Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பி.எஸ் வீட்டில் 10 மணிக்கு கூட்டம்... தினகரன் தலைமையில் 3 மணிக்கு கூட்டம்... குழப்பத்தில் எம்.எல்.ஏ.க்கள்!

அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கமணி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில், இரண்டு நாள்களுக்கு முன்னர் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், 'கட்சியை ஒற்றுமையாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தினோம். ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து இணைந்து செயல்படலாம் என்று கூறிய கருத்தை வரவேற்கிறோம்' என்றனர்.

இதையடுத்து, தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று கூறினார்.

இதனிடையே, சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு சென்ற டி.டி.வி.தினகரன் சென்னை திரும்பினார். தினகரன், அடையாறில் இருக்கும் அவரது வீட்டில், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ஆறு எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

தினகரன் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் பயப்படுகிறார்கள். அனைத்து உண்மைகளையும் சீக்கிரம் வெளிப்படுத்துவேன். நாளை, தினகரன் தலைமையில் ராயப்பேட்டையில் இருக்கும் கட்சித் தலைமையகத்தில் 3 மணி அளவில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.' என்று கூறினார். 

தற்போது, அ.தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்கள், சசிகலா குடும்பத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், டி.டி.வி.தினகரன் அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்துக்கு அவர்கள் செல்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அதே நேரத்தில், தினகரனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள எம்எல்ஏ-க்கள், நாளை காலை 10 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close