து கேட்ட போது.. "அன்று எங்களிடம் பேச்சு வார்த்தைக்கு வந்த தமிழ்க்குடிமகனிடம் இது குறித்து அரசாணை போட வேண்டாம், சட்டம் போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அன்றைக்கு எங்கள் போராட்டத்தை கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகக் கூறி கைவிட வைத்து பின்னர் வலுவில்லாதான் அரசாணை ஒன்றைத்தான் கருணாநிதி தலைமையிலான அரசு  பிறப்பித்தது. அதனால்தான் உடனடியாக அதற்குத் தடையும் எதிரான தீர்ப்பும் பெறமுடிந்தது. இன்று கேரள அரசு சட்டமே நிறைவேற்றியுள்ளது. இது மொழிவாரி மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான செய்தி. இனியும் தாமதிக்காமல்  தமிழக அரசும் கேரளத்தின் வழியைப் பின்பற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார். 

தமிழக அரசு இருக்கும் சூழலில் நடக்குமா என்று தெரியவில்லை; ஆனால் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். காரணம் வலதுசாரி முதல் இடதுசாரி வரை ஓரணி நின்று கோரிக்கை விடுக்கின்றனர். 

-வரவனை செந்தில் 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close