Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ஜி.பி அலுவலகத்திலும் ‘பாண்டியராஜன்கள்!’ - தகிக்கும் த.மா.கா #VikatanExclusive

த.மா.கா

திருப்பூர், சாமளாபுரத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்க வந்த த.மா.கா நிர்வாகிகளைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. ' டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளும் பாண்டியராஜன் போலத்தான் செயல்படுகின்றனர். புகார் கொடுக்க வந்தவர்கள் மீதே தாக்குதல் நடத்துகின்றனர்' எனக் கொதிக்கின்றனர் த.மா.கா நிர்வாகிகள். 

மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர், சாமளாபுரத்தில் பொதுமக்கள் ஒன்று கூடினர். இந்தக் கூட்டத்தைக் கலைக்கும் நோக்கில், பெண்கள் மீது தாக்குதலை நடத்தினார் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன். இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வைரலானது. 'தாக்குதல் நடத்திய டி.எஸ்.பியை பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ' பாண்டியராஜன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என மாதர் சங்கங்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில், இன்று காலை காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுக்கச் சென்றார் த.மா.காவின் மாநில மகளிர் அணித் தலைவி ராணி கிருஷ்ணன். அவருடன் தமா.கா பொதுச் செயலாளர் முனவர் பாட்ஷா உள்பட முனவர் பாட்ஷாமுப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். ‘அனுமதியில்லாமல் மனு கொடுக்க வரக் கூடாது' என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, த.மா.கா நிர்வாகிகளைக் கைது செய்துவிட்டது காவல்துறை. தற்போது இவர்கள் அனைவரும் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முனவர் பாட்ஷாவிடம் பேசினோம். "சாமளாபுரத்தில் காவல்துறை அதிகாரி பாண்டியராஜனின் வன்முறை வெறியாட்டத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டோம். மதுவிலக்குக்கு எதிராக போராடியவர்கள் மீது இப்படியொரு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 'அந்த அதிகாரியைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்; கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று காலை டி.ஜி.பியிடம் மனு கொடுக்கச் சென்றோம். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், 'இது தடை செய்யப்பட்ட பகுதி. ஊர்வலமாக வரக் கூடாது. கொடி பிடிக்கக் கூடாது' எனத் தடுத்தனர்.

நாங்கள் எதிர்ப்பு காட்டியபோது, எங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள். 'அதிகாரி மீது நடவடிக்கை எடுங்கள்' என மனு கொடுக்கச் சென்றதற்காக, எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். எல்லா அதிகாரிகளும் பாண்டியராஜனின் மனநிலையில்தான் இருக்கின்றனர். 'ஐந்து பேர் மனு கொடுக்க வாருங்கள்' என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. இங்கு என்ன சர்வாதிகாரி ஆட்சியா நடக்கிறது? மண்டபத்தில் எங்களை அடைத்த பிறகு, மனுவை வாங்குகின்றனர். டி.ஜி.பி அலுவலகத்தில் நடந்த விவரங்களை தலைவர் ஜி.கே.வாசன் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். திருப்பூர், காவல்துறை ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை" என்றார் கொதிப்போடு. 

-ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close