Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அமைச்சரவையில் மாற்றமா..? டி.டி.வி தினகரன் சொல்லும் காரணங்கள் !

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏப்ரல் 7-ம் தேதி அதிகாலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் வருமான வரித்துறையினருக்கு இடையூறுசெய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வருமான வரித்துறையினர் கொடுத்த புகார் அடிப்படையில், அவர்கள் மீது 'பணி செய்ய  விடாமல் தடுத்தல், ஆதாரங்கள் அழிப்பு' உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ்,  சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Dinakaran

மேலும், வருமான வரித்துறையினர் கைப்பற்றிய 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா லிஸ்ட்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெள்ளமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மற்றும் ராஜ்ய சபா எம்.பி ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. போலீசில் வழக்குப்பதிவுசெய்யபப்பட்டுள்ள அமைச்சர்கள், பணப்பட்டுவாடா லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளவர்களின் பதவிகளுக்கு ஆபத்து என்று தகவல்கள் வெளியானது. ''அவர்களை நீக்க வேண்டும்; கைது செய்ய வேண்டும்; அவர்களிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்'' என்று கவர்னரிடம் தி.மு.க புகார் மனு கொடுத்துள்ளது. மேலும், ''ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அ.தி.மு.க அமைச்சர்களின்  ஆறு ஆண்டு ஊழலை விசாரிக்க, 'விசாரணைக் கமிஷன்' அமைக்க வேண்டும்'' என்றும் தி.மு.க வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க (அம்மா) அணியினர், அடையாறில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசினர். அப்போது, சித்திரை புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.  அதன்பின்னர், தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் பேசுகையில், ''அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக என்னைச் சந்திக்க வந்தனர். புத்தாண்டு வாழ்த்துக் கூறவே அனைவரும் வந்திருந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இல்லை. அதனால், அவர் இங்கு வரவில்லை.

தன் மீது எந்தத் தவறும் இல்லையென்று அமைச்சர் விஜயபாஸ்கர் என்னைச் சந்தித்தபோது கூறினார். அவரிடம் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சோதனை நடந்தாலே பதவி நீக்கம்செய்வது எந்த விதத்தில் நியாயம்? வருமானவரி சோதனை நடப்பது; அதைத் தொடர்ந்து விசாரணைக்கு அழைப்பது எல்லாம் வழக்கமான நடைமுறைகள்தான். எத்தனை சோதனைகள் நடந்தாலும் அமைச்சர்கள், அரசு பற்றி எந்தத் தவறும் வெளியிடப்போவதில்லை. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை. அதெல்லாம் கட்சிக்கு துரோகம்செய்துவிட்டுப் போனவர்கள் செய்த சதி'' என்று கூறினார்.

-எஸ்.முத்துகிருஷ்ணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close