Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுகிறாரா விஜயபாஸ்கர்? - ஆளுநரை சந்தித்த பின்னணி 

ஆளுநர் வித்யாசாகர் ராவ்  தம்பிதுரை எம்பி, அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்களுக்கு விரைவில் 'கல்தா' கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தம்பிதுரை எம்பி., அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநரை சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் சூழ்நிலை, ஒவ்வொரு நாளும் கோடைவெயிலைவிட அதிக உஷ்ணமாகிவருகிறது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அ.தி.மு.க-வில் ஒவ்வொரு நிகழ்வும் நடந்துவருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வில் உள்ள அணிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தமிழக அரசியலைப் பரபரப்பாக்கிவருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்-வை தம்பிதுரை எம்பி-யும் அமைச்சர் ஜெயக்குமாரும் இன்று சந்தித்துப் பேசினர். பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருவரும் ஆலோசனை நடத்தினர். இன்றைய சூழ்நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், "அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டவுடன், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்தச் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவுசெய்தது எங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. தமிழ்ப் புத்தாண்டில் டி.டி.வி. தினகரனைச் சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக ஆலோசித்தனர். அப்போது, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள், விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க சம்மதிக்கவில்லை. அவருக்கு ஆதரவாகவே பேசினர். இது, அமைச்சர்களுக்கும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்குமிடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகே, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கொண்ட குழு, பிளவுபட்ட அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொண்டது. இதற்கு, டி.டி.வி.தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மெஜாரிட்டியான அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தனர். இதையடுத்து, அதுதொடர்பான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஒரு கட்டத்துக்கு மேல், டி.டி.வி.தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டி.டி.வி.தினகரனே, கட்சியிலிருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனிடம் முடிவை மாற்ற அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இது தொடர்பாக, ஆலோசனை தொடர்ந்து நடந்துவருகிறது. இதற்கிடையில், சீனியர் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, தம்பிதுரை எம்பி-யும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்-வை சந்தித்துப் பேசியுள்ளனர்" என்றார். 

தம்பிதுரை எம்பி, அமைச்சர் ஜெயக்குமார்

 

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த தம்பிதுரை எம்பி, 'மரியாதை நிமித்தமாகவும் நட்பு ரீதியாகவும் ஆளுநரைச் சந்தித்ததாகவும், அரசியல் பேசவில்லை' என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை" என்றார்.

ஆளுநர் திடீர் சந்திப்பு குறித்து கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில், "வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்க ஆலோசனை நடந்துவருகிறது. கூவத்தூர் ரிசார்ட்டில் அனைத்தையும் கவனித்தவர்களில் ஒருவர் விஜயபாஸ்கர். அவர், கூவத்தூரில் கட்சியினரை நடத்தியவிதம் சிலரை அதிருப்தியடைய வைத்தது. ஆனால், அப்போது அவரது கை ஓங்கியிருந்ததால் அவருக்கு எதிராக எதுவும் பேசமுடியவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்கூட கட்சியில் உள்ள சிலரால்தான் டி.டி.வி.தினகரனுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

விஜயபாஸ்கர்

டெல்லியில் உள்ள எப்.ஐ.ஆர். விவகாரத்தில்கூட டி.டி.வி.தினகரனைச் சிக்க வைத்தவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர்தான். ஏனெனில் டி.டி.வி.தினகரனுக்கு தவறான ஆலோசனைகளைச் சொல்லி அவருக்குச் சிக்கலை ஏற்படுத்திவிட்டனர். இந்தச்சூழ்நிலையில் தன்மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்திவருகிறார். மேலும், சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களது தீவிர ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஓரங்கட்ட முயற்சி நடக்கிறது. குறிப்பாக மூன்று அமைச்சர்களை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது" என்றனர். 

இந்தச் சூழ்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அடுத்து, பேரவைச் செயலாளர் ஜமாலுதீனைச் சந்தித்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், நீட் தேர்வு, அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வர், சட்ட பேரவைச் செயலாளர் ஜமாலுதீனைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். 

- நமது நிருபர் 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close