Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாதொருபாகன் ஆங்கிலப் பதிப்புக்கு சாகித்ய அகாடமி விருது #OnePartWoman

தமிழில் மாதொருபாகன் அளவுக்கு எதிர்ப்பை எதிர்கொண்ட நாவல் வேறெதுவும் இல்லை.  அந்நாவலின் ஆசிரியர் பெருமாள் முருகன் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். படைப்பாளிகள் இருவேறு பிரிவாக பிரிந்து நின்றார்கள். "எனக்குள் இருந்த எழுத்தாளன் இறந்து விட்டான்... இனி நான் எழுதப்போவதில்லை" என்று அறிவிக்கும் அளவுக்கு அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். 

2010-ம் ஆண்டில் வெளியான மாதொருபாகன் நாவல், திருச்செங்கோடு வட்டார வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளை களமாகக் கொண்டு எழுதப்பட்டது. அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா பற்றிய தகவல்களும் அந்நாவலில் இடம் பெற்றிருந்தன.  2013-ம் ஆண்டு அனிருத்தன் வாசுதேவன் என்பவர், 'ஒன் பார்ட் வுமன்' என்ற பெயரில் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதன்பிறகு தான் பிரச்னை ஆரம்பமானது.

 

மாதொருபாகன் நாவல்


இந்த நாவல், திருச்செங்கோட்டில் வாழும் குறிப்பிட்ட சமூகப் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்தத் தொடங்கின. சில நாட்களில் போராட்டம் பெரு வடிவம் எடுத்தது.  அந்த நாவலை தடை செய்யக் கோரி திருச்செங்கோட்டில் கடை அடைப்பே நடத்தப்பட்டது. 

நாமக்கல் கலை அறிவியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றிய பெருமாள் முருகனுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்தது. இன்னொரு பக்கம் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். இச்சூழலில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில்  நாவலைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெருமாள்முருகன், நாலலைத் திரும்பப் பெறுவதாகவும் இனிமேல் தான் எழுதப்போவதே இல்லை என்றும் அறிவித்தார். அவரும், அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவரது மனைவியும் சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு மாற்றல் பெற்றார்கள்.

பெருமாள்முருகன்


கருத்துரிமை குறித்த பெரும் விவாதத்தை தேசமெங்கும் கிளப்பியது இந்த விவகாரம். மாதொரு பாகன் நாவலுக்கு தடைவிதிக்கக்கோரி திருச்செங்கோடு மக்கள் மன்றம் என்ற அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வருவாய் அதிகாரி தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்செல்வமும் உயர்நீதிமன்றத்தை நாடினார். 

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், வருவாய் அலுவலர் தலைமையினான கூட்ட முடிவுகளை ரத்து செய்வதோடு, மாதொருபாகன் நூலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது. 

இலக்கியத் தளத்தைத் தாண்டி கருத்துரிமை பற்றிய கவனத்தையும், படைப்பாளிகளின் பொறுப்புணர்வு பற்றிய விவாதத்தையும் அழுத்தமாக எழுப்பியது இந்த நாவல். ஒரு தரப்பு எழுத்தாளர்கள், படைப்பாளிக்கு பொறுப்பு வேண்டும் என்றார்கள். பெரும்பாலானோர், பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்றார்கள். 

இச்சூழலில் மாதொருபாகன் நாவல் விருதுகளை குவித்து வருகிறது. இந்திய அளவில் சிறந்த நூலுக்கு வழங்கப்படும் ‘சமன்வாய் பாஷா சம்மன்’ விருது அந்நாவலுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்நாவலின் ஆங்கில வடிவமான 'ஒன் பார்ட் வுமன்' (One Part Woman) புத்தகத்துக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அண்மையில் `விகடன் தடம்' இதழுக்கு அளித்த விரிவான பேட்டியில் மாதொருபாகன் தொடர்பாகவும் பதில் அளித்திருக்கிறார் பெருமாள்முருகன். 

