Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்த ஆட்சியைக் கலையுங்கள்..!' தீபா அணி ஆவேசம் 

தீபா

வருமான வரித்துறையினரை மிரட்டியதாக, தமிழக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'மக்கள் மீது அக்கறை இல்லாத இந்த ஆட்சியைக் கலையுங்கள்' என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் செல்லராஜா மணி தெரிவித்தார். 

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக படகுச் சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் நிறுத்தப்பட்ட பிறகு, பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பேரவை வளர்ச்சிகுறித்து விவாதித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தே, தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட முடிவுசெய்யப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் நடந்த சமயத்தில், தீபாவின் கணவர் மாதவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். 
 செல்ல ராஜா மணிஇதுகுறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் செல்லராஜா மணி கூறுகையில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடையே எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்தது. தீபாவைக் காண மக்கள் கூட்டம் அலைமோதின. எங்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த சமயத்தில், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். இதனால், தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்துசெய்துவிட்டது. மேலும், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலா அணியைச் சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த ச.ம.க தலைவர் சரத்குமார் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. பணம் கொடுத்த குற்றச்சாட்டில் ஆறு அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாகவும், பெண் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சென்னை அபிராமபுரம் போலீஸார் மூன்று அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கை தமிழக போலீஸார் விசாரிக்கக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 
மேலும், ஆளுங்கட்சி அமைச்சர்களின் அராஜகம், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம், மக்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சி உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த ஆட்சியைக் கலைக்க தமிழக ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டில், டி.டி.வி.தினகரன் சிக்கியிருப்பதால், அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்" என்றார். 

 இதற்கிடையில், தீபாவுக்கு அவரது கணவர் மாதவன்மூலம் குடைச்சலைக் கொடுக்க சசிகலா அணியினர் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து தீபா அணியினர் கூறுகையில், "எங்களது வளர்ச்சியைப் பிடிக்காத சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பல வகையில் தொந்தரவுகொடுத்துவருகின்றனர். பேரவையில், மாதவன்மூலம் குழப்பத்தை சசிகலா அணியினர் ஏற்படுத்திவருகின்றனர். தேர்தலின்போது, தீபா வேட்பு மனுவை நிராகரிக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், வேட்புமனுவை நிராகரிக்க முடியவில்லை. அதையும் மீறி பிரசாரத்தில் ஈடுபட்டோம். தேர்தலை நிறுத்தவே வாக்காளர்களுக்கு வெளிப்படையாக சசிகலா அணியினர் பணத்தைக் கொடுத்தனர். அவர்கள் நினைத்தப்படி தேர்தல் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி எங்களுக்குத்தான். தற்போது, தமிழகம் முழுவதும் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தீபா திட்டமிட்டுள்ளார். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியோரின் சுயரூபம் தெரிந்தவர்கள் எங்கள் அணியில் சேர்ந்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க, கட்சி சின்னத்தைக்கூட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணிகளால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் எப்படி தமிழக மக்களைக் காப்பாற்றப்போகிறார்கள். எனவே, இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்"என்றனர். 

 - எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close