Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“இரட்டை இலைச் சின்னத்தை மீட்பேன்!" மாதவன் தீபாவின் சபதம்

மாதவன்

"தீபா ஆரம்பித்திருப்பது சாதாரண பேரவை, ஆனால் நான் தொடங்கியிருப்பது மிகப்பெரிய கட்சி. தமிழகத்தில் எங்கள் கட்சி விரைவில் ஆட்சியைப் பிடிக்கும்" என்று தன் மனைவிக்கு சவால்விடும் தொனியில் பேசியிருக்கிறார் இன்று (21-04-2017) புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் தீபாவின் கணவர் மாதவன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்தவர் அவரின் அண்ணன் மகள் தீபா. அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர், "தீபா பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போல இருக்கிறார். ஜெயலலிதாவின் பேச்சைப் போன்றே தீபாவின் பேச்சும் உள்ளது" என்று தெரிவித்து, சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அன்று 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் அரசியல் அமைப்பைத் தொடங்கினார் தீபா. தனது பேரவை சம்பந்தமான எந்த முடிவையும் கணவர் மாதவனுடன் கலந்து ஆலோசிக்காமல், தன்னைச் சுற்றியிருக்கும் சிலரின் பேச்சைக் கேட்டு தீபா எடுத்து வந்ததாக புகார் எழுந்தது. தீபாவின் இந்த செயல் அவரின் கணவர் மாதவனுக்குப் பிடிக்காமல் போகவே, கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தனிக்கட்சித் தொடங்கப் போவதாக மாதவன் ஏற்கெனவே அறிவித்தார். தீபாவின் வீட்டில் இருந்து வெளியேறி தனியாகச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தனது புதிய கட்சியின் பெயர், கொடியை சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இன்று காலை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்ற மாதவன், புதிய கட்சியின் பெயர், கட்சியின் கொடி ஆகியவை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தனது கட்சியின் பெயர் 'எம்.ஜி.ஆர். ஜெ.ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று அவர் தெரிவித்தார். தனது கட்சியின் கொடியையும் அப்போது அறிமுகப்படுத்தினார். பின்னர் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மாதவன். "தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இப்போது உள்ள அரசியல்வாதிகள் யாரும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. அதனால் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் கட்சியின் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பாடுபடுவேன். பெண்களுக்கு 100 சதவிகித பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்வேன். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கப் பாடுபடுவேன். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன். முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்" என்றார்.

"தீபா அவரது பெயரில் ஏற்கெனவே அரசியல் அமைப்பைத்  தொடங்கி, தனியாகச் செயல்பட்டு வருகிறாரே?" என செய்தியாளர்கள் கேட்டபோது, "தீபா ஆரம்பித்திருப்பது பேரவைதான். ஆனால், நான் தொடங்கியிருப்பது, அரசியல் கட்சி. பேரவைக்கும், கட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.

தீபா, மாதவன்

தமிழகத்தில் எதற்கு பஞ்சம் இருக்கிறதோ? இல்லையோ? அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் ஒருபோதும் பஞ்சம் இருக்காது. என்பதை நிரூபிக்கும் வகையில் புதிது புதிதாய் கட்சிகள் உருவெடுத்து வருகின்றன. தீபாவின் கணவர் என்ற ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, அரசியலில் குதித்துள்ளார் மாதவன். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்படும் வரை, தீபா என்ற ஒருவரை தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. அதேபோல் தீபாவின் கணவர் என்ற முறையில் மாதவன் என்னும் நபரை தமிழக மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அறிவார்கள். நூற்றுக்கும் குறைவான தொண்டர்களை வைத்துக் கொண்டு, தீபா ஒருபுறம் பேரவை என்ற பெயரில் இயக்கம் தொடங்கி ஆர்.கே.நகர் தேர்தலிலேயே வேட்பாளராக நின்றார். தற்போது, அவரின் கணவர் மாதவனோ, எத்தனை பேர் தன் பின்னால் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாமலேயே புதிய கட்சி என்ற பெயரில் ஒன்றைத் தொடங்கி உள்ளார். ஆளாளுக்கு அரசியல் கட்சி தொடங்குவதைப் பார்க்கும்போது, 'தடி எடுத்தவன்லாம் தண்டல்காரர்' என்ற பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது.

இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்!

-ஜெ.அன்பரசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close