Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

39 கோரிக்கைகள்! சசிகலா அணி எம்எல்ஏ திடீர் விஸ்வரூபம்!

39 கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏ குணசேகரன், தனி ஒருவராக திருப்பூரில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா அணியைச் சேர்ந்த திருப்பூர் தெற்குத் தெகுதி எம்எல்ஏ குணசேகரன், இன்று காலை 7 மணிக்கு திருப்பூர் ரயில்நிலையம் எதிரில் பந்தல் அமைத்து, திடீரென உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். 39 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளார். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு:

* நொய்யல் வீதியில் செயல்பட்டுவரும் உயர்நிலைப் பள்ளியில் இடநெருக்கடியைத் தீர்க்க ஏதுவாக, நொய்யல் வீதியில் அரசு இடம் இருந்தும் அதில் துவக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

* கொங்கணகிரி அருள்மிகு கந்தப்பெருமாள் திருக்கோயில் ராஜகோபுரம் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

* பூலாவாரி சுகுமார் நகரில் குடிசைமாற்று வாரியத்துக்கு பணம் கட்டிமுடித்தவர்களுக்கு வீட்டுமனைப் பத்திரங்களை அரசு அதிகாரிகள் வழங்கவில்லை.

* நொய்யல் ஆற்றைத் தூர் வாரி,  தூய்மைப்படுத்தி,  தண்ணீர் செல்ல ஏதுவாக ஆற்றின் நடுப்பகுதியில் கான்கிரீட்தளம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, திட்ட மதிப்பீட்டை அதிகாரிகள் வழங்கவில்லை.

* கட்டாய கல்விச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

* பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி, இரவு நேரங்களில் குப்பைகளை அள்ள வேண்டும்.

* அரசு கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* திருப்பூர் மாநகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

* திருப்பூரில், நவீன வசதிகளுடன்கூடிய பனியன் சந்தை அமைக்க வேண்டும்.

* அரசுப் பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்துதர வேண்டும்.

* மாநகராட்சியில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளில், Schedule of Rate முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* சத்யா நகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயான புறம்போக்குப் பகுதிகளில் வசித்துவருபவர்களுக்கு, பட்டா வழங்க வேண்டும்.

* எல்ஆர்ஜி கல்லூரியிலிருந்து மங்கலம் சாலைக்கு புதிதாக இணைப்புத் தார்சாலை அமைக்க வேண்டும்.

* நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் பூங்காக்கள் அமைத்து, முறையாகப் பராமரிக்க வேண்டும்.

* நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏதுவாக, நொய்யல் ஆற்றின் குறுக்கே ஈஸ்வரன் கோயில் அருகில் பாலத்தை விரிவுப்படுத்தியும், மாநகராட்சியின் பின்புறம், அம்மனை ஓடையின் குறுக்கே புதிதாக பாலம் அமைத்து, எம்.ஜி.ஆர் சிலை அருகே இணையுமாறு தார்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 39 கோரிக்களை அவர் முன்வைத்துள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து எம்எல்ஏ குணசேகரன் கூறுகையில், "இந்தக் கோரிக்கைகளை அந்தந்த துறைகளின் சார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றுவிடுவேன். அலுவலகத்துக்கு முன்பு போராட வைக்கவேண்டிய சூழ்நிலையை இந்த அதிகாரிகள் உருவாக்கக்கூடாது" என்று எச்சரித்துள்ளார்.

படம்: ஜெயபிரகாஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close