Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அடுத்து நாங்கள்தான் அம்மணமாக வேண்டும்!” - கலங்கும் பதிப்பாளர்கள்

புத்தக கண்காட்சி

'பபாசி' எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் வரும் 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. 

சென்னையில் கடந்த  40 ஆண்டுகளாக புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது பபாசி. ஆண்டுக்கொருமுறை ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் எல்லா துறைகளையும் சார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள் பல ஆயிரம் தலைப்புகளில் இடம்பெறும். கண்காட்சி நடக்கும் 10 தினங்களும் புத்தகப்பிரியர்களுக்கு கொண்டாட்டமான காலம் என்றே சொல்லலாம். இந்த புத்தகக் கண்காட்சி பதிப்பாளர்களின் புத்தகங்களை வெற்றிகரமான சந்தைப்படுத்தும் ஒரு களமாகவும் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. சென்னைத் தவிர மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்திவரும் ‘பபாசி’ இந்த ஆண்டு முதன்முறையாக சென்னையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இரண்டாவது முறையாக இந்தக் கண்காட்சியை நடத்துகிறது. 

பதிப்புத் தொழில் கடந்த சில வருடங்களாக தேக்கம் கண்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் புலம் லோகநாதனிடம் பேசினோம். 

லோகநாதன்“ உலகப் புத்தகத் தினத்தையொட்டி நடத்தப்படும் இந்த கண்காட்சி 21-ந்தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. விடுமுறை நாட்களில் (ஏப்ரல் 22, 23, 29, 30, மற்றும் மே 1 ம் தேதி ) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய நாட்களில் பிற்பகல் 2 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். வழக்கம்போல எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. நுழைவுக் கட்டணமும் இந்த முறை தவிர்க்கப்பட்டிருக்கிறது. 45 கடைகள் ஏற்படுத்தப்பட்டு அதிலேயே எல்லா பதிப்பாளர்களின் புத்தகங்களும் கிடைக்கும் அளவு திட்டமிட்டிருக்கிறோம். மாணவர்கள் அதிகம் வரும் இடம் என்பதால் அவர்களுக்கு இது பயன்படும்” என்றார்.

“இப்போதெல்லாம் புத்தகங்களைத் தேடி வந்து வாங்குவது குறைந்துவிட்டது. ஆன்லைன் விளம்பரம் மூலம்தான் பதிப்பாளர்கள் கொஞ்சம் மூச்சு விடமுடிகிறது. அரசின் மெத்தனமான நடவடிக்கை தீவிர வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்காததன் விளைவாக சமீபகாலங்களாக பதிப்பகத்துறை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. புத்தகக் கண்காட்சிகளில் கூட  10 லட்சம் செலவில்  ஆண்டு முழுவதும் செலவிட்டு கண்காட்சிக்கு புத்தகங்களைக் கொண்டுவந்தால் 10 சதவீதத்துக்குத்தான் விற்கின்றன. அந்தளவு இந்ததலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம் அருகிவிட்டது. இது அரசின் குறை. 

புத்தக கண்காட்சி, நேரடி விற்பனை போக பதிப்பாளர்களுக்கு லாபமான விஷயம், அரசு நூலகங்களுக்கான கொள்முதல் ஆணை. ஆனால் அது முறையாக பின்பற்றப்படவில்லை. 2014 ம் ஆண்டுக்கான புத்தக ஆணையை  கோராததால் 2014 -க்கு என்று தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கடைகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. 2015 க்கு கேட்டுப்பெற்ற ஆணையை இன்னுமே பரிசீலிக்கவில்லை.

அதுவும் பெயருக்கு ஒரு பத்து முதல் பதினைந்து பதிப்பாளர்களிடம் மட்டுமே ஓரிரு தலைப்புகளில் புத்தகங்களை வாங்குகிறது. பதிப்பாளர்களுக்கு பெரிய லாபம் இல்லை என்பது ஒருபக்கம் அதேசமயம் இதையும்கூட அதிகாரிகளை கவனித்துத்தான் பெறவேண்டியிருக்கிறது. விவசாயத்துக்கு எப்படி மழை முக்கியமோ அதுபோல் பதிப்பகத்துறை வளர நுாலக ஆணை முக்கியம். ஆண்டுதோறும் அரசு நூலக ஆணைக்குழு மூலம் முறையாக அதிகபட்ச அளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே பதிப்புத்தொழில் வளர வாய்ப்புண்டு. இல்லையேல் நாங்களும் விவசாயிகள் போல் அம்மணமாக  வீதிக்கு வந்து போராடும் அவலம்தான் ஏற்படும்.” என்றார் வேதனையான குரலில்.

புத்தக கண்காட்சி

தொடர்ந்து பேசிய அவர், "பள்ளிக்குழுந்தைகளுக்கான நூலகங்களை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி குழந்தைகளுக்கான புத்தகங்களை கொள்முதல் செய்யவேண்டும். லட்சக்கணக்கில் செலவு செய்து வாசிப்பு பழக்கத்தை உருவாக்க அரசு விளம்பரங்கள் செய்வதைவிட, குழந்தைகளுக்கான நுாலகங்களை உருவாக்கினால் அடுத்தடுத்த தலைமுறையினர் வாசிப்பு பழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள்.

நூலகங்களையும் மேம்படுத்த ஆண்டுதோறும்  புதிய நூல்களை வாங்குவது, சிறுசிறு கண்காட்சிகளை நடத்த ஆர்வம் காட்டுவது, நூலகங்களில் வாசகர் வட்டங்களை உருவாக்கி வாசிப்பதற்கான ஆர்வத்தைத்  தூண்டுவது, பதிப்பாளர்களிடம் நூல்களை நியாயமான தள்ளுபடி விலையில் கோருவது, பதிப்பகங்களுக்குக் கடனுதவி வழங்குவது போன்றவற்றைச் செய்வதன் மூலம் அரசு சிறு பதிப்பகங்களும் தயக்கமின்றி நல்ல நூல்களை வெளியிட முன்வருவார்கள்” என்றார்.

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close