Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வி.வி.மினரல்ஸ் உரிமத்துக்கு உலை வைத்த ஆவணம்! - தாதுமணல் கொள்ளையின் ஃபைனல் எபிஸோட் #VikatanExclusive

வைகுண்டராஜன்

தென்மண்டலக் கடற்கரையை மையமாக வைத்து இயங்கி வந்த வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தும் அளவுக்கு ஆதாரத்தைத் திரட்டியிருக்கிறார் நெல்லை மாவட்ட கலெக்டர். 'வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் குத்தகை உரிமத்தை ரத்து செய்யுமாறு தொழில்துறைச் செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்பேரில், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு நிரந்தரப் பூட்டு போடும் வேலைகள் தொடங்கிவிட்டன' என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள். 

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் இயங்கிவரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், தாதுமணல் வர்த்தகத்தை மையமாக வைத்து ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்துவருகிறது. 25 ஆண்டுகளாக இயங்கி வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் சோதனைகளைச் சந்தித்துவருகிறது." தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு அனுப்பப்பட இருந்த 420 டன் கார்னட் ஏற்றுமதிக்காக தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் பெயரில் போலியான ஆவணங்கள் தயாரித்த புகாரின்பேரில், வைகுண்டராஜனின் குடோன்களை சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். இந்த ரெய்டில், குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தாதுமணலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, வைகுண்டராஜனின் நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் எடுத்த மொத்த தாதுக்களின் அளவு குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்தார் நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன். அதிலும், தாதுமணல் வர்த்தகத்துக்கு அரசு தடைவிதித்த பிறகும், கடற்கரையில் எடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான தாதுக்களின் அளவையும் மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தார். இதன்பின்னர், அரசின் அனுமதியில்லாமல் தாதுமணல் பிரித்தெடுக்கும் பிளாண்டுகளை நடத்துவதாகக் கூறி, வி.வி.மினரல்ஸ் உள்பட இரண்டு தாதுமணல் நிறுவனங்களின் மொத்தச் செயல்பாட்டையும் முடக்கி வைத்தார் நெல்லை கலெக்டர் கருணாகரன். தொடர்ச்சியான இந்த நடவடிக்கைளின் இறுதிக்கட்டமாக, வி.வி.மினரல்ஸ் உள்பட இரண்டு நிறுவனங்களின் குத்தகை உரிமத்தை ரத்து செய்யுமாறு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது வி.வி.மினரல்ஸின் கனிமவள கொள்ளைக்குப் போடப்பட்ட முக்கியக் கடிவாளம்" என விவரித்த நெல்லை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசினார், 

வி.வி.மினரல்ஸ்

“தாதுமணல் வர்த்தகத்தைத் தனியார் ஏற்று நடத்துவதால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அரசின் சட்டங்களை மீறித்தான் இவர்கள் செயல்படுகின்றனர். தாதுமணல் சுத்திகரிப்பு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருந்தன. இதுகுறித்து ராதாபுரம் மற்றும் வள்ளியூர் பி.டி.ஓ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த அறிக்கையில், ‘இருக்கான்துறை மற்றும் லெவிஞ்சிபுரம் கிராமத்தில் இரண்டு தாதுமணல் பிரித்தெடுக்கும் பிளாண்டுகளை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறது. அதேபோல், ராதாபுரத்தில் உள்ள வல்லான்வில்லை கிராமத்தில் தாதுமணல் பிரித்தெடுக்கும் பிளாண்டையும்  நடத்திவந்தனர். இதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் எந்த அனுமதியையும் இவர்கள் பெறவில்லை. இதுதொடர்பான வைகுண்டராஜனின் விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால், இந்த இயந்திரங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்தார் கலெக்டர் கருணாகரன். இதனால் கொந்தளித்துப்போன வி.வி.மினரல்ஸ் நிர்வாகிகள், 'கலெக்டர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரை மாற்றாமல் ஓய மாட்டோம்' எனப் பேசிவந்தனர். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாதுமணல் விதிமீறல்களைப் பற்றி, தொழில்துறைச் செயலர் அதுல்ய மிஸ்ராவுக்குக் கடந்த வாரம் விரிவான கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், 

