Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரனை சிக்க வைத்தது யார்?! - சுகேஷ் சந்தர் சிக்கிய பின்னணி #VikatanExclusive

தினகரன்

ரட்டை இலைச் சின்னத்தைக் காப்பாற்ற ஐம்பது லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் நடவடிக்கையை எதிர்கொள்ள இருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'தேர்தல் ஆணையத்தைச் சரிக்கட்ட என்னென்ன வழிகளில் தினகரன் தரப்பினர் இறங்குவார்கள் என்பதை அறிந்து வலைவிரித்தது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாகத்தான் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் புகாரின்பேரில் தினகரன் கைது செய்யப்படவும் வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

 

 

 

‘அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது’ என அறிவிக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் சசிகலா புஷ்பா எம்.பி. இதே புகாரை பன்னீர்செல்வம் ஆதரவு அணியின் மைத்ரேயன் எம்.பியும் கொடுத்தார். இதன்மீதான சுகேஷ் சந்தர்விசாரணைகள் வேகம் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைத்தது தேர்தல் ஆணையம். இதனையடுத்து, ‘உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான்' என நிரூபிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கும் வேலைகளில் அமைச்சர்களைக் களமிறக்கினார் தினகரன். இதுதொடர்பாக, இன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்க இருந்த சூழலில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார் டி.டி.வி.  “பன்னீர்செல்வம் தனி அணியாகக் கிளம்பிய நேரத்தில், தேர்தல் ஆணையத்தை சமாதானப்படுத்தும் வேலைகளில் கார்டனில் உள்ளவர்கள் இறங்கினர். ‘டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என சசிகலா தரப்புக்கு நம்பிக்கை அளித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆனால், அவரால் சிறிதளவுகூட காய் நகர்த்த முடியவில்லை. காரணம். பிரதமர் அலுவலகம் அ.தி.மு.க மீதான கண்காணிப்பை பலப்படுத்தியதுதான்" என விவரித்த பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் ஒருவர், 

"கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்ட நாளில், சசிகலா அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தார் அப்போது பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த பாண்டியராஜன். அந்த நேரத்தில் டெல்லியில் நடந்த அரசு தொடர்பான சில கூட்டங்களுக்கும் அவர் சென்றுவந்தார். டெல்லி தொடர்புகளை அவர் எளிதாகக் கையாண்டதால், அவரை நம்பி சில பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தனர் சசிகலா தரப்பினர். அப்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தகவல்களையும் அறிந்து வைத்திருந்தார் பாண்டியராஜன். 'தேர்தல் ஆணையத்தை சரிக்கட்டிவிட்டோம். நமக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. நமக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும்' என சசிகலா நம்பும் அளவுக்குக் காரியங்களும் வேகம் எடுத்தன. இந்தநேரத்தில், பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார் பாண்டியராஜன். இதுவே, தினகரன் ஆட்களுக்குக் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. 'டெல்லியில் யார் மூலம் காரியம் சாதிக்கிறார்கள்? என்னென்ன வேலைகளைத் தினகரன் தொடங்கியிருக்கிறார் என பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான புள்ளிகளிடம் விரிவாக எடுத்துக் கூறியது பன்னீர்செல்வம் அணி. இதையடுத்து, இடைத்தரகர்களைக் கண்காணிக்கத் தொடங்கியது மத்திய உளவுப்பிரிவு.

இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரன் தரப்பில் இருந்து பேசப்பட்ட பெரும் தொகை சம்பந்தமான விவரங்களையும் கையில் எடுத்தது பி.எம்.ஓ அலுவலகம். பத்து நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்திருக்க முடியும். தேர்தல் ஆணையத்தில் சசிகலாவிசாரணை நடக்கும் நாளில் வெளிவந்தால், தினகரன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்க முடியும் என்பதால்தான், இன்று காலை இந்த விவகாரம் வெளியில் வந்தது. சுகேஷ் சந்தர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது கிரிமினல் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால், தினகரன் கைதாவதற்கான வாய்ப்புகளும் அதிகம்" என்றார் விரிவாக. 

"அ.தி.மு.கவில் நடக்கும் உள்கட்சி குழப்பங்களை டெல்லியில் உள்ள தரகர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். 'இந்த நேரத்தில் நாம் உதவி செய்தால், எதிர்பார்க்காத அளவுக்குப் பணம் வரும்' என்ற நம்பிக்கையில், பல குழுக்கள் செயல்பட்டு வந்தன. இந்தக் குழுக்களில் மிக முக்கியமானவர் சுகேஷ் சந்தர். நீண்டகாலமாக இந்தப் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கட்சி அங்கீகாரம் தொடர்பான விஷயங்களுக்கு இவரைத்தான் பயன்படுத்தி வந்தனர். 'தினகரனின் முக்கிய சோர்ஸ் சுகேஷ்தான்' என்பதை அறிந்த பின்னர், அவரது தொலைபேசி தொடர்புகளையும் அ.தி.மு.கவின் டெல்லி பிரதிநிதிகளையும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தினகரன் மீண்டு வருவது கடினம்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், "எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சி அதிகாரத்தையும் பன்னீர்செல்வம் கையில் கட்சி அதிகாரத்தையும் ஒப்படைப்பதற்கான வேலைகள் தீவிரமாகி வருகின்றன. இந்தப் பணிகளுக்கு இடையூறாக இருப்பது தினகரன் மட்டும்தான். சொத்துக் குவிப்பு வழக்கோடு சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது தினகரனைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். அவரும் சிறைக்குச் சென்றுவிட்டால், இணைப்பு விழா இனிதே நடக்கும் என்பதுதான் மொத்தக் கதையின் சுருக்கம்" என்றார் நிதானமாக. 

இதுகுறித்து இன்று விளக்கமளித்த டி.டி.வி.தினகரன்,  "இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவிலலை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. குற்றச்சாட்டின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தெரியவில்லை. கட்சியை அழிப்பதற்காக இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. கட்சியை அழிக்கும் நோக்கத்துடன் யாரோ திட்டம் போடுகிறார்கள். டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்க தயாராகவே இருக்கிறேன்" என்றார் கொந்தளிப்போடு. 

 தினகரன் மீதான குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜனிடம் பேசினோம். " இந்த ரெய்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த விவகாரத்தில் என் பெயர் வெளியாவதை நான் விரும்பவில்லை. இதுகுறித்து மீடியாக்களை சந்தித்துப் பேச இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரிடமே இதுகுறித்து கேளுங்கள்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

-ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close