“ ‘மாதொருபாகன்’ பிரச்னையின்போது வீடு எந்தளவுக்கு உங்களுக்கு ஆறுதலாக இருந்தது?”

“என் குடும்பம் என்னை முழுமையாகப் பாதுகாக்க முற்பட்டது. உடன் நின்றது. என்னைவிட மிகத் துணிச்சலாக என் மனைவிதான் அனைத்தையும் எதிர்கொண்டார். நான் என் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்றே பெரிதும் கவலைப்பட்டேன்.”

“எதிர்காலத்தில் ஒருவேளை அதிகமான  வரலாற்றுப் புனைவுகள் எழுதப்படும்பட்சத்தில்  ‘மாதொருபாகன்’ நூலுக்காக நீங்கள் சந்தித்த அதே பிரச்னைகளை அந்த எழுத்தாளர்களும் சந்திக்க வேண்டியது வருமல்லவா? அப்படியான அரசியல் சூழல்தானே இங்கே உள்ளது...?”

“ஆமாம். சூழல் அப்படித்தான் இருக்கிறது. எல்லா எழுத்தாளர்களும் அதை உணர்ந்தே இருக்கிறார்கள். ஆகவே, வரலாற்றுப் புனைவுகளை எழுதும்போது கூடுதல் கவனத்துடன் சாதிய அடையாளங்களை, இட அடையாளங்களைத் தவிர்த்து எழுதுவது, வடிவங்களில், குறியீட்டு பாணி சொல்முறையில் எழுதுவது எனப் புதிய மாற்றங்களைச் செய்து முயற்சிக்க வேண்டும்.” 

 

மாதொருபாகன்

 

“ ‘மாதொருபாகன்’ என்கிற பெயர் உங்களின் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியமான ஒன்றாக மாறும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?” 

“(பெரிதாகச் சிரிக்கிறார்) அப்படி நினைத்துப் பார்த்ததே இல்லை. அந்தப் பெயரின் மூலம் இவ்வளவு பெரிய அடையாளம் உருவாகும் என்று ஒரு சதவிகிதம்கூட கற்பனை செய்தது இல்லை.”

“ ‘மாதொருபாகன்’ பிரச்னையில் இருந்து வெளியே வந்து, பழைய பெருமாள் முருகனாக இயல்பாகிவிட்டீர்களா?”

“பழைய பெருமாள் முருகனாக மாற இனி வாய்ப்பே இல்லை. ஒரு நாவலை எழுதுவதற்கு முன்பிருக்கும் பெருமாள் முருகன், எழுதி முடித்த பின்பு இருப்பது இல்லை. அவன் முற்றிலும் மாற்றமடைந்திருப்பான். அதுபோலத்தான், இந்த பிரச்னைக்குப் பிறகான நான், பழைய பெருமாள் முருகன் இல்லை.”

“இந்தப் பிரச்னையினால் நிகழ்ந்த நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களாக நீங்கள்  கருதுவது எது?”

“எழுத்தாளர்கள் எனக்கு ஆதரவாக நின்றது, போராடியது மிக முக்கியமான விஷயம். காலச்சுவடு கண்ணன், ஆ. இரா. வேங்கடாசலபதி, ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஆதரவு மிக முக்கியமான பலமாக இருந்தது. ஒரு பக்கம் அமைப்பு சார்ந்து த.மு.எ.க.ச. பல கண்டனக் கூட்டங்களை நடத்தியது. அமைப்பு சாராமல் கோணங்கி, லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் இருநூறுக்கும் மேலான எழுத்தாளர்கள் ஒன்றுகூடிப் போராடினார்கள். இவற்றையெல்லாம் முக்கியமான நேர்மறை அம்சங்களாகப் பார்க்கிறேன். அதேசமயம், இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்துப் போராட முன்வந்த பலரை ஒன்றிணைக்க, ஒன்றிணைத்துப் போராட நம்மிடம் வலுவான அமைப்புகள் இல்லாமல் இருந்தது என்பதை எதிர்மறை அம்சமாகப் பார்க்கிறேன்.”

-வெ.நீலகண்டன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close