வி.வி.மினரல்ஸ்

'வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு 27 குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்வேர்ல்டு நிறுவனத்துக்கு 14 உரிமங்களும் பி.எம்.சி நிறுவனத்துக்கு 9 உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த உரிமத்தின் மூலம் அளவுக்கு அதிகமான தாதுமணலைக் கடற்கரையில் இருந்து எடுத்துள்ளனர். 2000-ம் ஆண்டு முதல் 2017 மார்ச் வரையில் இலுமனைட், ரூடைல், ஜிர்கான், சிலிமனைட், கார்னட் உள்ளிட்ட தாதுக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு ராயல்டி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் 14 லட்சத்து 4 ஆயிரத்து 692 மெட்ரிக் டன் தாது மணலை, அனுமதிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக எடுத்துள்ளனர். இதில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 31 மெட்ரிக் டன் கார்னட், 5 லட்சத்து 97 ஆயிரத்து 539 மெட்ரிக் டன் இலுமனைட், 62 ஆயிரத்து 78 மெட்ரிக் டன் ரூடைல், 41 ஆயிரத்து 756 மெட்ரிக் டன் ஜிர்கான், 40 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் சிலிமனைட் ஆகியவை கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளன. 2014 மற்றும் 2015-ம் ஆண்டு தாதுமணல் வர்த்தகத்துக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகும் 4 லட்சத்து 41 ஆயிரத்து 447 மெட்ரிக் டன் தாதுமணலை வி.வி.நிறுவனம் தோண்டி எடுத்துள்ளது. இதேபோல், 2015-16-ம் ஆண்டில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 501 மெட்ரிக் டன் தாது மணல் எடுக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 948 மெட்ரிக் டன் தாதுமணல் எடுக்கப்பட்டிருக்கிறது. 2016 முதல் 2017 மார்ச் வரையில் 86 ஆயிரத்து 587 மெட்ரிக் டன் தாதுமணல் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருக்கிறார். கலெக்டர் அறிக்கையின்பேரில், தொழில்துறைச் செயலரின் நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறோம்" என விவரித்தவர், 

வி.வி.மினரல்ஸ்

"தமிழக அரசு வி.வி.மினரல்ஸின் உரிமத்தை இதுவரையில் ரத்து செய்யவில்லை. 'கார்னட் மணலை எடுக்கக் கூடாது' என உத்தரவிட்டு, தாதுமணல் விவகாரத்தை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்தது. 'மறு உத்தரவு வரும் வரையில் எந்தப் பணியையும் செய்யக் கூடாது' எனவும் அரசு உத்தரவிட்டது. ககன்தீப் சிங் பேடியின் ஆய்வு அறிக்கையும் தயாராகிவிட்டது. இந்த அறிக்கைக்குப் பதில் அளித்த வைகுண்டராஜன் தரப்பினர், 'எங்களுக்கும் ககன்தீப் சிங் பேடிக்கும் இடையில் மோதல் இருக்கிறது. இந்த அறிக்கை உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது' என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தாதுமணலில் நடக்கும் அத்தனை விவரங்களையும் அதிகாரிகளின் கருணாகரன்துணையோடு சேகரித்தார் கருணாகரன். நெல்லை மாவட்டத்தில் மட்டும் மாதம் 200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கின்றனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைக் கணக்கிட்டால், அவர்களுக்கு வந்து சேரும் லாபத்தை அளவிட முடியாது. இதுநாள் வரையில் அரசு நிர்வாகத்தைக் கைக்குள் போட்டுக் கொண்டு செயல்பட்டு வந்தார்கள். இனி அப்படிப்பட்ட சூழல்கள் வருவதற்கான வாய்ப்பு இல்லை" என்றார் விரிவாக. 

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் பேசினோம். "அரசு வழங்கிய உரிமத்தை வைத்துக்கொண்டு, அளவுக்கு அதிகமான தாதுமணலை வி.வி.மினரல்ஸ் உள்பட இரண்டு நிறுவனங்கள் எடுத்துள்ளன. தடை செய்யப்பட்ட பிறகும், சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். அவர்களுடைய பல்வேறுவிதமான முறைகேடுகள் குறித்த ஆதாரங்களைத் தொகுத்து, அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம்" என்றதோடு முடித்துக்கொண்டார். 

வி.வி.மினரல்ஸ் சார்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஒருவர், "தொடக்கத்தில் இருந்தே இந்த விவகாரத்தை உள்நோக்கத்தோடு கையாண்டு வருகிறார் கருணாகரன். உள்ளாட்சிகளின் அனுமதியோடுதான் திசையன்விளையில் கட்டடம் கட்டினோம். அதிலும், 'காற்று இல்லை; கார் பார்க்கிங் இல்லை' என நோட்டீஸ் அனுப்பினார். எங்கள் கட்டடத்தை சீல் வைக்கும் வேலைகளில் இறங்கினார். 'பிளாண்டுகளுக்கு உரிமம் இல்லை' என நோட்டீஸ் அனுப்பினார். இதுகுறித்து விரிவான விளக்கத்தைத் தெரியப்படுத்திவிட்டோம். அதையும் மீறி எங்கள் தொழிலை பாதிக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகள் அமைந்துள்ளன. 'மாவட்ட நிர்வாகத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது' என்பதால், சட்டரீதியாகவே போராடி வருகிறோம். எங்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லை" என்றார். 

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close