Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பேரூராட்சியே இப்படிச்செய்தால்... நாங்கள் என்ன செய்ய..!' - கண்கலங்கும் செங்குன்றம் மக்கள்

 தீப்பிடித்து எரியும் குப்பை

புழல் ஏரியையொட்டி உள்ள பகுதியில் குப்பைகளைக் கொட்டி செங்குன்றம் பேரூராட்சி நிர்வாகமே எரிப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று புழல். இந்த ஏரியையொட்டி உள்ள ஜி.என்.டி சாலை அருகே காலியாக உள்ள இரண்டு ஏக்கர் இடத்தில் செங்குன்றம் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப்பகுதி தற்போது குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக செங்குன்றம் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் மலைபோல் குவிந்த குப்பையை பேரூராட்சி நிர்வாகம் தீ வைத்து எரித்து வருகிறது. இதனால் அந்தப்பகுதி புகைமூட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

புகார் கொடுத்த மமக

இதுகுறித்து செங்குன்றம் மக்கள் கூறுகையில், "புழல் ஏரியின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி மாசுப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை முதலில் அங்கு கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கொட்டப்படுவது தற்காலிகமானது என்று உறுதியளித்தனர். குப்பைகளைக் கொட்டி தினமும் அதை எரிப்பதால், புகை மூட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகமே இப்படிச் செய்தால் நாங்கள் என்ன செய்வோம்" என்றனர். 

  ஷேக்முகமதுஅலிசில வாரங்களுக்கு முன்பு புழல் ஏரிப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், புழல் ஏரிப்பகுதியில் குப்பை கொட்டுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் எஸ்.ஏ.ஷேக்முகமதுஅலி கூறுகையில், "செங்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட வண்டிமேடு, நாராவாரிக்குப்பம், காமராஜர் நகர், செங்குன்றம் பஸ்நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், புழல் ஏரியையொட்டியுள்ள இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல குவிந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் தீ வைத்து எரிப்பதால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கண் எரிச்சல், காசநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். புழல் ஏரியில் தினமும் நடைப்பயிற்சியை மக்கள் மேற்கொள்வர். தற்போது, புகை மூட்டத்தால் நடைப்பயிற்சி மேற்கொள்வதை மக்கள் நிறுத்திவிட்டனர். செங்குன்றம் பேரூராட்சியைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றார். இதுகுறித்து செங்குன்றம் பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். "புழல் ஏரி பகுதியில் குப்பை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்குன்றத்திலிருந்து ஆவடி செல்லும் சாலையில் உள்ள 3 ஏக்கர் இடத்தில் குப்பை கொட்ட முயற்சிகள் நடந்துவருகின்றன. இதன்பிறகு புழல் ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது"என்றார். 

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close